பக்கம் எண் :

940
கருணாமிர்த சாகரம்.முதல் புஸ்தகம்.- நான்காவது பாகம் - கர்நாடக சங்கீதத்தின் சுருதிகள்

அதோடு அவர்கள் சந்திர குலத்து உதித்தவராய்ப் பரம்பரையாய் ஆண்டு வந்திருக்கிறார்களென்றும் சில சமயம் இடைவிட்டு அவ்வம்சத்தாரே மறுபடி ஆண்டு வந்திருக்கிறார்களென்றும் தோன்றுகிறது.

பூர்வம் தென்மதுரையை அரசாண்டுகொண்டிருந்த உத்தம பக்தனாகிய சத்திய விரதன் அரசு செய்துகொண்டிருந்த காலத்தில் மகாப் பிரளயம் உண்டானதென்றும் அப்பிரளயத்திலிருந்து ஒரு கப்பலினால் பகவான் அவரையும் ஏழு முனிவர்களையும் தப்புவித்து இமயமலை அடிவாரத்தில் சேர்த்தாரென்றும் இதன் முன்பார்த்திருக்கிறோம். அந்த சத்திய விரதனென்னும் தென்னாட்டுத் தமிழ் அரசனே வைவசுதமனு ஆனார் என்றும் அவர் வழித் தோன்றிய அரசர்கள் சந்திர வம்சத்தார் என்றழைக்கப்ப்பட்டார்களென்றும் புராணங்கள் மூலமாக அறிகிறோம். ஒரு பரம்பரையைச் சொல்லும்பொழுது அப்பரம்பரைக்கு மூலபுருஷனின் பெயரையும் அப்பரம்பரையில் பிரசித்திபெற்று விளங்கிய சில உத்தமர்களின் பெயர்களையும் தன் பாட்டன் பெயரையும் தன் தகப்பன் பெயரையும் தன் பெயரையும் சேர்த்துப் பெயர் சொல்லப்படுவதை நாளது வரையும் காண்கிறோம். அதுபோலவே பாண்டிய இராஜர்களின் பூர்வம் சொல்லப்படும்பொழுது சந்திரன், புதன், புரூரவன், மாறவர்மன், *ரணதீரன், *இராஜ சிம்மன், *ஜடீல என்று சொல்லித் தங்களுடைய பெயர்களையும் சேர்த்துச் சொல்லுவது வழக்கமென்று தோன்றுகிறது. இதில் அடையாளமிட்ட மூன்று பெயர்களும் பிந்தியவர்களின் பெயராகும். அவற்றிற்கு முந்தின பெயர்கள் மிகப் பூர்வமாயுள்ள பெரியோர்களின் பெயர்கள்.

சத்திய விரதனாகிய வைவசுதமனுவின் காலம்முதல் வந்த பரம்பரையாவையும் சொல்வதும் கேட்பதும் கூடியதல்லவாதலால் அங்கங்கே பிரசித்தி பெற்று விளங்கிய இராஜர்களின் பெயர்களைச் சொல்லி அதன் பின் தங்கள் பரம்பரை சொல்வது வழக்கமாயிருந்திருக்கிறது. இம்முறைப்படி முத்தமிழிலும் தேர்ந்த ஒரு தமிழ் அரசனின் பரம்பரையாரே இந்தியா முழுவதும் குடியிருந்தார்களென்றும் அரசாண்டு வந்தார்களென்றும் தெய்வ பக்திக்கு முதல்வர்களாயிருந்தார்களென்றும் சங்கீதத்திற்கு ஆதி பூதமாயிருந்தார்களென்றும் தெளிவாக அறியக் கிடக்கிறது.

தென்னவர்கள் அரசாண்டு வந்த தென்பாண்டி நாடு ஏழு தீபங்களாக ஆனதென்றும் அவற்றில் ஏழு முனிவர்களிருந்தார்களென்றும் இவர்களே ஏழு சுரங்களையும் கண்டுபிடித்தார்களென்றும் இதன் முன் பார்த்திருக்கிறோம். இவற்றையே சங்கீத ரத்னாகரர் ஏழு தீவுகளிலிருந்து ஏழு சுரங்கள் உண்டானதாகவும் ஏழு முனிவர்கள் கண்டுபிடித்ததாகவும் சொல்லுகிறார். இவ்வேழு முனிவர்களும் தென்பாண்டி நாட்டிலுள்ளவர்களென்றும் இவர்கள் ஏழு இசையையும் அதில் எழும் பண்களையும் வளர்த்தவர்களென்றும் இவர்களே சத்திய விரதனோடு இமயமலையின் அடிவாரம் போனவர்களென்றும் இவர்கள் தமிழர்களென்றும் இவர்களாலேயே தமிழும் தமிழைச் சேர்ந்த அருங்கலைகளும் பிரபலமாயினவென்றும் நாம் எண்ண இடமிருக்கிறது.

இதோடு இமயமலையின் வட பாகத்தைச் சேர்ந்த தீபேத்து நாட்டிலும் ஆசியத்துருக்கியில் மொசோப்பொத்தாமியாவிலும் ருஷியாவின் வடகோடியிலிருந்து ஆஸ்டிரேலியா வரையிலும் அதைச்சுற்றுமுள்ள இடங்களிலும் சுமாத்திரா, ஜாவா என்னும் பெருந்தீவுகளிலும் தமிழர்கள் அரசாட்சி செய்தார்களென்றும் நாகரீகத்தில் தேர்ந்தவர்களாயிருந்தார்களென்றும் அவர்கள் நாகரீகம் தென்னிந்தியாவில்வசிக்கும் ஜனங்களின் நாகரீகத்திற் கொத்தாயிருக்கிற தென்றும் சரித்திர ஆராய்ச்சிக்காரர் சொல்வதை நாம் கவனிக்கையில் இன்ன பாஷை இன்ன ஜாதி என்று சொல்லக்கூடாத பூர்வ காலத்திலேயே தமிழ் நாட்டு அரசன் ஒருவன் இருந்தானென்றும் தமிழ்ப் பாஷை பேசப்பட்டதென்றும் அதில் இசைத் தமிழ் அல்லது சங்கீதமும் மற்றும் அருங்கலைகளும் இருந்தனவென்றும் தெரிந்து கொள்வதே போதுமென்றுநினைக்கிறேன்.