கள்ளமற்றுக் கலகலத்த பேச்சுக் கேட்டும்; கறுப்பெனினும் சிரிப்புமுகம் கருணை காட்டும்; குள்ளமென்னும் ஓர்உருவம் இருகை கூப்பிக் குண்டெடுத்துக் கடைந்ததெனக் கலங்க நிற்கும்; வெள்ளையன்றி வேறுநிறம் அறியா ஆடை வேதாந்த சித்தாந்த ஒளியே வீசும்; கொள்ளைகொள்ளை சிறையிருந்த குறிகள் தோன்றும் குலவுபிள்ளைச் சிதம்பரத்தை நினைவு கூர்ந்தால். 6 குறிப்புரை:-சித்தாந்தம் - சாத்திரத்தின் முடிந்த முடிவு; குலவு - கொண்டாடுகின்ற;கொள்ளை - மிகுதி, கூட்டம். 51. பாரதி ஓர் ஆசான் பெற்றெடுத்த தமிழ்த்தாயைப் பின்னால் தள்ளிப் பிறமொழிக்குச் சிறப்பளித்த பிழையே நீக்க உற்றடுத்தே அன்புரையால் உலுங்க வைத்திவ் வுலகத்தில் தமிழ்மொழிக்கு நிகரும் உண்டோ? ‘கற்றுணர்ந்தே அதன்இனிமை காண்பாய்‘ என்று கம்பனொடு வள்ளுவனைச் சுட்டிக் காட்டித் தெற்றெனநம் அகக்கண்ணைத் திறந்து விட்ட தெய்வகவி பாரதிஓர் ஆசான் திண்ணம்.1 அஞ்சியஞ்சி உடல்வளர்க்கும் ஆசை யாலே அடிமைமனம் கொண்டிருந்த அச்சம் போக்கி வெஞ்சமரில் வேல்பகைவர் வீசி னாலும் விழித்தகண்ணை இமைக்காத வீரன் போல நெஞ்சுறுதி உண்டாக்கும் கவிகள் பாடி நேர்மையுடன் சுதந்தரத்தை நினைக்கச் செய்து வி்ஞ்சைமிகும் மனப்புரட்சி விரவச் செய்த வித்தகனாம் பாரதிஓர் ஆசான் மெய்தான். 2 சாதிமதச் சழக்குகளைப் பற்றிக் கொண்டு சமுதாயம் சீரழியும் தன்மை போக்க |