பக்கம் எண் :

947
இந்திய சங்கீதத்தைப் பற்றிச் சொல்லும் சில பொதுக் குறிப்புகள்.

IV. இந்திய சங்கீதத்தையும் இந்தியாவையும் பற்றிச் சொல்லப்படும் சில முக்கிய குறிப்புகள்.

1. இந்திய சங்கீதத்தைப் பற்றிச் சொல்லும் சில பொதுக் குறிப்புகள்.

அமுதினும் இனிய தமிழ் மொழி தனித்துவழங்கிய தமிழ் நாட்டில் இயல், இசை, நாடகமென்னும் முத்தமிழும் மிகுந்த தேர்ச்சிப் பெற்று அதற்கேற்ற நூல்களும் எழுதப்பட்டுச் சங்கங்கள் ஸ்தாபிக்கப்பட்டு மிகுந்த ஊக்கத்துடன் நடந்து வந்திருக்கின்றதென்றும் தமிழ் மொழிக்குரிய சகல கலைகளும் அவற்றிற்குரிய விதிவகைகளும் தமிழில் மிகுந்து வழங்கி வந்தன என்றும் அவைகள் யாவும் யாப்பிலக்கண விதிகளையுடைய பாவினங்களாக இராக அமைப்புடனும் தாளப்பிரமாணத்துடனும் எழுதப் பட்டிருக்கின்றன வென்றும் அப்படி எழுதப்பட்ட செய்யுள் யாவும் பண்ணோடு சொல்லுவதற்கேற்றனவாய்ச் செய்யப்பட்டு அப்படியே தமிழ் நாட்டில் சொல்லப்பட்டு வந்தன வென்றும் இப்போதும் தமிழ் நாட்டில் அனுபோகத்திலிருக்கின்றனவென்றும் நாம் பார்த்தோம்.

எடுத்ததெல்லாம் சங்கீதமயமாய் வழங்கிய தமிழ் நாட்டில் மிக நுட்பமான சுருதிகளுடன் கானஞ் செய்யப்பட்டுவந்த பண்கள் ஓதுமுறைக்குரிய விதிவகைளும் இராகங்கள் உண்டாக்கும் சிறந்த முறையும் சுருதிகளைப்பற்றிய திட்டமும் சொல்லக்கூடிய நூல்கள் அருகிப் போனதினால் பூர்வப் பண்களில் வழங்கி வரும் சுரம், சுருதிகள் இன்னவையென்று சொல்ல இயலாத நிலையிலிருக்கிறோம். தமிழ் நாட்டின் பண்களையும் (இராகங்களையும்) வர்ணம், தானம், கீர்த்தனம் முதலியவைகளையும் படித்தும் அவைகளைத் தெலுங்கு, சமஸ்கிருதம் போன்ற பாஷைகளில் செய்து படித்தும் பிரசிங்கித்தும் வரும் கர்நாடக வித்துவான்கள் அவைகளைப்பற்றி விசாரிக்க இயலாதவர்களாய்ப் படித்ததையே படித்துக் காலந்தள்ளிக்கொண்டு வருகிறார்கள்.

இதில் சமஸ்கிருத விற்பத்தியுள்ள சிலர் சுருதிகளை விசாரிக்கவேண்டுமென்று விரும்பிக் “குட்டித் திரட்கரடி ஆறெழுகக் கோன்குதித்துக், கட்டிப்புதைந்த கதையே போல்” சங்கீத ரத்னாகரத்தில் சொல்லப்படும் துவாவிம்சதி சுருதி முறைகளை ஸ்தாபிக்கப் பிரயத்தனப்பட்டு ஒரு முடிவுக்கும் வராமற் போனார்கள். ஆகையினால் இந்தியாவின் சங்கீதத்தில் வரும் சுரம் சுருதிகளைப் பற்றிப் பலர் பலவிதமாக எழுதவும் சொல்லவும் சபைகூடி விசாரிக்கவும் ஏற்பட்டது. இதனால் பூர்வம் தமிழ் மக்கள் வழங்கிவந்த சுருதி முறைகளும் மற்றும் சிறந்த விதிவகைகளும் முற்றிலும் மறைந்து விபரீத்திற்கு வந்தன.

சுருதியைப்பற்றி விசாரித்தவர்களுக்குள்ளும் பேதம். சுருதியைப்பற்றிப் புத்தகம் எழுதியவர்களுக்குள்ளும் பல பேதம். சுருதியைப்பற்றிய கணக்குகளிலும் பேதம். இப்படிப் பலவகைகளிலும் பேதப் பட்டிருந்தாலும் படித்துக் கொண்டு வரும் சுரத்திலும் சுருதிகளிலும் ஒரேவித ஓசையையே உச்சரித்துக்கொண்டு வருகிறோமென்று அறியாதிருக்கிறார்கள். அவ்வபிப்பிராயங்களில் சிலவற்றை இதற்கு முன் சொல்லியிருக்கிறோம். தமிழ் மக்கள் தேர்ந்திருந்த நாலு வகைப்பாலைகளில் வழங்கி வரும் சுரங்களையும் சுருதிகளையும் நுட்பமான சுருதிகளையும் பார்த்த நமக்கு அவைகளுக்கு அனுகூலமான சில குறிப்புக்களை இங்கே கவனிப்பது நல்ல தென்று எண்ணுகிறேன்.