தென்னிந்திய கானம் நுல் முறையின்றி ஒருவாறு பலவீனப்பட்ட காலத்தில் அதற்கு நேரிட்ட ஆபத்துகளில் சங்கீத ரத்னாகரருடைய சுருதி முறை ஒன்றும் (2/3),(3/4) என்ற பைதாகோரஸ் அளவு முறை ஒன்றுமாக இரண்டும் மிகப் பெரிதானவையென எண்ணுகிறேன். சங்கீத ரத்னாகரர் முறையென்று பெயர் வைத்துக் கொண்டு பைதாரகோரஸ் என்பவருடைய (2/3),(3/4) என்ற முறையினால் பல ஒழுங்கற்ற சுருதிகளைச் சொல்லும் மற்றவர்களும் இவ்வினத்தைச்சேர்ந்தவர்களே. Hindu Musical Scale and the 22 Srutis by K. B. Deval P. 6. “Narad sat watching from time to time his large Veena (sonometre or monochord) which by the impulse of Breeze, yielded notes that pierced successively the regions of his ear, and proceeded by musical intervals.” “நாரதர் ஒரு தந்தியாலான தம்முடைய வீணையை அடிக்கடி கவனித்துக்கொண்டிருந்தாராம். காற்று அந்த வீணையின் மேல் வீசினவுடனே சில சுரங்கள் தொனித்தன. அந்த சுரங்கள் ஒன்றன்பின் ஒன்றாயும் ஒழுங்கான இடைவெளிகளுள்ளதாயும் அவர் காதில் ஏறின”, மேற்கண்ட வரிகளைக் கவனிக்கும் பொழுது நாரதருடைய வீணையின் தந்தியில் காற்று மோத அதில் உண்டான நாதம் ஒன்றன்பின் ஒன்றாய் ஒழுங்கான இடைவெளிகளையுடைய தாயிருந்தது என்று தமது புத்தகம் ஆறாவது பக்கத்தில் Sir. W. Jones எழுதுகிறதாகச் சொல்லுகிறார். இதை நாம் கவனிப்போமானால், யாழாசிரியராகிய நாரதர் சுரங்கள் சம அளவுடையனவாயிருக்க வேண்டுமென்று கண்டு அதன்படியே சமமான இடைவெளிகளுடையதாய் ஆயப்பாலை, வட்டப்பாலை, திரிகோணப்பாலை, சதுரப்பாலைகளில் வழங்கி வரும் நுட்பமான சுருதிகளைக் குறித்து, யாழ் இலக்கணம் சொல்லியிருக்க வேண்டு மென்று தெளிவாய் அறிகிறோம். இதோடு Mr. K. B. Deval தம்முடைய புத்தகம் இரண்டாம் பக்கத்தில் எழுதியிருக்கும் வசனங்களையும் கவனிக்க வேண்டும். Hindu Musical Scale and the 22 Srutis by K. B. Deval. “The Hindus must have followed a system similar to the equal ‘temperament’ system at present in vogue in Europe.” “தற்காலம் ஐரோப்பாவில் வழங்கி வரும் (Equal temperament) அதாவது சுரங்களுக்கிடையில் வரும் சிறு சுருதிகளைச் சமஇடைவெளிகளுள்ள பாங்களாகப் பிரித்தல் என்னும் முறையையே இந்துக்களும் வழங்கி வந்திருக்க வேண்டும்,” இதில் சுரங்களுக்கு இடையில் வரும் சுருதிகளைச் சம இடைவெளிகளுடையனவாய்ப் பிரித்தல் என்னும் முறையையே இந்துக்களும் வழங்கி வந்திருக்க வேண்டு மென்கிறார். சுரங்களுக்கு இடையில் வரும் சிறு சுருதிகளைச் சம இடைவெளிகளுடையவைகளாய்ப் பிரிக்க வேண்டுமென்றிருக்குமானால் சுரங்களையும் அப்படித்தானே பிரித்திருக்க வேண்டும். சுரங்களையும் சுருதிகளையும் சமமாகப் பிரித்து அவைகள் ஒன்றற் கொன்று பொருந்தும் கணிதமும் சொல்லி யிருக்கிறார்களென்று இதன் முன் விஸ்தாரமாகப் பார்த்தோம். இப்படிச் சமமாகப் பிரித்து வழங்கிய முறை தென்றமிழ் நாட்டிற்கு மிகப் பூர்வமானது. சுமார் 150, 120 வருடங்களுக்கு முன் ஒரு ஸ்தாயியில் வரும் 12 சுரங்களைச் சமமாகப் பிரித்து அவற்றை Equal temperament என்று வழங்கினார்கள், Equal temperament ஆன சமஇடைவெளிகளுள்ள பன்னிரண்டு சுரங்களோடு சேர்ந்து வழங்கும் நுட்பச்சுரங்கள் இன்னவை யென்று அறிந்து கொள்ளாமையினால் பலர் பலவிதமாகச்சொல்ல நேரிட்டது.
|