பக்கம் எண் :

946
கருணாமிர்த சாகரம்.முதல் புஸ்தகம்.- நான்காவது பாகம் - கர்நாடக சங்கீதத்தின் சுருதிகள்

பிரித்தல் முதலிய கணிதமுறைகளும், குழிப்பெருக்கம், தானப் பெருக்கம், கன அளவு, சதுர அளவு, முகத்தல் அளவு, எடுத்தல் அளவு முதலிய கணிதமுறையாவும் பாடல்களே. இதில் அப்பியாசப்பட்ட ஒருவன் செய்யுள் நடைகளில் அவற்றிற்குரிய முறையோடு செய்யுள் எழுதுவது ஆச்சரியமல்ல. சந்தோஷத்தோடு பலசுரங்களைச் சேர்த்துப் பாடுவது ஐந்து ஆறு வருஷத்திற்குள்ளாக சகலகலைகளுக் குரிய முக்கிய விதிகளை அவன் ஞாபகத்தில் பதிப்பிக்கும். மகா நோம்பு, பதினெட்டாம் பெருக்குப் போன்ற விசேஷ காலங்களில் பிள்ளைகள் அவற்றிற்குரிய பாட்டுகள் பாடுவதும் அதற்கிணங்க வேஷம் போட்டுக் கொள்வதும் ஆடுவதும் கோலாட்டம் அடிப்பதும் வழக்கம். இதனால் இயல் இசை நாகடம் என்னும் மூன்று பகுதியும் தமிழ் மக்களுக்கு இலேசாய்ப் போதிக்கப்பட்டு வந்தன.

‘இளமையிற்கல், சிறுமையிற்கல்வி சிலையில் எழுத்து‘ என்ற முதுமொழிப்படி பள்ளிக் கூடத்தில் படித்த இந்த மூன்று வகைத்தமிழும் அவர்கள் பெரியவர்களாகும் பொழுது அவரவர்கள் அறிவுக்குத் தகுந்தபடி விருத்திக்கு வருவதும் அதில் வித்வான்களாவதும் மிகச் சுலபமாயிருந்தது. கவிராயர்கள் புதிதாகத் தமிழக்கவிகள் சொல்வதும் வெகு அருமையாக நடனம் ஆட்டிவைப்பதும் தென்னாட்டில் மிகுந்து இருக்கின்றனவென்று தமிழ் மக்கள் யாவரும் அறிவார்கள்.

தமிழ் நாட்டில் மாடுமேய்த்து வரும் சிறுபையன்களும் பயிர்க்கொல்லை காத்துவரும் சிறு பெண்களும்வண்டி ஓட்டுகிற வண்டிக்காரனும் பாடுகிற இனிய இராகங்களுக்குக் கேற்றவிதமாய் ஒரு துண்டுகூட மற்ற நாட்டில் பாடக் கேட்கமாட்டோம்.

தென்றமிழ்நாட்டில் வந்து குடியேறிய மற்றவர்கள் ஆசார அனுஷ்டானமுள்ளவர்களாயிருப்பதையும் மற்ற நாட்டிலுள்ளவர்களைப் பார்க்கிலும் தமிழ் இசையிலும் சங்கீத சாகித்தியத்திலும் தேர்ந்தவர்களாயிருப்பதையும் நாம் சற்று ஆலோசிப்போமானால் தென் றமிழ் நாடே நாகரீகத்திற்கும் ஆசாரத்திற்கும் பக்திக்கும் சங்கீதத்திற்கும் தாயகமாயிருந்த தென்றும் நாளதுவரை இருக்கிறதென்றும் நாம் சந்தேகமறக் காண்போம்.

சுத்தமான தமிழ்ப்பேசுகிறவர்களென்று பலராலும்கொண்டாடப்படும் யாழ்ப்பாணிகளும் தமிழின் கிளைப் பாஷையாகிய மலையாளம் பேசும் மலையாளிகளும் பேசுவதை நம்மில் சிலர் கேட்டிருப்போம். அவர்கள் பேசும் பொழுது சங்கீதத்திற்குரிய சுரங்கள் முழுவதும் உபயோகப்பட்டு வருகின்றனவென்று நாம் காண்போம். இது போலவே பூர்வ தமிழ் மக்களின் பேச்சுமிருந்திருக்கவேண்டும். பல பாஷைக்காரர்கள் வந்து தென் றமிழ் நாட்டிற் கலந்ததினிமித்தம் தமிழ்ப் பாஷை அநேக மாறுதல்களை அடைந்திருக்கிறது என்று எண்ணவேண்டியதாயிருக்கிறது.

மேற்கண்ட விஷயங்களினால் பூர்வ தென் றமிழ் நாடே ஜாதிகள் பிறந்த இடமென்றும், சங்கீதம் வளர்ந்த இடமென்றும், தமிழ் மக்களே இயல், இசை, நாடகம் என்னும்முத்தமிழுக்கும் முதல்வர்களாயிருந்தார்களென்றும் இவர்களிடத்திலிருந்தே மற்றவர் சிலபாகம் அறிந்து கொண்டார்களென்றும், இன்னும் அறியவேண்டிய அரிய விஷயங்கள் தமிழ்ச் சங்கீதத்திலிருக்கிறதென்றும் நாம் அறிகிறோம்.

நாம் இது வரை பார்த்துவந்த விஷங்களைப்பற்றிச் சிலர் சொல்லும் சில குறிப்புகளைப் பார்ப்பது ஒருவாறு உதவியாயிருக்கு மென்று எண்ணுகிறேன்.