பக்கம் எண் :

102

நேரிசை ஆசிரியப்பா

தொன்மை மென்மை தோற்றுபு விளங்கு
நன்மை சான்ற நற்றமிழ் மாட்சி
இருநில வரைப்பினி லினிதே துலங்க
அருமை யறியா ரதனல முணர
அழுக்கறு மாந்தர் இழுக்குற் றினையச்

செந்தமிழ்ச் செல்வர் செவ்விய வின்பின்
முந்துபு புக்கு நந்தாது திளைப்பத்
தமிழ்நாட் டருமையுந் தவப்பல மேன்மையும்
அமிழ்தென யாவரு மறிந்துளங் கூர
இன்றமிழ் விழையார்க் கிருந்துயர் சேர

நன்றுறு மொழியான் நற்பொருள் கொளுவித்
தஞ்சை வாழுந் தமிழ்மணி யென்னும்
விஞ்சை பொதிதரு வித்தக ஆபிரகாம்
பண்டிதப் பெரியோன் பளகறு நூலாக்
கண்டிதைக் கருணா சாகர மாக

வையக் களித்து மகிழ்ந்தனன் மாதோ
அன்னோன் எழுதிய அரும்பொருள் நூலும்
இன்னோன் றானு மிருங்கிளை யோடு
துவன்றிப் பொலிந்து நிவந்த பேறுடன்
தீஞ்சுவைத் தமிழைத் திருச்செவி யார்ந்து

வாஞ்சை யோங்க வாழிய மாதோ
காவிரி கரையிடு மாவிரி மணலினும்
பலநா ளுலகினிற் பண்புற
வாழிய மாதோ வாழிய மாதோ.

எட்டையாபுரம் சமஸ்தானம் தெலுங்கு வித்வான் மகா---ஸ்ரீ
தி. சு. முருகேச பிள்ளை அவர்கள் அபிப்பிராயம்.

தஞ்சைமாநகர் மகா---ஸ்ரீ ராவ் சாகேப் M. ஆபிரகாம் பண்டிதரவர்கள் எழுதியுள்ள கருணாமிருத சாகரம் என்ற இசைநூலைக் கூடியவரை யான் பார்த்ததில் அந்நூல் இசைபயில் மாணவர் யாவர்க்கும் இன்றியமையாப் பயனளிக்கும் பெற்றியுடைத்து. அதனுட் பொருள்களொவ்வொன்றும் பன்னூலையுமொ ருங்கேயாய்ந்து அவற்றின் கருப்பொருளைத் திரட்டிக் கூறப்பட்டுளது.

தமிழ்மொழி மறுபுலச் சொற்களின் சார்பின்றித் தனியேயியங்கு மாண்புடைத் தனித் தொன் மொழியென்றும், அம்மொழிக்கோரணியெனவொளிரும் சிலப்பதிகாரத்திற் குறிக்கப்பட்டுள இசைத்தமிழிற் சார்ந்த ஆயப்பாலை முதலிய பன்னிரு பாலைகளாற் கிடைத்த பல்லாயிரம் பண்களுள் வட்டப்பாலையினடியாய்ப் பிறந்த பண்கள் இரண்டு சுருதி குறைத்து இருபானிரண்டு சுருதிகளோடு பாடப்படுகின்றனவென்றும், உண்மையில் ஒரு ஸ்தாயிக்கு இருபத்துநான்கு சுருதிகளே உள்ளனவென்றும் கூறியிருக்கின்றனர்.