பக்கம் எண் :

101

கடல்போல் பரந்து ஒளிரும் இதற்குக் கருணாமிர்த சாகரம், எனக் குறியிட்டமை சாலப்பொருந்தும் என்க. இயற்றமிழ்ச் சங்க வரலாற்றைத் திறம்பட முற்றும் எடுத்துக்காட்டுகின்றார். தமிழை இழித்துரைப்பார் கூற்றை நியாய வாயிலாகக் கண்டித்து அறிவு கொளுத்தும் நம் பண்டிதர் அவர்கள் நியாய வன்மை பெரிதும் பாராட்டற்பாலது. அங்ஙனம் போலிக் கொள்கைகள் பல பரிகரிக்ப்பட்டுள்ளன.

இனி, இசைத்தமிழாராய்ச்சி குன்றிலிட்ட மணிவிளக்கென எஞ்ஞான்றும் ஒளியார்ந்து மிளிரும் பொலிவுபெற்றுத் திகழும் இதனைச் செவிக்கமுதென எவரும் போற்றல் வேண்டிக் கருணாமிர்த சாகரம், எனத் தலைக்குறி புனைந்தனரோ என்றும் எண்ணி மகிழ்கூர்ந்து உடல் பூரிக்கின்றோம். இவ்வாராய்ச்சியில் வடநூலின்கண் இசை நூலிற்கூறும் இருபத்திரண்டு சுருதி, நுட்பக் கணக்கிற்கு ஒத்துவாராமையைத் தேர்ந்து தெளிந்து அதனைக் கண்டித்துத் தமிழின்கண் சிலப்பதிகாரத்து உரை முகத்துக்காட்டியுள்ள சில குறிப்புக்களான் தமிழ்ச் சுருதி முறை இருபத்து நான்காதலே எல்லா நுட்ப திட்பங்கட்கும் இசைந்தது என்னும் உண்மையினை யாப்புறுத்து நிறுவியுள்ளார். இசைநுணுக்கம், இசைமரபு, பரிபாடல் முதலிய தொன்னூல் தேர்ச்சியும் மற்றைய நூல்களின் கூற்றுக்களையும் புடைபடவைத்துணர்ந்து பல கூரிய பொருள்களை வலியுறுத்திக் காட்டியுள்ளனர். இஃது ஆற்றவும் மதித்தன் மாலையது. காலக் கணக்கு வகையினையும் கோள்களின் நிலை இயக்கங்களையும் ஜீவசுரங்களின் தோற்ற வொடுக்கங்களையும் நன்குணர்ந்து புதிது புதிதாகப் பல சுருதி பேதங்களைத் தாமே கண்டுணரும் திண்மையும் அமையப் பெற்றுள்ளார். இதனை நூலளவில் கண்டு மகிழ்தல் போதாதெனவுன்னித் தம் அருமைச் செல்விகளுக்கு இவற்றின் ஒட்ப நுட்பங்களைப் பயிற்றுவித்து அவர்களால் கேட்டு மகிழ்ந்து அநுபவ வாயிலாகவும் விளக்கிவருகின்றனர். அம்முறை இந்நூலில் செவ்வனம் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.

இதன் பொருட்டுத் தஞ்சை சங்கீத மஹாஜன சங்கம் ஒன்று நிறுவிப் பல சங்கீத வித்துவான்களை வருவித்துச் சிறப்புற நடத்திக்காட்டித் தமிழிசையின் ஒப்பற்ற உயர்வை யாவரும் உணரவைக்கின்றனர். இதனை வியந்து பல சங்கீத வித்வன்மணிகள் பாராட்டியுள்ளார்கள். அதுவேயுமன்றி, மக்கள் உடற்கூறு பஞ்சாக்கரத்தின்கண் அடங்கு முறை இந்நூலின்கண் விளங்கத் தீட்டப்பெற்றுள்ளது. தமிழ் இசைச் சிறப்பு இப்போது இனிது ஒளிர்வதாயிற்று. இத்துணை அருமைப் பாட்டை நந்தந் தமிழ்மொழி அமையப்பெற்றது நம்மவர் அருந்தவமன்றோ? அவற்றை உணராதிருத்தல் பெரும் பிழையாகும் என்பது மிகையாகாது.

தமிழைப் பாண்டியரேபோல் இவர்களும் இன்னும் பன்னூலைத் தாமாக எழுதி வெளியிட்டும், பல நூல்களைப் பிரசுரித்தும், பலவற்றிற்கு உரை கண்டும், பலவற்றிற்கும் பனுவல் அவ்வத்துறைவல்லோரால் எழுதுவித்தும் வளர்த்தல் வேண்டும் என்று விழைகின்றோம்.

இனி, இந்நூல் இனிமையான நடைபெற்றுத் தட்டற ஆற்றொழுக்காக நடைபெறுகின்றது. நல்ல காகிதத்தில் முத்துப்போன்ற எழுத்துக்களால் அச்சிடப்பெற்றுக் கருத்துக்கழகு தருவதேபோல் கண்ணுக்கும் அழகையூட்டிக் கவர்கின்றது. தமிழர் ஒவ்வொருவர் பாலும் இஃது இன்றியமையாது இருத்தற்குரியதாகும். பல அரிய பொருள்களை ஓரிடத்து ஒருங்கே காட்டும் சிறப்புள்ளது. தமிழின்கண் இஃதோர் சிந்தாமணி என்று கூறுதல் உயர்வு நவிற்சியாகமாட்டாது.

இஃது எஞ்ஞான்றும் நின்று நிலவவேண்டும் என்றும் இதனைப் படிக்கும் நண்பர்கள், தமிழ்ப் பெருமை உணர்ந்து கல்வியிற் சிறந்து அறிவுப் பெருஞ்செல்வம் தேக்கப்பெற்று இன்புறல் வேண்டுமென்றும் அதனான் இத்தமிழ்நாடு ஓங்கிப்பொலிதல் வேண்டுமென்றும் எல்லாம் வல்ல முழுமுதற் செழும்பொருளை மன மொழிமெய்களான் சிந்தித்து வந்தித்து வாழ்த்துகின்றேம்.