பக்கம் எண் :

103

தற்கால வழக்கிலிசைக்கப்படும் நரம்புக் கருவிகளுள் யாழிற்கிடக்கும் பன்னிரு வீடு (சுரங்)கட்கு வடமொழி இசை நூலாசிரியர் பல்லோரும் தந்த நூற்களிற்கூறியுள்ள இருபத்திரண்டு சுருதிகள் அப்பன்னிரு வீட்டினும் ஒத்தியங்கும் அளவைக்காட்டாமையின், கணக்கிற்கொவ்வாவழி வழக்கிற்கெவ்வாறொக்குமென்ற ஐயப்பாடொன்று என் மனதுட்டோன்றிக்கிடந்தது. 22 சுருதிகளைப் பாகுபடுத்தலிலளவு ஒவ்வாவிடினும் 12 வீடுகளினொலியொத்தியல்கின்றது.

ஸ, ரி, க, ம, ப, த, நி என்ற ஏழு ஸ்வரங்கட்கு முறையே சுருதிகள் 4, 3, 2, 4, 4, 3, 2 என்ற வழி, யாழினிறுவிய வீடுகளில் ரி என்ற முதல் வீட்டிற்குச் சுருதிகள் 3, சுத்த காந்தாரமும் பஞ்ச சுருதி ரிஷப முமொலிக்காநின்ற இரண்டாவது வீட்டிற்குச் சுருதிகள் 2, ஸாதாரண காந்தாரமும் ஷட்சுருதி ரிஷபமுமொ லிக்காநின்ற 3-வது வீட்டிற்குச் சுருதி 1; அந்தர காந்தாரவொலியைக் கிளப்பும் 4-வது வீட்டிறகுச் சுருதிகள் 2; சுத்த மத்தியமவொலியையெழுப்பும் 5-வது வீட்டிற்குச் சுருதி 1; பிரதிமத்யமவொலியைப் பிறப்பிக்கும் 6-வது வீட்டிற்குச் சுருதிகள் 3 பஞ்சமம் ஒலிக்காநின்ற 7-வது வீட்டிற்குச் சுருதி 1 என வடமொழி நூற்களிற் கூறப்பட்டுள்ளன. ஆகவே பூர்வாங்கத்தின் 1, 2, 3, 4, 5, 6, 7 வீடுகட்கு முறையே சுருதிகள் 3, 2, 1, 2, 1, 3, 1 எனக் கிடைத்தது. ஆயுங்கால், ஒத்த அளவைப்பெற்ற வீடுகட்கு ஏற்றத் தாழ்வான சுருதிகளெவ்வாறு பொருந்துமென்ற கடாவிற்கு’ எம்முறையானோ முன்னோர் வகுத்த முறைக்கு நாம் எவ்வாற்றானொழுங்கு படுத்தக்கூடும் எனத்தமிழ் இசை நூலைக் காண்டலும் பெறாத வடநூற் பயிற்சியார் பலரும் விடையளிக்கா நின்றனர். முதல் வீடுநிற்க, 2-வது வீட்டிற்குச் சுருதிகள் 2 என்றும் மூன்றாவது வீட்டிற்குச் சுருதி 1 என்றும் கூறின், தாழ்ந்த வொலியையுடைய 2-வது வீட்டிற்குச் சுருதி 2 ஆயிருக்க அதைவிட வலித்தொலிக்கும் 3-வது வீட்டிற்கு அமைத்த சுருதி 1 என்பது எவ்வகைத்தானோ? நிற்க, யாழில் மேலே போகப் போக ஒன்றற்கொன்றுயர்ந்த வொலிக்கு அளவிடம் முறையே சற்றுக் குறைந்தேயிருத்தலால் 2-வது வீட்டைவிட 3-வது வீடு குறைவான சுருதியென ஒவ்வாவிடை புகல்வாராயின் 3-வது வீட்டைவிட உயரொலியுடைய 4-வது வீட்டிற்குமட்டும் அவ்வாறின்றி ஏற்றமான 2 சுருதிகளமைதலெங்ஙனோ? இவ்வாறே குறைந்துங்கூடியும் பகுக்கப்பட்டுள்ள சுருதிகளின் முறை முரணுடையது. இவ்விதம் அளவு முரண்பட்ட பாகுபாட்டையுடைய வீடுகள் ஒத்த அளவினையுடையன போலியொலி யொலிக்காநின்றனவென்பது மிக்கவியப்பே! இதனால், வடமொழி நூற்கண் கூறிய சுருதிப் பாகுபாடு நெறிதவறியதெனக் கோடலே சால்புடைத்தென விளங்குகின்றது.

நம் பண்டிதரவர்கள் மிகவாராய்ந்தெடுத்தீந்த புதைபொருள் போன்ற தமிழ்ப் பண் முறையான 24 சுருதிகளே, மேற்கூறிய பன்னிரு வீடுகட்கும் வீடொன்றுக்கு இரண்டிரண்டு சுருதிகளாாய்ப் பகுத்த உண்மை, நெறியே எமதையத்தை யொருங்கேயகற்றியது. ஒத்த அளவுடையனவாய்ப் பகுக்கப்பட்ட வீடு (சுரங்)களே இயலொலியை யெழுப்பவல்லனவென்பது யாவர்க்கும் ஒப்பமுடிந்த உண்மையே.

விரிவஞ்சி, பூர்வாங்கத்தைப்போல் உத்தராங்கத்தையும் விளக்காது விடுத்து, உலகுக்கோர் அரிய பெரிய நன்மை பயக்கத்தக்க இவ்விசைநூலைப்பற்றி உலகில் நிலவிய சுருதி சம்பந்தமான ஐயப்பாட்டை நீக்கி விளக்கியமைப் பலரும் கொண்டாடத்தக்கதென்றே சொல்லத்துணிந்தேன்.

(ஒப்பம்) முருகேசன்,

எட்டயாபுரம்.

திருநெல்வேலி திரிகூடராசப்பக்கவிராயர் பரம்பரைச் சார்ந்தவரும்
முன் இஞ்சினீருமாகிய காசி வாசி ஸ்ரீ முருகாநந்தம் சுவாமிகள் இயற்றிய

வெண்பா.

கீதத்தா லும்முத்தி கிட்டுமெனு முண்மையெலா
நீதியா யீதி னிகழ்த்தினார் - ஆதரவா
யண்டினரைக் காக்கவல ஆபிரகாம் பண்டிதரைக்
கண்டார்க்கு மின்பமுறுங் காண்.