பக்கம் எண் :

910
கருணாமிர்த சாகரம்.முதல் புஸ்தகம்.- நான்காவது பாகம் - கர்நாடக சங்கீதத்தின் சுருதிகள்

ஏனென்றால் 2/3x 2/3 என்ற அளவினாலும் 3/4x3/4 என்ற அளவினாலும் கிடைக்கும் சுரங்கள் Just temperament அல்லது Natural scale என்று வெகுகாலம் வழங்கிக்கொண்டு வந்தார்கள். அப்படி வழங்கிய காலத்தில் நாலு பார்ட்ஸ் (parts) சேர்ந்து படிப்பதற்கு அனுகூலமில்லாமல் வித்தியாசப் படுவதினால் சங்கடப்பட்டார்கள்.

இதை அறிந்த வித்துவ சிரோமணிகள் ச-ப, ச-ப முறையாய்ச் சுரங்கள் வைத்துக்கொண்டு போகும் பொழுது ஒவ்வொரு ச-ப விலும் கொஞ்சம் கொஞ்சம் குறைத்து ஒரு ஸ்தாயியைச் சரியாக 12 சுரங்களுக்குப் பங்கு வைத்தார்கள். இதனால் Equal temperament என்னும் இம்முறை பலரால் ஏளனம் செய்யும்படி யாயிற்று. அதன் அருமை தெரியாத பலர் அதை நாளது வரையும் விரோதித்துப் பேசிக்கொண்டுமிருக்கிறார்கள். அதற்கு Geometric progression படியானகணிதமுறை சொல்லியிருப்பார்களானால் ஒரு ஆக்ஷேபனையுமிருந்திருக்க மாட்டாது. இம்முறையே பூர்வ தமிழ்நாட்டில் விசேக்ஷித்த விதிவகைகளுடன் மிகச்சிறப்புற்று வழங்கி வந்ததென்று அறிவார்களானால் இந்தியாவின் தென்பாகத்திலுள்ள தமிழ் மக்களும் அவர்கள் தற்காலத்தில் பாடிவருகிற பண்களும் அவற்றில் வழங்கிவரும் சுரங்களும் சுருதிகளும் மிக நுட்பமானவையென்றும், மிகுந்த தேர்ச்சிபெற்றவை யென்றும் நாளது வரையும் வழங்கிவருகிறவை யென்றும் அறிவார்கள். இவைகளைப் பற்றி இன்னும் நுட்பமாகச் சொல்ல வேண்டயவைகளை இரண்டாம் புத்தகத்தில் காணலாம்.

இப்படத்தில் கண்டபடி ஆயப்பாலையாய் வரும் பன்னிரு சுரங்களில் வழங்கி வரும் பண்களை அல்லது இராகங்களை ஆர்மோனியம், பியானோ முதலிய மேற்றிசை வாத்தியங்களில் எவ்வித சந்தேகமுமின்றி நாம் வாசிக்கலாம். தற்காலத்தில் வாசித்துக் கொண்டுமிருக்கிறோம். அதினால் ஆயப்பாலையில் வரும் இராகங்கள் எவ்விதத்திலும் இனிமை குறையாது. இதையே மாதவி சகோடயாழில் அமைத்து மூன்று ஸ்தாயிகளிலும் பதினாலு சுரங்களில் கானம் செய்தாள் என்று சொல்லப்படுகிறது. நூதனமான தொன்றல்ல. இது சுமார் 2000 வருடத்துக்கு முன்னும் அதற்குப் பல்லாயிரவருடங்களுக்கு முன்னும் தென் மதுரையில் முதற் சங்கமிருந்த காலத்திலும்வழங்கிவந்ததேயொழியபுதியதல்ல.இளங்கோவடிகள் எழுதிய சிலப்பதிகாரத்தில் சில மேற்கோள்களை இங்கே பார்ப்போம்.

சிலப்பதிகாரம் வேனிற்காதை பக்கம் 200.

23-26

அதிரா மரபின் யாழ்கை வாங்கி
மதுர கீதம் பாடினண் மயங்கி
யொன்பான் விருத்தியுட் டலைக்கண் விருத்தி
நன்பா லமைந்த விருக்கைய ளாகி

இ-ள். மாதவி, பணிமொழிகூற, அதற்கு விரும்பி ஏறிப்பூண்டு பூசி ஒன்பது வகைப்பட்ட இருப்பினுள் முதற் கண்ணதாகிய பதுமாசனமென்னும் ஆசானத்திருந்து கோவை கலங்கா மரபினையுடைய யாழைக் கையில் வாங்கிக் கண்டத்தால் முந்துற மதுரகீதமாகப்பாடி அதுமயங்கிக் கலத்தாற்பாடத் தொடங்கினவளென்க.

இதனுள் விருதியென்பது இருப்பு. ஓவியநூலுள் நிற்ற்ல் இருத்தல் கிடத்தல் இயங்குதலென்னும் இவற்றின் விகற்பங்கள் பலவுள. அவற்றுள் இருத்தல் திரிதரவுடையனவும் திரிதரவில்லனவுமென இருபகுதிய. அவற்றுள் திரிதரவுடையன யானை தேர் புரவி பூனை முதலியன; திரிதரவில்லன ஒன்பது வகைப்படும். அவை, பதுமுகம், உற்பட்டிதம், ஒப்படியிருக்கை, சம்புடம், அயமுகம், சுவத்திகம், தனிப்புடம், மண்டிலம், ஏகபாதம், எனவிவை, என்னை!