292. ஒளவையார் நாடகத்துக்குவாழ்த்து (கீழ்வரும் பாடல் 1943ஆம் ஆண்டு இறுதியில் நாடகக் கலைஞர்கள் டி.கே.எஸ். சகோதரர்களின் ‘ஒளவையார்‘ நாடக நூலுக்கு அளித்த மதிப்புரை) கல்வி நிறைந்தும் கலைகளில் சிறந்தும் உலகுக்கு எல்லாம் ஞானம் ஊட்டிய முத்தமிழ் வளர்த்த இத்திரு நாட்டில் நாடகக் கலைமிக நலிவுற்றது என்ன ஊக்கமூட் டாத உரைகளைப் பேசி, 5 உணர்ச்சி கூட்டாத ஓசைகள் பாடி, நயமில் லாத நடிப்புகள் செய்து, கொச்சை மிகுந்த நாட்கள் கூட்டி, கண்ணைக் கரித்தும் கருத்திற் பதியா நிகழ்ச்சிகள் பற்பல நிரம்பின தாக. 10 பொழுதும் பணமும் போனதைத் தவிர அறிவை வளர்க்க அனுகூல மின்றி உயிரில் லாமல் ஓடும் நிழலாய், "அரங்கின் பெருமை அழியுமோ!" என்று நல்லோர் ஏக்குறும் இந்த நாளிலும், 15 உண்மையும் ஒழுக்கமும் உறுதுணை யாக அறங்களைப் புகட்டலே அறமெனக் கொண்டு பழைய கதைகளின் பண்பு கெடாமல் புதியநல் ஒளிகளில் பொலிவுறப் பொருந்திக் கண்ணெனக் கலையின் கண்ணியம் காத்து 20 நல்ல முறையில் நாடகம் நடத்தும் அரிய ‘டி.கே.எஸ். அண்ணன் தம்பிகள்‘ அழகுற நடிக்கும் ‘ஒளவையார்‘ நாடகம் புத்தக ரூபமாய்ப் போந்தது கண்டு பெரிதும் மகிழ்ந்து பெரும்மிதம் கொண்டேன். 25 |