பக்கம் எண் :

945
தமிழ்நாட்டில் இசைத்தமிழ் அல்லது சங்கீதம் மிகுந்த பழக்கத்திலிருந்தது என்பதற்குச் சில திஷ்டாந்தம்.

நடும்பொழுதும், அரிகட்டும்பொழுதும், பொலி துற்றும்பொழுதும், பொலி அளக்கும்பொழுதும், நெல்லுக்கு குற்றும்பொழுதும் பாட்டு. 

உடுத்தும் வஸ்திரத்திற்காகப் பருத்திப் பொறுக்கும் பொழுதும், பஞ்சுதெளிக்கும் பொழுதும் நுல் நுற்கும்பொழுதும், பாவோடும்பொழுதும், உண்டை சேர்க்கும்பொழுதும் துணி நெய்யும்பொழுதும் பாட்டு.

அன்னத்திற்காக யாசிக்கும் ஒரு பிச்சைக்காரனும், வீடு வீடாய் தானியம் வாங்கும் ஒரு பண்டாரமும், அன்னக்காவடி துக்கும் பரதேசியும், காவடி துக்கும் நேர்ச்சிக்காரனும், அங்கப் பிரதக்ஷணம் உருளும் யாத்திரைக்காரனும், பக்திக்குரிய பாடல்களையும், எக்காலக்கண்ணி பராபரக்கண்ணி, உடற்கூறு, பாம்பாட்டி சித்தர் பாடல், அழுகண்ணிசித்தர்பாடல், கிளிக் கண்ணி, பல்லிக்காதல், நெஞ்சறி விளக்கம், பட்டணத்துப் பிள்ளையார் பாடல், தாயுமானசுவாமி பாடல் முதலிய மெய்யறிவுறுத்தும் பண்கள் பாடுவதை நம்மில் அநேகர் கேட்டிருப்போம்; கேட்டுக் கொண்டு மிருக்கிறோம்.

யாசகதத்தாலேயே ஜீவனம் பண்ணும் சில வகுப்பார் நல்ல தங்கைக் கதை, பவளக் கொடிமாலை, அல்லி அரசாணி மாலை போன்ற ஸ்திரிகளுக்கு அனுபோகம் கூறும் சிறு கதைகளைப் பாடலாகப் பாடுவதையும் பச்சைக் குத்துகிற குறத்திகளும் அம்மி பொழிகிற ஒட்டர்களும் பாடுவதையும் நாம் அடிக்கடி கேட்கிறோம். சிறுத்தொண்ட நாடகம், அரிச்சந்திர நாடகம், குறவஞ்சி நாடகம், இராம நாடகம், மார்க்கண்ட நாடகம், முக்கூடற்பள்ளு முதலிய நாடகங்களும் வில்லடிப் பாட்டு, குரவைக்கூத்து, ஒயில் கும்மி, களியலடிப் பாட்டு, ஊஞ்சல் பாட்டு, கப்பல் பாட்டு முதலிய பாட்டுகளும் வருஷா வருஷம் கிராம தேவதைகளுக்கு உற்சவ நடக்கும் காலங்களில் பாடப்படுவதையும் நாளது வரையும் கேட்கிறோம். தோட்டங்களுக்குத் தண்ணீர் இறைக்கும்பொழுது ஏத்தப்பாட்டு பாடுவதையும், மாவு அறைக்கும்பொழுது பாடும் பாட்டையும், பால் கறக்கும்பொழுது பாடும் பாட்டையும், சாந்து இடிக்கும்பொழுது பாடும் பாட்டையும் நாம்அடிக்கடி கேட்கிறோம்.

சிறுவர்களைத் துங்கவைக்கும் தாலாட்டுப் பாட்டைக் கேட்காதவர்களும் உண்டோ? தெருவில் விளையாடும் சிறுவர்கள் ஒருவர் மாறி ஒருவர் சொல்லும் பாடல்களும் கட்டு வாக்கியங்களும் பாடல்களாகவே யிருக்கின்றன. அவர்கள் படிக்க ஆரம்பிக்கும் காலத்தில் ஆனா, ஆனா, ஆனா (காரி, காரி, ரிகா) என்று இனிய சத்தத்தோடு ஒருவன்முறைவைக்க அடுத்தவன் ஆவன்னா, ஆவன்னா, ஆவன்னா (பாம, பாம, மபா) என்று சொல்வதையும் நாம் கவனிப்போமானால் மேற்கண்ட சுர அடுக்குகள் ஒன்றற்கொன்று நாலாவதான நட்புச் சுரமாக வருவதைக் காண்போம். இரண்டு அலகு பெற்ற காந்தாரத்திற்குப் பஞ்சமம் நட்பாம். அப்படியே நாலலகு பெற்ற ரிஷபத்திற்கு நாலலகு பெற்ற மத்திமம் நட்பாம். ஒவ்வொரு சுரமும் நட்பாகத் தொடர்ந்து நிற்பதையும் ரி க ம ப என்ற நாலு சுரங்களும் சிறுபிராயத்திலேயே பாடமாவதையும் நாம் கவனிப்போமானால் மிகுந்த சந்தோஷமடைவோம்.

அப்படியே ஆத்திசூடி என்ற இருசொல் வாசகமும், கொன்றை வேந்தன் என்ற நாற் சொல் வாசகமும் பாடல்களாகவே இருக்கின்றன. வாக்குண்டாம், உலகநீதி, வெற்றிவேற்கை, வேழமுகம், மூதுரை, நல்வழி, நன்னெறி, நாலடியார், குறள், திவாகரம், நிகண்டு முதலிய நுல்கள் யாவும் பாட்டுகள்தானே. அதோடு எண் சுவடியும், கீழ்வாய் இலக்கங்களும், பெருக்கல்,