பக்கம் எண் :

898
கருணாமிர்த சாகரம் முதல் புஸ்தகம் - நான்காவது பாகம் - கர்நாடக சங்கீதத்தின் சுருதிகள்

தேசிகர் அவர்களிடத்தில் போயிருந்த காலத்தில், தேசிகர் அவர்கள், மகாவைத்தியநாதையர் அவர்கள்மேல் மிகப்பிரீதி கொண்டு, அநேகம் நாள் அங்கேயிருக்கும்படிச் செய்து, தமக்கு அதிகப் பிரீதியாயிருந்த தேவார திருவாசகங்களைத் திருநெல்வேலியில் நெல்லையப்பர் ஆலயத்தில் தேவார திருவாசகம் சொல்லு ஸ்ரீ சாலிவாடீஸ்வர ஓதுவார், ஸ்ரீ தாண்டவராய தம்பிரான், புராணிகர் ஸ்ரீ சண்முகப்பிள்ளை முதலியவர்களுக்குத் தெரிந்த பூர்வ பண்களில் பாடும்படிசெய்து, மகாவைத்தியநாதையர் அவர்களை, அவைகளைத் திரும்பச் சொல்லுபடி கேட்டு ஆனந்தித்து வந்தார்கள்.

அவர்கள் அப்போது கையில் வைத்திருந்ததும் இப்போது அவர்கள் இளையசகோதரர் மகா-?-?-ஸ்ரீ வையைச்சேரி அப்பாசாமி ஐயர் அவர்களிடம் இருப்பதுமான பெரியபுராணத்தில் பூர்வ தமிழ் இராகங்களின் பெயர்களுக்குத் தற்காலத்தில் வழங்கும் பெயர்கள் இன்னவை யென்றும் தாளம் இன்னதென்றும் குறித்திருக்கிறார்கள். அவைகளை அங்குள்ளபடி அறிந்து கொள்வது நமக்குப் பிரயோஜனமாயிருக்கு மென்று இங்கு சொல்ல வேண்டியிருக்கிறது.

பூர்வ தமிழ்ப் பண்கள் பாடும் முறையில் பேதமடையாமல் நாளது வரையும் தமிழ் நாட்டில் நிலைத்திருந்தாலும் அவைகளின் பூர்வ தமிழ்ப்பெயர்கள் மாற்றப் பட்டு அன்னிய பெயர்களுடன் வழங்கிவருகின்றன என்பது தெளிவாகக் காணப்படுகிறது. சில இராகங்களின் பெயர்கள் பூர்வமான தமிழ் இராகங்களின் பெயர்களுக்கு முன் பின் சம்பந்தப் பட்டிருந்தாலும் சில பெயர்கள் முற்றிலும் சம்பந்தப் படாதவைகளாகக் காணப்படும். வேறு சில இராகங்களுக்குத் தற்காலத்தில் வழங்கப்படும் நாலு ஐந்து இராகங்கள் சொல்லப்படுகிறதாகவும் காண்போம்.

இவைகள் வெகுகாலத்திற்கு முன்னிருந்து வழங்கிவந்ததினால் வரவர நல்லது மெலிந்தும் மற்றொன்று புகுந்தும் வழக்கத்திற்கு வரலாமே. பிங்கல முனிவர் காலத்தில் இருந்த பண்களுக்கும் தேவார காலத்திருந்த பண்கள் குறைந்தனவாகக் காணப்படுகின்றன. முதல் ஊழியில் முதல் சங்க காலத்தில் வழங்கிவந்த 12000 ஆதி இசைகளுக்கு கடைச் சங்கத்தில் வழங்கி வந்த 103 பண்களும் மிகச் சொற்ப மல்லவோ? இதுபோலவே தேவாரத்தில் வழங்கி வரும் சொற்ப இராகங்களும் தற்காலத்தில் முற்றிலும் இல்லாதவைபோல் பெயர் மாற்றப்பட்டுப் போயின என்று காண்கிறோம்.

இவ்விராகங்களைக் காட்டிய அட்டவணையில் தேவாரப் பதிகங்கள், அப்பதிகம் பெற்ற ஸ்தலங்கள், பண்களின் பூர்வ பெயர்கள். அவற்றிற்குத் தற்காலத்தில் சொல்லப்படும் இராகங்களின் பெயர்கள், பண்களுக்குரிய தாளம், பண்களின் முதல் நினைப்பு ஆகிய இவைகள் சொல்லப்பட்டிருக்கின்றன. இது தேவாரப் பண்கள் ஓதும் தமிழ் மக்களுக்கு உதவியாயிருக்கு மென்று எண்ணுகிறேன்.