பக்கம் எண் :

944
கருணாமிர்த சாகரம்.முதல் புஸ்தகம்.- நான்காவது பாகம் - கர்நாடக சங்கீதத்தின் சுருதிகள்

ஆயப்பாலையின் பன்னிருசுரங்களை இணைகிளை கிரமப்படி யாழில் அமைத்து அவற்றில் வரும் நுட்பமான சுரங்களை கமகமாய்ப் பிடித்து வாசிக்கும் யாழ்வல்லோர் (வைணீகர்) ஒருவாறு அறிவார்களேயொழிய மற்றவர்கள் அறிந்து கொள்வது கூடியகாரியமல்ல. பூர்வதமிழ்மக்கள் மிகுந்த சிரமத்துடன் பழகி வந்த யாழ் என்னும் சிறந்த வாத்தியம் போய் மிகச் சுலபமாகக் கற்கக்கூடிய பிடில், ஹார்மோனியம் வந்ததினால் சுரங்களைப்பற்றியும் சுருதிகளைப்பற்றியும் ஆக்ஷேபிக்கும்படியான காலம் ஏற்பட்டது.

இதோடு தமிழ் மக்களின் ஜீவியத்திலும் தொழிலிலும் கல்வியிலும் கவனிப்போமானால் சங்கீதமே விசேஷித்து வழங்கி வருகிறதென்று நாம் அறிவோம். பொதுவாக உலகத்தவர் எந்தெந்த விஷங்களில் சங்கீதத்தை உபயோகப்படுத்தியிருக்கிறார்களோ அவற்றைப் பார்க்கிலும் தமிழ் மக்கள் சங்கீதத்தை மிகுதியாக உபயோகப்படுத்தியிருக்கிறார்களென்று நான் சொல்வதுமற்றவருக்கு மிகுந்த வியப்பைத்தரும்.

வான சாஸ்திரமும் அதைச் சேர்ந்த கணிதங்களும் பாட்டு. சோதிட சாஸ்திரமும் அதைச் சேர்ந்த பலாபலன்களும் பாட்டு. கணிதமும் கணிதத்தைச் சேர்ந்த நுட்பங்களும் பாட்டு. வைத்திய சாஸ்திரமும் அதைச் சேர்ந்த மூலிகைக் குணங்களும் ரசாயன சாஸ்திரமும் பாட்டு. அங்கக்கூறு பாடுகளும் அவற்றின் குண தோஷங்களும் பாட்டு. கற்ப சாஸ்திரமும் யோக சாஸ்திரமும் ஞான சாஸ்திரமும் பாட்டு. மந்திரமும் பாட்டு. மறையும் பாட்டு. இவைகள் யாவற்றையும் குறித்துச் சொல்லும் இலக்கண நுல்களும் பாட்டு. தமிழ்ப் பாஷையின் வார்த்தைகளுக்கு அர்த்தம் சொல்லும் அகராதியும்பாட்டு. ஒருவருக்கொருவர் எழுதிக் கொள்ளும் திருமுகமும் பாட்டு. சீட்டுக் கவியும் பாட்டு.

பண்ணோடு சொல்லப்படாத செய்யுளும் செய்யுளில்லாத நுலும் தமிழ் நாட்டில் இல்லவே இல்லை. தமிழர்களுக்குச் செய்யுள் நடையைத் தவிர யாவருக்கும் சுலபமான வசன நடை எழுதத் தெரியாதென்று மற்றவர் சொல்வதினாலும் பக்திக்குரிய நுல்களும் மற்றும் கலைகளுக்குரிய நுல்களும் முழுவதும் செய்யுளாயிருப்பதினாலும் செய்யுள் நடை தமிழர்களுக்கு எவ்வளவு சுலபமாயிருந்ததென்று தெளிவாகத் தெரிகிறது. செய்யுள் யாவும் பண்களுக்குகேற்றவிதமாய் தாள அமைப்புடன் எதுகை மோனையுடன் அமைக்கப்பட்டிருக்கின்றன. சில அரிய தாளப்பிரஸ்தாரங்களின் அமைப்பு சந்தக் குழிப்பாகத் தமிழில் வழங்கிவந்திருக்கிறதென்று திருப்புகழ் பார்த்திருக்கும் தமிழ் மக்கள் அறிவார்கள். அதோடு துங்க லோசை, துள்ளல் ஓசை, அகவல் ஓசை, செப்பல் ஓசை முதலிய ஓசைகள் பாவினங்களில் வருவதற்கும் தத்தச் சந்தம், தந்தச் சந்தம், தன்னச் சந்தம், தையச் சந்தம் முதலிய சந்தங்கள் வண்ணங்களின் சந்தக் குழிப்புக்கெடாமல் வரவேண்டுமென்ற விதிகளும் சொல்லியிருக்கிறார்கள். இதனால் தமிழ்ப் பாஷையின் உயர்ந்தநடையும் தாள அமைப்பும் பண்களோடு சொல்லும் இணைப்பும் மிகத் தேர்ந்தனவென்றும் நாளது வரையும் அனுபோகத்தில் நிலைத்திருக்கின்றனவென்றும் நாம் அறிவோம்.

இதோடு கோவில் உற்சவங்களிலும் காலை மாலை ஆராதனைகளிலும் உற்சவத்தைச் சேர்ந்த நாடகங்களிலும் ராஜ அரண்மனைகளிலும் சங்கீதம் மிகுந்து வழங்கிவருகிறதென்றும் இது தென்றமிழ் நாட்டில் விசேஷித்திருக்கிற தென்றும் தென் றமிழ் நாட்டிற்கே சிறந்ததாயிருக்கிறதென்றும் நாம் அறிவோம்.

ஒரு பிள்ளைக்குத் தொட்டிலாட்டும் காலத்தும் சோபன காலத்தும் கலியாண காலத்தும் பாட்டுப்பாடியே தீரவேண்டும். அவன் உணவுக்காக நெல் நாற்று விடும்பொழுதும், நெல் நாற்று