பதுமுக முற்கட் டிதமே யொப்படி யிருக்கை சம்புட மயமுகஞ் சுவத்திகந் தனிப்புட மண்டில மேக பாத முளப்பட வொன்பது மாகுந் திரிதர வில்லா விருக்கை யென்ப என்றாராகலானும், பன்னாள் கழிந்த பின்னர் முன்னா ளெண்மெய்ப் பாட்டினு ளிரக்க மெய்ந்நிறீஇ யொண்வினை யோவியர் கண்ணிய விருத்தியுட் டலையத னும்பர்த் தான்குறிக் கொண்ட பாவை நோக்கத் தாரணங் கெய்தி எனக்பெருங்கதையுட் கூறினமையானுங்கொள்க. இனி நாடக நூலார் இவ்விருப்பை ஐம்பதென விரி வரையறையாற் கூறித் தொகைவரையறைகூறுவார்அவற்றைஒன்பதினடக்கினாரெனவுணர்க: என்னை? ஆதிப்பா விருத்தி யைம்பதிற் புலவோ ரோதிக் கொண்டன ரொன்பான் விருத்தி என்றாகலின். அவற்றுள் தலைக்கண் விருத்தியாவது பதுமாசனம். இதனாற் சொல்லியது அதிராமரபினையுடைய யாழைக் கையின் வாங்கிப் பதுமாசனமாக விருந்தவள் தனக்கு நாயகனின்மையால் தியாதநாயகனாகமானதத் தானோக்கி எதிர்முகமாகவிருந்து வாசித்தலைக் கருதினாளென்பது. என்னை? முதற்க ணெதிர்முக நோக்கி நயத்தக வொருவனாகிய தோற்றமும் என்றாராகலின். யாழ் வாசிக்கு முறையை, "நல்லிசை மடந்தை நல்லெழில் காட்டி யல்லியம் பங்கயத் தயனினிது படைத்த தெய்வஞ் சான்ற தீஞ்சுவை நல்யாழ் மெய்பெ வணங்கி மேலொடு கீழ்புணர்த் திருகையின் வாங்கி யிடவயினிரீஇ மருவிய விநய மாட்டுதல் கடனே " என்பதனானறிக. விநயம்-தேவபாணி. சிலப்பதிகாரம் வேனிற்காதை பக்கம் 201 | 27-28 | "வலக்கைப் பதாகை கோட்டொடு சேர்த்தி யிடக்கை நால்விரன் மாடகந் தழீஇ" |
இ-ள். வலக்கையைப் பதாகையாகக் கோட்டின்மிசையே வைத்து இடக்கை நால் விரலான் மாடகத்தைத்தழவியென்க. பதாகைக்கையாவது பெருவிரல் குஞ்சித்து ஒழந்த விரலெல்லா நிமிர்த்தல்; என்னை? "எல்லா விலரு நிமிர்த்திடை யின்றிப் பெருவிரல் குஞ்சித்தல் பதாகை யாகும்" என்றாராகலின். மாடகம்-வீக்குங்கருவி. அது முன்னர் ஆணியென்பதனுட் கூறினாம். சிலப்பதிகாரம் வேனிற்காதை பக்கம் 201. | 29-30 | "செம்பகை யார்ப்பே யதிர்வே கூடம் வெம்பகை நீக்கும் விரகுளி யறிந்து" |
|