பக்கம் எண் :

950
கருணாமிர்த சாகரம்.முதல் புஸ்தகம்.- நான்காவது பாகம் - கர்நாடக சங்கீதத்தின் சுருதிகள்

ஆனால் தேசத்தின் நன்மையின் பொருட்டுத் தொழில்களையும் கலைகளையும் தொடர்ந்து விசாரிக்கும் ஊக்கம் இந்துக்களுக்கில்லை என்பதைக் குறித்தே இந்திய சங்கீதம் ஐரோப்பியர் ஒருவரை எதிர் நோக்கி ஆவலோடு காத்திருக்கிற தென்கிறார். ஏனென்றால் இந்திய சங்கீதத்தை முன்னுக்குக் கொண்டுவர வேண்டுமென்று அநேகர் பிரயத்தனப்பட்டும் அதன் சரியான கருத்தைச் சொல்ல இயலாமல் தவறிப் போனார்கள் என்பதை உத்தேசித்துச் சொல்லுகிறார் என்று அடியில் வரும் வசனங்களால தெரிகிறது.

Introduction to the study of Indian music by E. Clements Forword by

Dr. Kumaraswamy P. 6.

“The neglect of centuries, as in so many analogous cases, has proved less disastrous than the renewed patronage of a few decades.”

“மற்ற வித்தைகளைப்பற்றிச் சொல்வது போலவே அநேக நூற்றாண்டுகளாய்ச் சங்கீதத்தைக் கைவிட்டதால் அதற்கு உண்டான இடையூறைவிட சென்ற கொஞ்ச வருஷங்களாய் அது அநேகரால் ஆதரிக்கப்பட்டதினால் உண்டான இடையூறு அதிகம்.”

மேற்கண்ட வாக்கியத்தால், அநேக நூற்றாண்டுகளாக இந்திய சங்கீதம் பேணுவாரற்றுப் போனதினால் அடைந்த கேட்டைவிட அதை எடுத்த நிறுத்த வேண்டுமென்று நூல் எழுதியவர்களால் அதற்கு அதிக இடையூறு உண்டாயிற்றென்று தோன்றுகிறது. இவ்வார்த்தை Dr. குமாரசாமி அவர்களால் சொல்லப்படுகிறது.

இவர் இந்தியாவின் பல இடங்களுக்குச் சுற்றுப் பிரயாணம் செய்கையில் இந்தியாவின் சிற்ப வேலைகளைப் பற்றியும் சங்கீதத்தைப் பற்றியும் விசாரித்துக் கொண்டிருந்ததை நான் நேரில் அறிவேன். சங்கராபரண இராகத்தில் வழங்கிவரும் ரிஷப தைவதங்கள் கூடுதலாய் வருகிறதைப் பலரிடத்திலும் விசாரித்தும் சரியான பதில் கிடைக்காமையினால் என் வீட்டிற்கு வந்து நேரில் விசாரித்தார்கள். ரிஷபதைவதங்கள் கூடுதலாய் வருகிறதென்று சொல்லக் கேட்ட மாத்திரத்தில் மிகுந்த சந்தோஷமடைந்தார்கள். பூர்வ தொழில்களையும் கலைகளையும் ஆராய்ச்சி செய்யும் Dr. குமாரசாமி அவர்களுக்கு ஒரு ஸ்தாயியில் 27 சுருதிகள் உண்டென்று Mr. Clements எழுதிய புத்தகம் இந்தியசங்கீதத்திற்கு இடையூறாயிருக்கிற தென்று தோன்றுமே யொழிய மற்றவர்களுக்குத் தோன்றாது.

இந்திய சங்கீதத்தில் வழங்கிவரும் சுருதிகளைப்பற்றி நூல் எழுதியவர்களின் வெவ்வேறு அபிப்பிராயங்களை இப்புத்தகம் இரண்டாம் பாகத்தில் சொல்லியிருக்கிறோம். அங்கே இருபதுக்கு மேற்பட்ட அபிப்பிராயங்களைச் சொல்லி அவற்றிற்குக் கணக்கும் கொடுத்திருக்கிறோம். இவர்கள் அபிப்பிராயம் ஒன்றோடொன்று ஒவ்வாதைவைகளா யிருக்கின்றன வென்றும் பூர்வ நூல்களோடு ஒவ்வாதனவா யிருக்கின்றனவென்றும் சொல்லியிருக்கிறோம்.

பரதர் சங்கீத ரத்னாகரர் ச-ப2/3 என்று சொல்லவில்லை. 2/3 முறையாய்ச் செல்லும் பொழுது கிடைக்கும் சுரங்களுக்கும் சங்கீத ரத்னாகரர் முறைப்படி கிடைக்கும் சுரங்களுக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை. 2/3 முறையாய்ச் செல்லும்பொழுது கிடைக்கும் சுரங்களுக்கும் கர்நாடக சங்கீதத்தின் சுரங்களுக்கும் எவ்வித சம்மந்தமுமில்லை. தாங்கள் வாயில் சொல்லிக்கொண்டிருக்கும் சுரங்களுக்கும் கடுதாசியில் எழுதிக்காட்டும் சுரங்களுக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை. இப்படி ஒன்றற்கொன்று ஒற்றுமையில்லாத பல அபிப்பிராயங்கள் கலந்த நூல்களினால் உண்மை தோன்றாமல் மறைந்துபோவதும் கலக்கமுண்டாவதும் இயல்புதானே.