பக்கம் எண் :

949
இந்திய சங்கீதத்தைப் பற்றிச் சொல்லும் சில பொதுக் குறிப்புகள்.

Collector அவர்களால் ஆமோதிக்கப் பட்டது. அப்போது கர்நாடக சங்கீதத்திலும் இந்துஸ்தானி சங்கீதத்திலும் வழங்கி வரும் சங்கராபரணம் கரகரப்பிரியா (பெலாவல், காப்பி) முதலிய இராகங்களின் ஆரோகண அவரோகண சுரங்களுக்கு Mr. கிளமெண்ட்ஸ்துரையவர்கள் கொண்டுவந்த ஆர்மோனியம் சரியாயிருக்குமோ என்று பரிசோதிக்கப்பட்டது. அனுபோகத்திலிருக்கும் சுரங்களுக்கு ஆர்மோனியத்திலிருக்கும் சுரங்கள் ஒத்து வராமல் குறைந்தன. அங்கு வந்திருந்த உதயப்பூர் சமஸ்தான வித்துவான் மகா---ஸ்ரீ சாகுரூடீன் சாயப் அவர்களால் பாடிக் காட்டப்பட்டது.

இந்த பரோடா கான்பரென்ஸில் 22-ம் தேதி புதன்கிழமை கூடிய கூட்டத்தில் சுமார் 31/2மணி நேரம் வரையும் இந்திய சங்கீதத்தில் வழங்கிவரும் சுருதிகளைப் பற்றிய பல அபிப்பிராயங்களைக் கண்டித்துத் தமிழ்மக்கள் கானத்தில் பூர்வம் வழங்கிவந்திருக்கும் ஆயப்பாலை, வட்டப்பாலை, திரிகோணப்பாலை, சதுரப்பாலை என்னும் நான்கு பாலைகளையும் அவைகளுள் வழங்கிவரும் சுரங்கள், சுருதிகள், நுட்பமான சுருதிகளையும் அனுபவ பூர்வமாய்ப் பாடிக்காட்டி ருசுப்படுத்தினேன். கர்நாடக சங்கீதத்தில் தேர்ந்த வித்துவான்களும் இந்துஸ்தானி சங்கீதத்தில் தேர்ந்த வித்துவான்களும் எவ்வித ஆட்சேபனையுமின்றி மிகுந்த சந்தோஷத்துடனும் ஆரவாரத்துடனும் ஒப்புக்கொண்டார்கள். சபையோர் ஏகவாக்காய் அப்போது ஒப்புக் கொண்டிருந்ததினால், அடுத்தநாளில் இவ்விஷயத்தை அவர்கள் ஏகவாக்காய் ஒப்புக்கொண்டு கர்நாடக சங்கீதத்திற்கும், இந்துஸ்தானி சங்கீதத்திற்கும் பொதுவாக வழங்கும் இப்பன்னிரண்டு சுரங்களிலேயே Staff notation குறிப்பது நல்லது என்று சபையோரால் தீர்மானிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது.

பல்லாயிர வருடங்களாக வழங்கிவந்த இந்தப் பன்னிரண்டு சுரங்களையும் சம இடைவெளிகளுடையனவாயிருக்கின்றன வென்று ஒருவர் சொல்லுவதற்கும் மற்றவர் ஒப்புக்கொள்ளுவதற்கும் எவ்வளவு கஷ்டமாயிருக்கிற தென்று இதைக் கவனிக்கும் அறிவாளிகள் அறிவார்கள். ஒரு ஸ்தாயியில் ச-ப முறையாய்க் கிடைக்கும் பன்னிரண்டு சுரங்களும் நம்மை மயக்கத்துக்குட் படுத்தின என்கிறார். ஒருவர் ச-ப 13 சுருதிகள் கொண்டதென்ற முறையில் ஒரு ஸ்தாயியில் 22 சுருதிகள் கிடைக்கின்றன என்கிறார். மற்றொருவர் 2/3 ஆக ஒரு ஸ்தாயியில் 22 சுருதிகள் கிடைக்கின்றனவென்று சொல்லுகிறார். பின்னொருவர் ச-ப வாக 27 சுருதிகள் கிடைக்கின்றன என்கிறார். இன்னொருவர் ச-ப முறையில் 53 சுருதிகள் கிடைக்கின்றன என்கிறார்.

சங்கீத ரத்னாகரரோ இவைகள் எல்லாவற்றிற்கும் இடங் கொடுத்துச் சுருதிகள் ஒன்றுதான், இரண்டுதான், சுருதிகள் மூன்றுவிதம், சுருதிகள் நான்குவிதம், சுருதிகள் ஒன்பதுவிதம், சுருதிகள் இருபத்திரண்டுதான், அறுபத்தாறுதான், சுருதிகள் அனந்தவிதந்தான் என்று சொல்லியிருக்கிறார். சங்கீத சாஸ்திரத்திற்கு முக்கிய கிரந்தக்கர்த்தாவான சங்கீத ரத்னாகரரே இப்படிச் சொல்லுவாரானால் மற்றும் இன்னும் எத்தனைபேர் எத்தனை விதமாகச் சொல்லமாட்டார்கள்.

நினைத்தது நினைத்தபடி பலர் பலவாறாகச் சொல்லும்படி இருந்ததினாலும் வெகுநுட்பமான சுருதிகள் சுரங்களோடு சேர்ந்து வழங்கி வந்ததினாலும் எவருக்கும் மெல்ல முடியாத இருப்பு அவல் போல் ஆயிற்று. இதை நுட்பமான சுருதிகளைப் பாடிக்கொண்டு வரும் இந்து தேச வித்துவான்களும் அதில் விசேஷமாய்க் கர்நாடக சங்கீத வித்துவான்களும் அறியாதிருக்கும் பொழுது ஆயப்பாலையின் பன்னிரண்டு சுரங்களில் மாத்திரம் கானஞ்செய்து வரும் மற்றவர் அறிந்து கொள்வார்களென்பது கூடிய காரியமல்ல.