புலவர் சிவ. கன்னியப்பன் 79

வெள்ளையர் பாதிரி மாரெல்லாம் கேட்டு
வெட்கித் தலைகுனிந் தார்களே!
தெள்ளிய ஞானத்தைப் போதித்தான் - அவர்
திடுக்கிட உண்மைகள் சாதித்தான்.       11

சத்திய வாழ்க்கையைப் பேசினான் - அருள்
சாந்தத் தவக்கனல் வீசினான்;
யுத்தக் கொடுமையைச் சிந்திப்போம் - அந்த
உத்தமன் சொன்னதை வந்திப்போம்.       12

குறிப்புரை:- வீணர் - பயனற்றவர்; வெட்கி - நாணி;பேடி - அலி.
(ஆணும் அல்லாதவன்பெண்ணும் அல்லாதவன் அலி)

42. இயேசு கிறிஸ்து

தூயஞான தேவன் தந்தை பரமன் விட்ட தூதனாய்த்
       துன்பம்மிக்க உலகினுக்கே அன்புமார்க்க போதனாய்
மாயமாக வந்துதித்த மறிகள்சேரும் பட்டியில்
       மானிடக் குழந்தையாக மேரிகண்ணில் பட்டவன்
ஆயனாக மனிதர்தம்மை அறிவுகாட்டி மேய்த்தவன்
       அன்புஎன்ற அமிர்தநீரின் அருவிகாண வாய்த்தவன்
நேயமாக மாந்தர்வாழ நெறிகொடுத்த ஐயனாம்
       நித்தமந்த ஏசுநாதன் பக்திசெய்தே உய்குவோம்.       1

நல்ல ஆயன்; மந்தைபோக நல்லபாதை காட்டினான்;
       நரிசிறுத்தை புலிகளான கோபதாபம் ஓட்டினான்;
கல்லடர்ந்து முள்நிறைந்து கால்நடக்க நொந்திடும்
       காடுமேடு யாவும்விட்டுக் கண்கவர்ச்சி தந்திடும்
புல்லடர்ந்து பசுமைமிக்க பூமிகாட்டி மேய்த்தவன்
       புத்திசொல்லி மெத்தமெத்தப் பொறுமையோடு காத்தவன்
கொல்லவந்த வேங்கை சிங்கம் கூசநின்ற சாந்தனாம்
       குணமலைக்குச் சிகரமான ஏசுதேவ வேந்தனே.       2