புலவர் சிவ. கன்னியப்பன் 77

வந்தகடன் தீர்ப்பதற்கு வழியில் லாமல்
       வைராக்கியம் பூண்டவர்கள் வகையும் உண்டு
கந்தையற்றுத் தரித்திரத்தின் கவலை மாற்றக்
       காவியுடை அணிந்தவரைக் காண்ப துண்டு
வந்துதித்த நாள் முதலாய்ப் பரத்தை நாடும்
       வைராக்யம் ரமணரிஷி வாழ்வாய் நிற்கும்.       5

சக்திகளில் மிகச்சிறந்த சக்தி யாகும்
       துன்பங்கள் சகிப்பதையே சாதித் திட்டான்.
வித்தைகளில் மிகப்பெரிய வித்தை யாகும்
       விருப்புவெறுப் பில்லாத வேள்வி செய்தான்.
உத்திகளில் உச்சநிலை உள்ள தாகும்
       உள்ளத்தில் பொய்யாமை உடைய னானான்
சித்திகண்ட ரமணரைநாம் சிந்தித் திட்டால்
       சித்தசுத்தி பெற்றுமிகச் சிறந்து வாழ்வோம்.       6

41. அண்ணல் விவேகானந்தர்

ஆண்மை உருக்கொண்ட அந்தணன் - எங்கள்
அண்ணல் விவேகா னந்தனின்
மாண்பை அளந்திட எண்ணினால் - இந்த
மண்ணையும் விண்ணையும் பண்ணலாம்.       1

காமனைப் போன்ற அழகினான் - பொல்லாக்
காமத்தை வென்று பழகினான்;
சோமனைப் போலக் குளிர்ந்தவன் - ஞான
சூரியன் போலக் கிளர்ந்தவன்.       2

வீரத் துறவறம் நாட்டினான் - திண்ணை
வீணர்வே தாந்தத்தை ஓட்டினான்.
தீரச் செயல்களை நாடினான் - இந்தத்
தேச நிலைகண்டு வாடினான்.       3