“கர்நாடக சங்கீத சாஸ்திரத்தையும் அதை உபயோகிக்கும் முறையையும் சீர்திருத்துவதைப் பற்றிப் பேசுகிற Rao Sahib M. ஆபிரகாம்பண்டிதர் அவர்களுடைய நூலின் மேல் எனக்கு அத்தியந்த பிரீதி உண்டாகிறது. பொருளடக்கத்தைப் பார்த்தாலே அதை வாசிக்கவேண்டுமென்ற அவாவுண்டாகிறது. அவர்களைப்போலக் கல்வியில் தேர்ச்சியுள்ளவர்கள் அந்த வேலையைச் செய்வதில் அதிக நன்மையுண்டு. இப்பேர்ப்பட்ட விஷயங்களைப்பற்றிப் பலரும் பல அபிப்பிராயம் சொல்லிப் போர்புரிந்தால் அதன் நன்மை பிறக்கும். தர்க்கிக்கப்படும் விஷயத்திற்கும் திண்ணமான ஆதாரம் ஏற்படும். தமிழ்ப் பாஷையைப்பற்றி அதி சிலாக்கியமான காரியங்களைச் சொல்லுகிறார்கள். ஆனால் அவைகள் கவனித்து வாசிக்கத் தகுந்தவைகள்.” (ஒப்பம்) J. S. சான்ட்லர். தமிழ் லெக்ஸிகன் கமிட்டித் தலைமைப் பண்டிதர் மகா- - -ஸ்ரீ மு. இராகவையங்கார் அவர்கள் அபிப்பிராயம். தஞ்சை ராவ்ஸாஹிப் ஆபிரகாம் பண்டிதரவர்கள் எழுதிய “கருணாமிர்த சாகரம்” என்ற சங்கீத கோசத்தைப் பார்வையிடலானேன். இது நான்கு பாகமாகப் பிரிக்கப்பட்டு 1184 பக்கங்கொண்ட ஒரு பெரு நூலாகவுள்ளது. இதர சங்கீத சாஸ்திரத்தின் ஆதி சரித்திரங்களும் சுருதிப் பாகுபாடுகளைப்பற்றிய வடநூற் குறிப்புக்களும் தமிழ்நாட்டிற் பண்டைக்காலத்தில் வழங்கிய இசைத்தமிழ் விஷயங்களின் ஆராய்ச்சிகளும் அவ் விசைத்தமிழ் முறைப்படி அமையும் சுருதிகளின் கணக்குகளும் பிறவும் இந்நூலுள் விரித்துக்கூறப்படுகின்றன. பண்டைத் தமிழிலக்கியங்களிலும் நிகண்டுகளிலும் இசைநூற் பகுதிகளாகக் கண்ட வழக்குகளை யெல்லாம் சிறந்த ஆராய்ச்சியுடன் பண்டிதரவர்கள் விளங்கச்செய்திருப்பது மிகவும் புகழத்தக்கதாம். சிலப்பதிகாரம் அரங்கேற்றுகாதை முதலியவற்றில் இளங்கோவடிகளும் அடியார்க்கு நல்லார் அரும்பதவுரைகாரர்களும் எழுதிய இசைத்தமிழ் விஷயங்களெல்லாம் பண்டிதரவர்கள் எழுதிய இந்நூலால் கரதலா மலகமாக விளக்கமுறுவதைக் காணலாம். வடநூல்களிலும், பழைய இசைத்தமிழ் நூல்களிலுங்கண்ட சுருதிகளின் பாகுபாடுகளைப் பண்டிதரவர்கள் நுட்பமாக ஆராய்ச்சிசெய்திருப்பதைப்பற்றி, இசைநூலறிவுபோதா எம்போலியர் முடிவு சொல்ல இயலாதாயினும், இசைத்தமிழ் விஷயமான அரிய பெரிய நுட்பங்களைத் தம் அறிவாற்றலால் கண்டு பண்டிதரவர்கள் இத்தகைய நூலை முதன் முதலாக வெளியிட்டிருப்பது தமிழ்ப் பாஷைக்குச் செய்த ஒரு பேருபகார மென்பதில் தடையில்லை. ‘கருணாமிர்த சாகரம்’ என்னும் பெயர்க்கேற்ப முற்காலத்தும் பிற்காலத்துமுள்ள சங்கீத விஷயங்களெல்லாம் இந்நூலிடைப் பரந்து கிடத்தலால், இது தமிழ்மக்கட்கு ஒரு பெரிய நிதியே என்னலாம். இத்தகைய அரிய பெருங்காரியத்தைச் செய்து தமிழ் நாட்டார்க்கு உபகரித்த பண்டிதரவர்கள் நம்மவரது போற்றற்கும் புகழ்ச்சிக்கும் உரிமை பூண்டு இதுபோலும் பெருங் காரியங்களைச் செய்து நீடுவாழத் திருவருளைச் சிந்தித்து வந்திக்கின்றேன். (ஒப்பம்) மு. இராகவையங்கார்.
|