பக்கம் எண் :

926
கருணாமிர்த சாகரம்.முதல் புஸ்தகம்.- நான்காவது பாகம் - கர்நாடக சங்கீதத்தின் சுருதிகள்

III. தமிழ் நாட்டில் அரசாட்சி செய்துவந்த பாண்டிய அரசர்கள் முத்தமிழையும் ஆதரித்து வந்தார்கள் என்பதைக் காட்டும் சில சாசனங்கள்.

சீர்பெற்றோங்கிய கலைகள் யாவற்றிலும் தேர்ந்த பூர்வ தமிழ் மக்கள் தமிழ்ப் பாஷையின் ஒரு பாகமாகிய இசைத்தமிழை மிகப் பயின்று தேர்ச்சி பெற்றிருந்தார்களென்றும் சங்கீதத்திற்குரிய சகல அம்சங்களிலும் பல நுட்பமான விஷயங்களைக் கண்டறிந்து கானம் செய்து வந்திருக்கிறார்களென்றும் அவர்களின் தேர்ச்சிக்கு ஒப்பாக உலகத்தெவரையும் சொல்ல முடியாததென்றும் பூர்வ தமிழ் மக்களின் சங்கீத மக்களின் சங்கீத நுட்பம் வரவரக் குறைந்த பலர் பலவிதமாக எழுதவும் சுருதிகளைப்பற்றிச் சந்தேகிக்கவும் நேரிட்ட தென்றும் பலமுகமாக இதன் முன் பார்த்திருக்கிறோம்.

தமிழ் மக்கள் இசைத்தமிழில் இவ்வளவு மேன்மை பெற்றிருப்பதற்கு அவர்களை ஆண்டுவந்த இராஜர்களே காரணமென்று தோன்றுகிறது. தென்மதுரையில் சங்கமிருந்த காலத்தும் கொற்கையில் சங்கமிருந்த காலத்தும் மதுரையில் சங்கமிருந்த காலத்தும் ஆண்டு வந்த பாண்டிய ராஜர்கள் இயல் இசை நாடக மென்னும் முத்தமிழிலும் பேரன்புடையவர்களாய்ச் சங்கம் நடத்திவந்ததோடு தாங்களும் சங்கத்தை நடத்தக்கூடிய கல்விமான்களாய் விளங்கினார்களென்றும் இற்றைக்குச் சுமார் 2000 வருடங்களுக்கு முன்னுள்ள இறையனாரகப் பொருள் பாயிரத்தால் தெரிகிறது. கடைச்சங்க காலத்திற்குப்பின் பாண்டிய அரச வம்சத்திலும் அரசாட்சியிலும் சில குழப்பங்கள் ஏற்பட்டு வந்த போதிலும் முத்தமிழைப்பற்றி விசாரிக்கும் ஊக்கமும் ஆதரிக்கும் குணமுமில்லாமற் போகவில்லை. பாண்டிய அரசாட்சி யில்லாமற் போனகாலத்தில் அதற்குப்பின் பாண்டிய ராஜாங்கத்தில் பலபாகங்களைச் சிற்றரசாக ஆண்டு வந்தவர்களாலும் முத்தமிழும் நாளது வரையும் ஆதரிக்கப்பட்டு வருகிறதென்று நாம் அறிவோம். ஒவ்வொரு சமஸ்தானாதிபதிகளாலும் இயற்றமிழ் தேர்ந்த புலவர்களும் இசைத்தமிழ் தேர்ந்த கந்தர்வர்களும் நாடகத் தமிழில் தேர்ந்த நக்கர்களும் ஆதரிக்கப்பட்டு வருகிறார்களென்பது நாளதுவரையும் காணக்கூடியதாகவேயிருக்கிறது.

பாண்டிய மன்னர்கள் தமிழிலும் சங்கீதத்திலும் மிகப்பிரியம் வைத்திருந்தார்களென்பதை விளக்கும்படி சில பூர்வ சாசனங்கள் மூலமாகப்பார்ப்பது திருப்தியாயிருக்கு மென்று எண்ணுகிறேன்.

அதோடு சங்கீதத்திற்குச் சங்கீத ரத்னாகரர் எழுதிய நூலே முதல் நூல் என்றும் சிறந்ததென்றும் தமிழ் மக்களுக்குச் சங்கீதமே தெரியாதென்றும் சொல்லும் ஆக்ஷேபனையும் தீர்ந்து பதின்மூன்றாம் நூற்றாண்டிலுள்ள சங்கீத ரத்னாகரருக்கும் ஐந்தாம் நூற்றாண்டிலுள்ள பரதருக்கும் முன்பே தமிழர்கள் சங்கீதத்தில் தேர்ந்தவர்களா யிருந்தார்களென்றும் பூர்வ சாசனங்களின் சிறந்த தமிழ் நடையும் வரவர அந்நியபாஷைவார்த்தைகள் கலந்த தமிழ்நடையும் அறிவதற்கு உதவியாயிருக்கும்.

இவ்விஷயத்தில் பல பூர்வசாசனங்கள் ஆராய்ச்சி செய்து கொண்டு வருகையில் அரிகேசவ நல்லூர் மகா---ஸ்ரீ முத்தையாபாகவதர் அவர்கள் மூலமாகத்தெரிந்து திருநெல்வேலி ஜில்லா அம்பாசமுத்திரம் ஹைஸ்கூலில் தலைமைத் தமிழ்ப் பண்டிதராயிருக்கும் எனது சிநேகிதர் மகா---ஸ்ரீ அரிகரபாரதியார் அவர்களைக் கேட்டுக் கொண்டதில் அவர்கள் தம்மிடமிருந்த சாசனங்கள் பலவற்றுள்ளும் ஆராய்ந்து அடியில் வரும் சில குறிப்புக்களை எழுதியனுப்பினார்கள். அவை வருமாறு