பக்கம் எண் :

952
கருணாமிர்த சாகரம்.முதல் புஸ்தகம்.- நான்காவது பாகம் - கர்நாடக சங்கீதத்தின் சுருதிகள்

சங்கீதரத்னாகரர் சுருதி சேர்க்கும் முறையில் படிப்படியாய் ஒன்றற் கொன்று தீவிரமாய் நடுவில் வேறு நாதமுண்டாகாமல் ஒரு ஸ்தாயியில் 22 சுருதிகள் வருகின்றனவென்று சொல்லுகிறார்.

அவருக்குப் பிந்திய நுல்கள் ஒரு தந்தியை இரண்டில் ஒன்றாகவும் நாலில் ஒன்றாகவும் மூன்றில் ஒன்றாகவும் பிரித்து அளவுகள் சொல்லுகின்றன. இப்படிப் பிரிக்கப்பட்டவைகளுள் மூன்றில் ஒன்றாகவும் மூன்றில் இரண்டாகவும் பிரித்துச் சுரங்கள் காணச் சொல்லுகிறார். பழக்கத்திலிருக்கும் சுரங்களுக்கும் இதற்கும் சொற்ப வித்தியாசமுண்டு.

சங்கீதரத்னாகரர் முறைப்படிப் பிரித்தால் மாத்திரம் கிரக சுரங்கள் பாடுவதற்கு அனுகூலமாயிருக்கும். ஒரு ஸ்தாயியை 22 சுருதிகளாகப் பிரிப்போமானால் தற்காலத்தில் நம் அனுபவத்திலிருக்கும் சுரங்களில் எந்த சுரமும் சரியாய் வராது.

பாரிஜாதக்காரர் முறையின்படிப் பிரித்துக்கொண்டு போவோமானால் தற்காலம் நாம் பாடும் சுரங்களுடன் சிறு சிறு சுருதிகள் சேர்ந்து வருகிறதாகக் காண்போம். இந்நுட்பமான பேதம் ஒரு ஸ்தாயியில் வரும் 12 சுரங்களிலும் ஏற்பட்டதினால் ஆயப்பாலை முறையால் வரும் 12 நிலையான சுரங்களிலுங்கூட சந்தேகிக்கும்படியாக நேரிட்டது.

சுரங்களின் பெயர்களிலும் சுருதிகளின் பெயர்களிலும் அவைகளின் ஸ்தானத்தின் பெயர்களிலும் அவைகளின் அளவு கணக்குகளிலும் ஒருவருக்கொருவர் பேதப்பட்டு வெவ்வேறு விதமாய் எழுதி யிருக்கிறார்கள் என்று 430-431-ம் பக்கங்களிலுள்ள அட்டவணையில்காட்டினோம். அதோடு தற்காலத்தில் சுருதிகளைப் பற்றிச் சொல்லும் பல கனவான்களுடைய அபிப்பிராயங்களைத் தெளிவாக அறியக்கூடிய விதமாய் 4அட்டவணையாக 491, 492, 493, 494-ம் பக்கங்களில் காட்டியிருக்கிறோம். பேதமுள்ள இவ்வளவுகள் யாவும் கர்நாடக சங்கீதத்திற்கு முற்றிலும் ஒவ்வாதவையென்று தெளிவாகத் சொல்லியிருக்கிறோம்.

அதில் ஆறாவது ஏழாவது கலங்களில் Mr. கிளமெண்ட்ஸ் துரையவர்கள் சுருதி முறையும் காணப்படுகிறது. அதில் தவறுதலென்று கண்டபடியே All India music conference ல் 27 சுருதிகள் வைத்த ஆர்மோனியத்தில் நேரில் பாடிக்கேட்கும் பொழுது அனுபோகத்திலுள்ள சுரங்களுக்கு அவை குறைந்து வருகின்றனவென்று அவருக்கு ருசுப்படுத்தப்பட்டது. இவை தவறுதலாயிருக்கின்றன வென்று அவர் அறிந்தால் இந்திய தொழில்களும் வித்தைகளும் முற்காலத்தில் அவைகளை நடித்துக் காட்டுகிறவர்களால் க்ஷீணித்துப் போனது போல இந்திய சங்கீதமும் அப்படிப்பட்டவர்களால் கெட்டுப் போவதற்கு ஏதுவாயிருக்கிற தென்று சொல்லியிருக்க மாட்டார்.

உண்மையைக் கண்டறிய உள்ளபடியே பிரயாசைப் பட்டிருப்பாரானால் சங்கீதரத்னாகரர் அபிப்பிராயத்திற்கு மேல் இரண்டு சுருதிகளைத் தாம் சேர்த்துச் சொல்லவும் மாட்டார். கிரகம் மாற்றுகையில் சங்கீதரத்னாகரர் சொல்லாத மூன்று சுருதிகளைச் சேர்த்து 27 சுருதிகள் உண்டென்று சொல்லவும் மாட்டார். இந்தியாமுழுவதிலும் பாடப்பட்டு வரும் சங்கீதத்தில் வரும் சுரம் சுருதிகள் இன்னவையென்று ஆராய்ந்து சொல்லியிருந்தால் அம்மட்டும் ஒப்புக்கொள்வது நன்மையாயிருக்கும். அப்படி இல்லாத ஒன்று இருக்கிற வித்தைக்கும் இடைஞ்சல் தானே. இதுபோலவே சங்கீத நுல்களுள்ளும் பேதங்கள் காணப்படுகின்றன வென்று பின்வரும் வசனங்களால் காண்கிறோம்.