பக்கம் எண் :

909
தென்னிந்திய சங்கீதத்தில் வழங்கிவரும் சுரங்களுக்கும் மேற்றிசையார் வழங்கும் சுரங்களுக்கு முள்ள சில ஒற்றுமைகள்.

இதில் ச நின்றநரம்பாகும்பொழுது ரி முதல் மத்தியஸ்தாயிமுடிந்த ச பன்னிரண்டாவது சுரமாக வருகிறது. ரி1 முதல் ச12 வரையுமுள்ள பன்னிரண்டு சுரங்களும் ஒரு ஸ்தாயியில் நிற்கும் விதத்தை 1, 2, 3, 4, முதலிய இலக்கங்களின் கிரமத்தால் அறியலாம். கீழ்வரிசையிலுள்ள சுரங்கள் ஒரு ஸ்தாயியில் ஒன்றோடொன்று பொருந்திவரும் முறைப்படி அமைந்திருக்கின்றன.

இம்முறைப்படி வரும் ஏழு சுரங்களையும் நாம் தீரசங்கராபரணமென்று வழங்குகிறோம். பூர்வ தமிழ்மக்கள் இதைச் செம்பாலைப்பண் என்று வழங்கி வந்திருக்கிறார்கள். அவர்கள் சொல்லிய முறைப்படி பொருத்தமுள்ள சுரங்களும் பொருத்தமில்லாத 1, 3, 6, 8, 10 என்னும் சுரங்களும் வெவ்வேறு பிரித்துக்காட்டப்பட்டிருக்கின்றன.

முதல் வெள்ளைக்கட்டையிலுள்ள ச மந்தரஸ்தாயியின் முடிந்த சுரமாகும் பொழுது அதை நின்ற நரம்பென்று சொல்லுகிறார். சட்சமமே ஒரு ஸ்தாயியில் ஆரம்ப சுரமாகவும் முடிந்தசுரமாகவும் வருகிறதினால் நின்ற நரம்பிலிருந்து குரல் இளிகிரமத்தில் அல்லது ச-ப முறையாய் வரும் 12 சுரங்களில் இரண்டாவது இராசியில் பொருந்தி நிற்கும் ரிஷபத்தை இரண்டாம் நரம்பென்றும் நாலாவது இராசியிலிருக்கும் கைக்கிளை நாலாம் நரம்பு அல்லது நட்பு நரம்பென்றும் ஐந்தாம் இராசியிலுள்ள உழையை (ம) ஐந்தாம் நரம்பென்றும் அல்லது கிளை நரம்பென்றும் ஏழாவது இராசியில் வரும் இளியை (ப) ஏழாம் நரம்பென்றும் அல்லது இணைநரம்பென்றும் ஒழுங்கு படுத்தி இவைகளுள் 1, 3, 6, 8, 10 என்னும் இராசிகளில் வரும் சுரங்களைப் பொருத்தமில்லாத பகைச்சுரங்களாக வேறு பிரித்து வழங்கியிருக்கிறார்கள்.

பஞ்சமத்திற்கு மேலுள்ள ஸ்தானங்களையும் முன்முறைப்படியே இரண்டாம் நரம்பு, நட்புநரம்பு, கிளைநரம்பு என்று பிரித்து ஒரு இராகத்தில் வழங்கிவந்திருக்கிறார்கள். இவைகளை அடியில்வரும் அடிகளாலும் அவற்றின் உரைகளாலும் அரும்பத வுரையினாலும் தெளிவாகக் காண்போம். இவைகள் அங்கங்கே இதன் முன் சொல்லியிருப்பதினால் அதிகம் சொல்லவேண்டியது அவசியமில்லை என்று நினைக்கிறேன்.

பூர்வ தமிழ்மக்கள் மிகுந்த வணக்கத்துடன் யாழை கையில்வாங்கி உட்கார்ந்திருக்கும் விதத்தையும் பகைநரம்பு விரவாது இசைக்குப் பொருந்தும் நரம்புகளை ஆராய்ந்து வாசித்தலையும் அப்படி வாசிக்கையில் யாழ் செய்தற்குரிய மரக்குற்றங்களை அறிந்து யாழ் தெரிந்து கொள்ளுதலையும் உழைமுதல் கைக்கிளை முடிவாக மத்தியஸ்தாயியாகும்பொழுது மந்தர தார ஸ்தாயிகளில் எந்தெந்த சுரங்கள் சேர்ந்து 14 சுரங்களாக வரும் என்பதையும் அறிந்து தாரத்துழையும் உழையுள் குரலும் போல் இடவோட்டாகத்தோன்றும் நரம்புகளைச் சரிபார்த்து இணை, கிளை, பகை, நட்பு முதலிய நரம்புப் பொருத்தம் ஆராய்ந்து நாலு விதமான பெரும் பண்களையும் அவற்றிற் பிறக்கும் நாலு ஜாதிகளையும் ஆராய்ந்து பாடினார்கள் என்று தெளிவாகக் காண்கிறோம்.

இவற்றுள் அகநிலை, புறநிலை, அருகியல், பெருகியல் என்ற நாலு விதமான ஜாதிகளில் அகநிலை, புறநிலை, அருகியல், மேல் அகநிலை என்பவற்றை பேஸ் (bass) டென்னர் (tenor)ஆல்றோ (alto) றிரபில் (treble) என்னும் நாலு வகுப்பாக (parts) மேற்றிசையார் வழங்கி வருகிறார்கள்.

இதுதவிர எந்த சுரத்திலிருந்து எடுத்துக் கொண்டாலும் சங்கராபரணத்திற்குரிய சுரமுறைப்படியே பாடும்பொழுது அவைகள் எவ்விதத்திலும் மாறாமல் அவ்விராகமாகவே வருகின்றன. இதனால் சுரங்கள் யாவும் ஒரே அளவில் நடுவில் வேறு நாதமுண்டாகாமல் ஒத்துநடப்பதினால் இதை Equal temperament என்றார்கள்.