பக்கம் எண் :

99

திருச்சிற்றம்பலம்.
சென்னை, முத்தியாலுப்பேட்டை ஹைஸ்கூல்
தலைமைத் தமிழ்ப்புலவர்

மணிமங்கலம், மகா---ஸ்ரீ திருநாவுக்கரசு முதலியார் அவர்கள் எழுதிய
சி ற ப் பு ப் பா யி ர ம்.

‘ஆதியிற் றமிழ்நூல் அகத்தியர்க் குணர்த்திய
மாதொரு பாகனை வழுத்துதும்
போத மெய்ஞ்ஞான நலம்பெறற் பொருட்டே’

தமிழ் மொழியானது பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்னரே மொழியியல் வரம்பு முற்றும் பெற்று விளங்கிய தனிச் சிறப்பு வாய்ந்த தென்பது நடுநிலை திறம்பா ஆராய்ச்சியாளர் யாவரானும் ஒருங்கு ஒப்புக்கோடற்பாலது. இது மிகப்பழைய மொழிகளாகிய இலத்தீன் ஹீப்ரு ஆரியம் முதலியவற்றோடு ஒப்புக்கொள்ளும் தொன்மைபெற்று, அவையாவும் வழக்காறு அற்றொழியவும் இன்று வரை இறவாப் பெரும் புகழ் கொண்டிலங்குகின்றது. இதனைப் பிறந்தகமாகக் கொண்டெழுந்த கன்னடம், தெலுங்கு, மலையாளம் முதலியனவும் ஒன்று பல வாய் விரிந்து மாறுபடவும் இஃதொன்றே வேறுபாடு ஒரு சிறிதும் இன்றி நிற்கும் மாட்சித்தாய் செவ்விய விழுப்பம் வாய்ப்பப் பெற்றொளிர்கின்றது. இதன்கண் எழுதப்பட்ட அரிய பெரிய நூல்களான் இத் தீவிய மொழியைப் பயின்றோர் சிறந்த நாகரிகமும் அன்னோர் வைகிய ‘தமிழகம்’ எனப்படும் நாட்டின் வளமும் பெருமையும் நன்கு விளங்குகின்றன. நாற்பான் ஒன்பஃது நற்றமிழ் நாடுகள் கடல்கொள்ளப் பெற்றன என்னும் உண்மை, புலவர் பெருமானாகிய ஆசிரியர் நச்சினார்க்கினியராலும், பிறதேய சரித்திரக்காரரானும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை அறியும் ஒவ்வொருவர் உள்ளமும் எத்துணைத் துன்பத்துள் அழுந்தும் என்பது அறுதியிட்டுரைக்க இயலாது. மேற்றிசையில் நாகரிகம் என்பதே முளைகிளம்பாத அக்காலத்துத் தமிழ்மக்கள் எல்லா நாகரிகச் சிறப்பும், கல்விப் பெருக்கும், பலகலைகளில் நிரம்பிய அறிவும் நுண்மையும் ஆழமும் உடையராய் மிளிர்ந்தனர் என்பது பண்டைத் தண்டமிழ் நூல்களாகிய குறுந்தொகை, நற்றிணை, அகம், புறம், தொல்காப்பியம் முதலியவற்றை ஒரு முறைப் பொது நோக்கிற் காண்போர்க்கும் இனிது விளங்காமற் போகாது. இவற்றைப் பல ஆங்கிலப் புலவர்களும் ஆராய்ந்து நூன்முகத்தான் வெளியிட்டுள்ளார். பல தமிழ்ச் சான்றோரும் நூல் வாயிலாகவும் பனுவலானும் எடுத்தெழுதி நிறுவியுள்ளார். நிற்க.

தமிழின் தொன்மையினை அறிதற்கு அதன்பால் இயற்கையின் அமைந்துள்ள ‘அகப்பொருள்’ இயல் ஒன்றே சாலும் என்க. அஃது எத்துணை நுண்ணிய ஆழ்ந்த கருத்துக்களை உட்கொண்டு, மக்களது முதல் நிலை தொட்டு வளர்ச்சி முறை ஒழுங்குகளைத் தெளித்துக் காட்டுகின்றது. நால்வகை நிலன் வகுத்ததும் அவற்றுக்கு உரிப்பொருள் கிளந்து கூறியதும் நுனித்தாராயற்பாலன. இக்கண்கொண்டு பார்க்கும் மதுகை இல்லார் ‘தத்தமக்குத் தோன்றியவாறே’ கூறி ஒருதலைப்படாது இடர்ப்படுவர். மெய்ப்பாட்டுவமம், ‘இறைச்சிப் பொருள்’ முதலியன எத்துணைச் சிறந்த நாகரிகம்பற்றி நிகழ்வன என்பதைக் கருத்தூன்றி யொருங்கி யுணர்க. கலவழக்கு, கால் வழக்கு, கொடி வகை, அரசியல், மருத்தியல்பு, கோள்நிலை, குறிநூல், உறுப்புநூல் முதலிய யாவும் தமிழ் உணர்ந்தவையே என்பதற்கு உறுசான்றுகள் பல நூன்முகத்திற் கிடைக்கற்பாலன.

முச்சங்கம் பாண்டிய மன்னரான் நிறுவப்பட்டுத் தமிழ் ஆராயப்பெற்றது. இயற்றமிழுக்குச் சங்கம் இருந்தது போன்றே இசைக்கூற்றுக்கும் சங்கம் விளங்கியது என்பதற்குத் திருச்சிற்றம்பலக் கோவையாரின் கண்ணுள்ள ‘ஏழிசைச்சூழல்புக்கோ’ என்னும் தொடர் மொழியும் இன்னும் சில காட்டுக்களும் ஏதுக்களென புலவர் ஒருவர் ஆராய்ந்து கூறினர். அவ்வாறே இசைச்சங்கம் இருந்திருத்தல் வேண்டும் என்பதற்கு எட்டுணையும் ஐயமின்று. கூத்து நூல்களும் பல நிலவின என்பது உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் எடுத்தோதும் நூற்களான் அறியற்பாலன.