பக்கம் எண் :

954
கருணாமிர்த சாகரம்.முதல் புஸ்தகம்.- நான்காவது பாகம் - கர்நாடக சங்கீதத்தின் சுருதிகள்

அறியாத மற்றவர் சிறு சுரங்களுக்கேற்ற விதமாய் மெட்டுக்களைக் கூட்டியும் குறைத்தும் வைத்துக்கொண்டு வாசித்தார்கள். ஆனால் இது வட நாட்டிலுள்ள வாத்தியக்கருவிகளுக்கு வழக்கமாயிருக்கிறதே யொழிய தென்னாட்டிலுள்ள யாழ் முதலிய வாத்தியங்களுக்கு வழக்கத்திலில்லை.

தென் றமிழ் நாட்டின் இசைத் தமிழில் வழங்கும் நுட்பச் சுரங்களைக் கண்டறியாத மற்றவர் சங்கீதத்தில் வழங்கிவரும் நுட்பமான ஓசைகளை அறிந்து அவைகளுக்கேற்ற விதம் மெட்டுக்களை வைத்து வாசித்துக்கொண்டு வருகிறார்களேயென்று மிகுந்த சந்தோஷப்படவேண்டியதாயிருக்கிறது. அதோடு பாரிஜாதமானது தற்கால கர்நாடக சங்கீதத்திற்கு ஒரு திறவுகோல் என்கிறார். பாரிஜாதக்காரர், சுருதி கண்டுபிடிக்கச் சொல்லும் முறையை 441-ம் பக்கத்திலும் 444-ம் பக்கத்திலும் 451-ம் பக்கத்திலும் 454-ம் பக்கத்திலும் காட்டியிருக்கிறோம். அதின்படி நாம் கவனிப்போமானால் பூர்வ தமிழ் மக்கள் வழங்கி வந்த அளவுள்ள ஓசைகளுக்குப் பதில் வீசம் சுரங்களும் அரைக்கால் சுரங்களும் சேர்ந்து வருவதாகக் காண்போம். இதனால் இன்னும் அநேக விதமான நுட்பச் சுரங்கள் வரலாமென்று சொல்ல நியாயமிருக்கிறது..

ஆனால் இவரோ மூன்றில் ஒன்று, நாலில் ஒன்று என்று தந்திகளைப் பங்கு வைத்துக் கொண்டு போகிறார். ஆனால் இவருடைய முறையில் கர்நாடக சங்கீதத்திற்குச் சற்றேறக் குறைய பொருத்தமுள்ள சுரங்களாய் வருகின்றனவென்றும் ஒருவாறு பன்னிரண்டு சுரங்களை அவர் நிச்சயித்திருக்கிறார் என்றும் இதன் முன் சொல்லியிருக்கிறோம்.

சங்கீத ரத்னாகரர் சொல்லிய 22 சுருதி ஸ்தானங்களுக்கும் சங்கீத பாரிஜாதக்காரர் சொல்லிய 12 சுர ஸ்தானங்களுக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை என்று தெளிவாகத் தெரிகிறது. இதனால், தென்னாட்டில் வழங்கிய சங்கீதத்தின் சுரக் கிரமம் தெரியாமல் சங்கீத ரத்னாகரர் நூல் எழுதினார் என்றும் அதினால் பல குழப்பங்கள் உண்டாக அவற்றின் பயனாக கர்நாடக சங்கீதத்தின் சுரங்களை அறிந்துகொள்ளக்கூடிய விதமாய்ப் பாரிஜாதக்காரர் முதலியவர்கள் நூல்கள் எழுதியிருக்கிறார்களென்றும் தெளிவாய்த் தெரிகிறது.

சங்கீத ரத்னாகரர் முறைப்படி நாதமும் சுருதிகளும் உண்டாகும் விதத்தைச் சொல்லிக்கொண்டுவந்த பாரிஜாதக்காரர் நாரதர் முறைப்படிச் சுருதி சேர்க்கும் முறை சொல்லுகிறேன் என்று ஆரம்பிக்கிறார். இதைக் கவனிக்கும்பொழுது சங்கீத ரத்னாகரர் சுருதி சேர்க்கும் முறையை விட்டு நாரதர் முறைப்படி சொல்லுகிறதாகத் தெரிகிறது. நாரதர் முறையோ கர்நாடக சங்கீத முறை. அவர் தென்றமிழ் நாட்டில் யாழாசிரியராக மிகவும் மதிக்கப்பட்டவர். இராமநாதபுரத்திலும் மற்றும் சில சமஸ்தானங்களிலும் நவராத்திரி காலத்தில் தசராக்கொலுவில் மரியாதை செய்யும்பொழுது நாரதர் மரியாதை என்று அப்பரம்பரையில் ஒருவர் பெறுவது நாளது வரையும் வழக்கமாயிருக்கிறது. இதனால் பாரிஜாதக்காரர் கர்நாடக சங்கீதத்தில் வழங்கி வரும் சுரங்களையே சொன்னார் என்று தெளிவாகத் தெரிகிறது.

பாரிஜாதக்காரர் சங்கீதம் வேறு சங்கீத ரத்னாகரருடைய சங்கீதம் வேறு என்று நாம் நினைப்போம். இன்னிசை யாவும் ஏழாகவே பிரிக்கப்பட்டிருக்கின்றன. ஏழு சுரங்களும் பன்னிரு அரைச் சுரங்களாகவேயிருக்கின்றன. பன்னிரு அரைச் சுரங்களோடு வழங்கிவரும் நுட்பச் சுரங்கள் இன்னவையென்று அறிந்துகொள்ளாமல் ஒரு ஸ்தாயியில் 22 சுருதிகள் வழங்கி வருகின்றனவென்று சங்கீத ரத்னாகரர் சொன்னார். இதனால் இரண்டு முறைக்கும் வித்தியாசம் ஏற்பட்டு விவாதத்திற்கு வந்ததேயொழிய சங்கீத ரத்னாகரர் முறைப்படி ஒரு சங்கீதமிருந்ததுமில்லை. இன்றைக்கு இருக்கவுமில்லை. நாளை இருக்கப்போகிறதுமில்லை.