| 15. | தொழில்களைப் புரிந்து தளர்ச்சியுற் றவர்க்குத் தொய்வுநீக் குவதுசங் கீதம் ஒழிவிலா தோதி யெய்த்தவர் மூளைக் குறுதிநல் குவதுசங் கீதம் கழிபெருந் துயர மனத்தடைந் தவர்க்குக் களிப்பையீ குவதுசங் கீதம் அழிவிலான் புவிக்கோ ரமுதன விதைமுன் னளித்தன னறிஞரா லன்றே. |
| 16. | விலங்குகள் புட்க ளூர்வன நீரில் விளங்குபல் லுயிர்களு மிசையின் வலங்கொடிண் மையினா லிழுபடு முருகி மகிழ்ந்துமே பரவச மாகும் நலங்கொளு மனிதப் பிறவியிற் பிறந்தும் நல்லிசை கேட்டுரு காதான் இலங்கறி வில்லாக் கற்களோ விரும்போ வின்னவென் றுரைக்கறி யோமால். |
| 17. | காமரங் கேட்டு முருகிடா மனிதர் கசடரிற் றாழ்வுறு கசடர் ஈமநேர் மனமு நரகினு மிருண்ட தெண்ணமோ சர்ப்பனை சதியே யாமவர் நட்பும் வஞ்சக நிறைந்த தன்புமே கனவிலுங் கொள்ளார் தீமைசே ரவரை நம்பொணா தெனவே செப்பினர் புலமையின் மிக்கோர். |
| 18. | நல்லிசை வலியை நாட்டுவான் கருதி நக்கன்மா தவனொடா னாயன் முல்லையம் பண்ணை யாழினி லிசைக்க முரளியி லின்னிசை தெரிக்கத் தொல்லையைந் தெழுத்தை வேணுவி லொலிக்கத் தோற்றிய சராசர மனைத்தும் ஒல்லையி னுருகிக் களித்தன வென்றிங் குரைத்திடும் பற்பல புராணம். |
| 19. | இருநிலத் தடியா ரெவர்களே யெனினு மினிமையாய்ப் பாடல்கள் பாடித் திருவடி துதிக்கின் றனதுளங் கனிந்து திகழுவ ரன்பெனும் வலையின் மருவியே சிக்குண் டன்னவர் கேட்கும் வரனெலாம் பொருளெலாம் மறுக்கா தொருதனிப் பரம னருளுவ னென்னி லுயர்ந்தது பாணினு முண்டோ. |
| 20. | என்னுயிர்க் குயிரை யெப்பொரு ளக்கு மிறைவனை யிமையவர் கணங்கள் துன்னியெம் மருங்குஞ் சூழ்ந்துகொண்ட டையன் சுபகுணங் களையெடுத் தோதி இன்னிசைக் கருவி முழக்கியே பாடி யேற்றவா றாடியே துதிப்பார் பொன்னுல கினிலும் பொலிந்திலங் குவது பொருவறு கீதமே யன்றோ. |
| 21. | இத்துணைப் பெருமை வாய்ந்த சங்கீத மேனைய கலைகளைப் போலும் அத்திசூ ழுலகில் வரவரச் சுருங்கி யரில்பல கலந்திடல் கண்டு சித்தமே சலியா திசைவலோர் யாருஞ் சேர்ந்திட வொருசபை நாட்டி வித்தகக் கருணா மிருதசா கரப்பேர் மேம்படு நூல்வழங் கினனால். |
| 22. | அன்னான் யாரென் றெமைவினவி னறைவோங் கேண்மி னிப்புவியில் முன்னா டென்னா டாண்டுவந்த முதன்மை பெறுமூ வரசர்களுள் ஒன்னா ரஞ்ச நகுவேலா னுசிதன் வழியிற் றோன்றினவர் என்னா நவிலுஞ் சான்றார்தம் மினத்தி லுதித்த குணமேரு. |
| 23. | தஞ்சை நகருக் கதிபனெனத் தரையில் விளங்கு வாழ்வுடையோன் எஞ்ச லின்றித் திக்கெட்டு மெட்டுங் கீர்த்தி மிகப்படைத்தோன் கஞ்சம் போன்ற வதனமதிற் கருணை யொழுகு மிருவிழியோன் நஞ்ச மெனவே பொய்வெறுத்து நாளும் வாய்மை புகனாவான். |