அடையாத துன்பங்கள் அவைவந்த போதும் அநியாயம் எண்ணாத தமிழ்நாடு வாழ்க! 4 299. தீண்டாமையை விலக்குவதற்குஎதிர்ப்பா! தீண்டாமை போவ(து) என்றால் தின்பதும் உண்ப(து)அல்ல தீண்டாமை தீர்வ(து) என்றால் தீண்டியே ஆவ(து)அல்ல தீண்டாமை விலக்க(ல்) என்றால் திருமணம்புரிவ(து) அல்ல தீண்டாத(து) என்றோர் சாதி இல்லையெனத் தெளிவதேயாம். 1 தாழ்ந்தவர் உயர்வ(து) என்றால்உயர்ந்தவர் தாழ்வ(து) அல்ல வீழ்ந்தவர் எழுவ(து) என்றால் நின்றவர்விழுவ(து) அல்ல ஆழ்ந்தவர் உயிர்ப்ப(து) என்றால் மற்றுளோர்ஆழ்வ(து) அல்ல வாழ்ந்திட வேண்டும் எல்லா மனிதரும் என்ப தேயாம். 2 அசுத்தர்கள் சுத்த மானால் மற்றவர்க்(கு)அசுத்தம் என்ன? பசுத்தவர் சோறு தின்றால் பட்டினி பிறருக்(கு)ஆமோ? கசிந்தவர் களிப்(பு) அடைந்தால் களித்தவர்அழுவ(து) ஏனோ? ஒசிந்தது இசைந்து விட்டால் நல்லது ஒடிந்துபோமோ? 3 300. இந்தியக் காங்கிரஸ் (காங்கிரஸ் பொன்விழாவின்போது பாடியது) இந்திய மக்களின் உரிமையைக் காப்பது இந்தியக் காங்கிரசே அந்தநம் காங்கிரஸ் ஐம்பது ஆண்டுகள் அடைந்தது இன்றோடே. 1 அன்னையின் விடுதலைக்(கு) ஐம்பது ஆண்டுகள் அசரா(து) உழைத்ததனால் பொன்முடி புனைந்(து)இனி புதுப்புது வழிகளில் பொலிந்திடும் காங்கிரசே. 2 |