இனி, இவ்வாறெல்லாம் தொன்மையும் மெல்லோசையும் மனவமைதிக்கு இசைந்த பொருத்தமும் பரப்பும் நுண்மையும் விரிக்கத்தக்க தன்மையும் பிறமொழிக்கலப்பின்றித் தனித்தியங்கும் பேராற்றலும் சிறந்து விளங்குந் தமிழ் மொழியினை ஒன்றும் வேண்டாதார் சிலர், உண்மை காணும் விழைவின்றித் தமிழில் யாதும் இல்லை என்று வாய் கூசாது மொழிவர், அவரைத் தெருட்டுதல் மிகவும் அரிது என்க. தமிழிற்கும் வடமொழிக்கும் பொதுவான எழுத்துக்கள் பல இருத்தலின் அவையான் ஆக்கப்பட்ட மொழிகளைக் கேட்ட துணையானே வடமொழி என்பர். எல்லாவற்றையும் ஆரியம் என்று இவர் இன்புறுவது எற்றுக்கு? இவர் போல் ஏனையரும் நியாயமின்றி்க் கூற முந்துவரேல் இவரது கொள்கை தலைசாய்க்கு மன்றோ. ஆகவே, ஒவ்வொருவரும் உண்மையினைப் பலதிறத்தானும் கூறுபடுத்து வைத்து ஆராய்ந்து கூறுதற்கு முயறல் வேண்டும். ஒரு சிலர் உண்மை கூறுவார் போன்று அவிநயித்துத் தமது கோட்பாடுகளையே சூழ்ச்சி வலியால் காட்டுவர். அஃது அறிஞர் கண்களுக்குப் பொள்ளெனத் தோன்றும் என்பதை அவர் உணர்வாராக. அல்லதூஉம் ஏனை நாடுகள் போலாது நந் தமிழ் நாட்டின்கண் மட்டும் மற்றொரு பெருங்குறை காணப்படுகின்றது. அஃது அந்தணர் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டும் அதனிற் புலவர்களாகப் பொலிந்தும் அது கொண்டு பிழைத்தும் பெருமையிற் சிறந்தும் அம்மொழிக்கட்பற்றின்றி இருத்தலாம். இக்குறை நீங்கின் நலம் பல பல்கும். தமிழ் முற்போந்து வளர்ச்சியடையும் மட்டில் தமிழ்நாடு தழையவே தழையாது என்பது முக்காலும் உண்மை. இனி, பிற்காலத்துச் சமய நூல்கள் வெளிப்பட்டு பற்றுமிக்குத் தமிழ்ச் சுவையினைப் பெரும் பான்மையும் குறைக்கத் தலைப்பட்டனவென்பது இழுக்காறு. பல்லாயிரம் செந்தமிழ்ச் சொற்கள் விடுபட்டன. வடசொற்கள் கலந்தன. தமிழ்ச் சொல் ஒருவன் கருதியதனை இடத்துக்கு இசைய உணர்த்துவதாயிருப்பவும் அதனை விடுத்து வடசொல்லைப் பெய்துரைப்போன் தமிழுக்குப் பெருந்தீங்கு இழைத்தவனாவான் என்பதைத் தமிழர் ஒவ்வொருவரும் உள்ளத்தமைப்பாராக. தமிழ் நூல்கள் பாட்டுத்துறையிலும், உரை வகையிலும், ஆராய்ச்சித் திறத்தினும் பலப் பலவாகப் பல்குதல் வேண்டும். பழந்தமிழ் நூல்கள் செவ்வையாக அச்சிடப்பட்டு எல்லோருக்கும் கிடைக்கத்தக்க வகைகளில் வைக்கப்படவேண்டும். தமிழர் இத்தகையமுயற்சிகள் செய்து தம் அருமருந்தன்ன மொழியினை வளர்த்து உலகின்புறக்கண்டு, தாமும் இன்புறுவாராக. இக்காலத்துத் தோன்றியுள்ள சில கிளர்ச்சிகளாலும் கருத்து நுட்பங்களாலும் தமிழ் முன்போல் பிறைமதிபோல் வளர்ந்து சிறக்கும் காலம் வந்து விட்டது என்று நினைத்துக் களிகூறுகின்றோம். தமிழர் பல பழைய நூல்களைச் செப்பஞ்செய்து அச்சிடுகின்றனர். பலர் பாட்டியல்பை விளக்கி நிற்கின்றனர். பலர் பலவகை ஆராய்ச்சியிற் புக்கனர். காலஞ்சென்ற புலவர் பெருமான் கார்த்திகேய முதலியார் அவர்கள் போன்ற சான்றோர்களால் ‘மொழி நூல்’ போன்ற தனியாராய்ச்சி நூல்கள் எழுவனவாயின. இத்தகைய காலத்துப் பதமமையக் காலை எழூஉங் கதிரவன் என்னத் தோன்றியது நம் நண்பர் தஞ்சை ராவ் சாகிப் ஆபிரகாம் பண்டிதர் அவர்கள் கருணாமிருத சாகரம் என்னும் விழுமிய நூல். இஃது ஒவ்வொரு தமிழர் உள்ளத்தையும் உயிர்ப்பிக்கும் அமிழ்த துளிகள் பல அடங்கப் பெற்றுள்ள பெரிய நூல் என்பதை ஒரு முறை நோக்குவோரும் தெள்ளத் தெளிய உணர்வர். நம் பண்டிதர் அவர்கள் பல ஆண்டுகளாகப் பெரிதும் முயன்று உழைத்ததன் பயனாக இச்சீரிய நூல் வெளிவந்துலவ நேர்ந்தது. செல்வமுடையாருள் பெரும்பான்மையோர் இக்காலத்துக் கல்வி என்னும் இன்பக் கடலுள் திளைத்தலைப் பெருங்குறையாக நினைக்கின்றனர். தமிழ் என்றால் கைப்பர்; புலவரென்றால் எள்ளுவர்; அங்ஙனமின்றி இவர்கள் தமிழ் மொழியின் கண் உண்மைப்பற்றுவைத்துழைத்துப் பல புலவர் தீட்டியுள்ள செழுந்தமிழ் நூல்களைத் துறைபோகக் கற்று நுணுக்கமாக ஆராய்ந்து செம்பொருளை உளங்கொள அமைத்துத் தமது நூலில் யாவரும் புலங்கொள விளங்க விரித்துள்ளார். தமிழின் தொன்மை குறித்து எழுதிய ஆங்கில நூலாசிரியன்மார் பலர் பொறித்த ஒண்பொருளை ஆங்காங்கு எடுத்துக்காட்டுகின்றனர். தமிழ்நாட்டைப் பற்றிய பல பொருள்கள் அதன்கண் பொதிந்துள்ளன.
|