குழலினும் இனிய தான குழந்தையின் மழலைப் பேச்சும் குவிந்திடும் உதட்டிற் கூடக் கூத்திடும் சிரிப்பின் கூட்டும் தழலினும் தூய வாழ்வும் தாயினும் பெரிய அன்பும் சத்திய நிலையும் முன்னாள் தவமுனி இவனே என்னப் பழகிய பேயும் போற்றும் படித்தொரு வடிவம் தன்னைப் பாரிடை இனிமேல் வேறு யாரிடைப் பார்ப்போம் ஐயா! 5 குறிப்புரை:-தழல் - நெருப்பு; மழலைப்பேச்சு - பொருள் விளங்காத பேச்சு. 47. கவி தாகூர் கலைமகள் கண்ணீர் சோரக் கவிமகள் கலங்கி வீழத் தலைமகள் இறந்தா ளென்றே இந்தியத் தாய்த விக்க அடைகடற் கப்பா லுள்ள அறிஞர்கள் யாரும் ஏங்க மலைவிளக் கவிந்த தென்ன மறைந்தனன் கவிதா கூரே. 1 சந்திரன் கிரணத் தோடு சூரியன் ஒளிசேர்ந் தென்ன செந்தணல் நெருப்பில் நல்ல சிலுசிலுப் பிணைந்த தென்ன அந்தணர் அமைதி யோடே அரசரின் ஆண்மை கூட்டும் |