பக்கம் எண் :

939
பாண்டிய அரசர்கள் முத்தமிழையும் ஆதரித்து வந்தார்கள் என்பதைக் காட்டும் சில சாசனங்கள்.

தக்கவிபாஷா தேவார வர்த்தனி என்றும் மாளவ கைசிக தேவார வர்த்தனி என்றும் தக்ஷண பாஷாங்கம் என்றும் திராவிடி பாஷா என்றும் தக்ஷண குச்சரி, திராவிட குச்சரி என்றும் பல அடைமொழிகள் சேர்ந்த இராகங்களைச் சொல்வதை நாம் கவனிப்போமானால் தமிழ்நாட்டில் தேவாரப்பண்கள் மிகுந்து வழங்கிய காலத்திற்குப் பின்பே அவர் சங்கீத ரத்னாகரம் எழுதியிருக்கிறாரென்றும் தமிழ் நாட்டுப் பண்களில் பலவற்றின் பெயர்களைத் தமிழ் நுல்களிலுள்ளபடிகூறியும் சில பெயர்களின் தலை, இடை, கடை மொழிகளையும் எழுத்துக்களையும் மாற்றியும் சேர்த்தும் அநேக பெயர்கள் புதிதாகக்கொடுத்தும் நுதன நுல் ஒன்று தாம் எழுதியிருக்கிறாரென்று தெளிவாகத்தெரிகிறது.

சங்கீத ரத்னாகரர் காலத்திற்கு முன்பே படித்தவர் கேட்டவர்களின் கல் நெஞ்சத்தையும் கரைக்கும் பொருளையும் இனிய இராகங்களையுமுடைய இசைத் தமிழ் இருந்ததென்று அறிந்திருப்பார்களானால், தமிழர்களுக்குச் சங்கீதமே தெரியாது, சமஸ்கிருதத்தில் எழுதிய சங்கீத ரத்னாகரருக்குப் பின்பே தமிழர்கள் சங்கீதம் கற்றுக்கொண்டார்கள் என்று தமிழ் நாட்டிலேயே பிறந்து வளர்ந்த ஒருவர் சொல்லுவாரா?

பூர்வ தமிழ் மக்கள் வழங்கிவந்த வட்டப்பாலை முறையில் மருதம், குறிஞ்சி, நெய்தல் பாலை என்னும் நாலு யாழுக்கும் அவை ஒவ்வொன்றிலிருந்துண்டாகும் அகநிலை, புறநிலை, அருகியல், பெருகியல் என்ற பதினாறு பண்களிலும் இணை கிளையாக விளரி கைக்கிளையில் ஒவ்வொரு அலகு குறைத்துக் கானம் பண்ணுவதற்கு அலகு முறை சொன்னதில் பேதங்கொண்டு அவ்வலகுகளை ஒன்றாகக்கூட்டி ஒரு ஸ்தாயியில் 22 சுருதிகள் வருகின்றனவென்று சங்கீத ரத்னாகரர் சொல்லி இருபத்திரண்டிற்கும் பெயர்களும் இராக லக்ஷணமும் சொல்லி வைத்தார். ‘முதல் கோண முற்றும் கோணும்‘ என்ற உலக வழக்கின்படி சங்கீத ரத்னாகரர் சொல்லிய சங்கீத சாஸ்திரம் முற்றும் இருக்குமே. சங்கீதரத்னாகரர் முறைப்படி 22 சுருதிகளில் வரும் ஒரு கீர்த்தனம் அல்லது ஒரு இராகம் பாடிக் காட்டுங்கள் என்றுசொன்னால் ‘இன்னும் இரண்டு மாதம் போகட்டும் பழகிச் சொல்லுகிறேன்‘ என்று சங்கீத ரத்னாகரருடைய துவாவிம்சதி சுருதிக்காகப் போராடும் ஒருவர் சொல்லுவாரா? சங்கீத ரத்னாகரர் சுருதி சேர்க்கும் முறை ஒன்று தவிர, ஒரு ஸ்தாயியில் 22 சுருதியுண்டென்று சொல்லுவதும் இருபத்திரண்டுக்குப் பெயர் சொல்லுவதும் அப்பெயரின்படி இராகங்கள் சொல்லுவதும் முற்றிலும் ஆகாயக் கோட்டை என்றே நினைக்க இடமிருக்கிறது.

பரதர் தாம் சொல்லிய 36 இராகங்களுக்கு முன் பூர்வ நுல்களில் சொல்லப்படுவதாக தாம் சொல்லும் பைரவம், மாளவ கைசிகம், இந்தோளம், தீபகம், மேகநாதம், ஸ்ரீ ராகம் என்னும் ஆறு தாய் இராகங்களில் நாலாவதான தீபகம் தவிர மற்றும் ஐந்து இராகங்களும் பூர்வ தமிழ் மக்கள் வழங்கிவந்த இராகங்களாகவேயிருக்கின்றனவென்று இதன் முன் சொன்னோம். இதனால் தமிழர்களுக்குச் சங்கீதம் ஏது என்று எண்ணும் அறியாமை நீங்குமென்று எண்ணுகிறேன்.

தமிழ் நாட்டை அரசாட்சி செய்த பாண்டிய இராஜர்கள் முத்தமிழிலும் சிறந்த அறிவுடையவர்களாயிருந்தார்களென்றும் தேவ பக்தியுடையவர்களாயிருந்தார்களென்றும் அவர்களிற் சிலர் இமயமலை வரையிலும் ஆண்டு வந்தார்களென்றும் பொதுவாகத் தெரிகிறது.

அவர்களிற் சிறந்தவர்களிற் சிலர் இந்து தேசம் முழுவதிலும் திக்குவிஜயம் செய்து அங்கங்குள்ள இராஜர்களை ஜெயித்து ஒருகுடையின் கீழ் ஆண்டுகொண்டு வந்தார்கள் என்றும் நாம் எண்ண இடமிருக்கிறது,