பக்கம் எண் :

896
கருணாமிர்த சாகரம் முதல் புஸ்தகம் - நான்காவது பாகம் - கர்நாடக சங்கீதத்தின் சுருதிகள்

அறிவார்கள் என்று நினைத்து ஓசைக்குரிய அளவின் கணக்கைச் சொல்லாமல் விட்டதினால் ச-ப(2/3), ச-ம(3/4) என்று 2500 வருடங்களுக்கு முன்னிருந்த பைதாகோரஸ் என்பவரும் 250 வருடங்களுக்கு முன்னுள்ள பாரிஜாதக்காரரும் தந்தியின் (1/3)-ல் பஞ்சமமும் (1/4)-ல் மத்திமமும் பேசுகிறதென்று பெரும்படியாகச் சொல்ல வேண்டியது நேரிட்டது.

ஒரு இராசி வட்டத்தில் ச-ப முறையாய் அல்லது இணை இணையாய் ஏழாவது இராசியில் 12 சுரங்களும் அமைகிற விதத்தையும் அதே சுரஸ்தானங்கள் ச-ம வாக இடமுறையாய் கிளை கிளையாய் ஐந்தாவது ஐந்தாவது இராசியாக 12 சுரங்கள் அமைகிறதையும் தெளிவாகச் சொன்னபின்பும் அது அனுபோகத்திற்கு வந்த பின்பும் யாழில் அமைத்துக் கொண்ட பின்பும் சந்தேகம் வருவதற்கு நியாயமில்லை என்று கணக்குச் சொல்லாமல் விட்டார்கள் போலும்.

அப்படிக் கணக்குச் சொல்லப்படாதிருந்தாலும் சங்கீத ரத்னாகரம் எழுதிய சாரங்கதேவர் பூர்வதமிழ் மக்கள் சுருதிகண்டு பிடிக்கும் முறையை அறிந்து கொண்டவராய்ச் சுருதி சேர்க்கும் முறையைத் தெளிவாகச் சொல்லுகிறார். அவர் ஸ்தாயிக்குச் சொல்லும் கணக்கையும் சுருதிகளுக்குச் சொல்லும் முறையையும் கிரகம் மாற்றும் விதத்தையும் நாம் கவனிப்போமானால் முற்றிலும் பூர்வதமிழ் முறைக்கு ஒத்ததாக இருக்கிறது. ஆனால் ஒரு ஸ்தாயியை 24 அலகுகளாகப் பிரித்து அதில் இணை கிளையாய் வரும் இரண்டு சுரங்களில் ஒவ்வொரு அலகாக இரண்டு அலகு குறைத்துக் கானம் செய்தார்கள்.

வட்டப்பாலையில் வரும் மருதம், குறிஞ்சி, நெய்தல், பாலை என்னும் நாலு பெரும் பண்களும் அவை ஒவ்வொன்றிற்கும் வரும் அகநிலை, புறநிலை, அருகியல், பெருகியல் என்ற நாலு ஜாதிகளுமாக 16 பண்களும் கிரக மாற்றும்பொழுதுண்டாகும் விதத்தையும் அவற்றில் எந்தெந்த சுரங்களில் குறைந்த அலகு வரவேண்டு மென்பதையும் மிகத்தெளிவாகச் சொல்லி யிருக்கிறார்கள். இதில் 22 அலகாக வவருகிறதினிமித்தம் ஒரு ஸ்தாயியில் 22 சுருதிகள் வருகிறதென்று பரதர் சங்கீதரத்னாகரர் போன்றவர்கள் நூல் எழுதிவைத்தார்கள்.

இவ்விருபத்திரண்டு என்ற சந்தேகம் உண்டானபின் அதை நிவிர்த்தி செய்வதற்கென்று பாரிஜாதக்காரர், வேங்கடமகி போன்றவர்கள் நூல் எழுதினார்கள். எழுதினாலும் சங்கீத ரத்னாகரர் போட்ட மோடியில் யாவரும் மயங்கும்படியாக நேரிட்டது. ஒருஸ்தாயியில் 22 என்று சொன்ன முறையில் சுரங்களின் அலகுகளுக்கேற்ற விதமாய்ப் பெயர்கள் சொல்லி ஒன்றோடொன்று ஒத்துவராமல் இராக லக்ஷணம் சொல்லி நூல்கள் நிரப்பிவைத்தார்கள்.

தற்காலத்தில் அவர் சொல்லிய இராக லக்ஷணப்படியும் துவாவிம்சதிசுருதி முறைப்படியும் ஒரு இராகம் கூடப்பாடுவது முடியாத காரியமென்று நம் அனுபோகத்தால் அறிவோம்.

பூர்வமாய்த் தமிழ் நாட்டில் வழங்கிவந்த பண்களுக்கு அவரவர்கள் விருப்பம்போல் வெவ்வேறு பெயர் கொடுத்து சுரங்களுக்கும் வேறு பெயர் கொடுத்து நூல்களில் எழுதப்பட்டதே யொழிய தற்காலத்தில் படித்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு இராகமும் பூர்வ தமிழ் மக்கள் இசைத் தமிழில் வழங்கிவந்த பண்களே யொழிய வேறல்ல.

இப்பண்களில் நுட்பமான சுருதிகள் நாளது வரையும் பாடப்பட்டு வருகின்றன. நுட்பமான சுருதிகள் வழங்கிவந்த பூர்வ பண்கள் தெய்வப்பிரீதியாக கோயில்களில் ஆராதனைகளில் படிக்கப்பட்டு வந்ததாகவும், படிப்பவர்களுக்கு மானியங்கள், குடியிருக்க வீடுகள், உம்பளம், சம்பளங்கள் ஏற்பட்டிருந்ததாகவும் தெரிகிறது. தேவாரம், திருவாசகம், திருமுறை முதலிய தோத்திரநூல்களில் வழங்கிவந்த பண்கள் பூர்வ முறைப்படியே என்று நாம் திட்டமாய் அறிய