பக்கம் எண் :

115

24.நாளுங் கல்வி ரசமதனை நச்சிப் பருகு மணிச்செவியான்
காள முகிலு மைந்தருவுங் கண்டு வெட்கப் பொழிகரத்தான்
வேளி்ன் சரத்துக் கிடமின்றி விமலை வாழுந் தடமார்பான்
ஆளுங் கேளு மோவாம லணுகிப் பணியு மலர்த்தாளான்.
 
25.தேச மாளு மதிபதிகள் சிறந்த பிரபுக் கண்மிக்கோர்
பாசம் வைத்தே கொண்டாடிப் பழகி யுறவா டுங்குரிசில்
நேசங் கொண்டு சற்குருவாய் நேர்ந்த கருணா னந்தருப
தேச மதனை மறவாது தினமுஞ் செவ்வை நெறிநிற்போன்.
 

26.முன்னம் முத்து சாமியெனு முதல்வ னன்னம் மாளோடும்
பன்னாண் முயன்ற வருந்தவத்தின் பயனா வந்த பாக்கியவான்
பின்ன ருதித்த ஜேசு தாசன் பீடார் தானி யேல்வில்யம்
என்னு மூவர் தமையுந்த னினிய வனுச ராயுடையோன்.
 
27.தென்னன் குலத்துத் தோன்றலெனத் தெளிவாய்க் காட்டுந்திருநாமம்
மன்னுஞ் சுந்த்ர பாண்டியனை மனோக்ய ஜோதிப் பாண்டியனை
துன்னுங் குணமா பாண்டியனைச் சோர்வில் சவுந்த்ர பாண்டியனைத்
தன்னின் புதல்வ ராய்ப்படைத்த தன்னே ரில்லாத் தாட்டீகன்.
 
28.என்றுந் தேவப் பிரசாத மென்னு மெம்போற் பாவலரை
யொன்றுங் குறைவெய் தாமற்றன் னுயிர்போற் றாங்கி யாதரிப்போன்
இன்று மன்றே போலன்பி லிறையுங் குன்றா வுத்துங்கன்
நன்றுந் தயையுங் கைம்மாறு நாடா தெவர்க்கும் புரிமகிபன்.
 

29.பூதலத்தி லாதவனை யொத்தபெரு விளக்கம்
    பொருந்தியென்றும் நீங்காத பெருங்கொடையோ டிரக்கம்
ஓதுகலை யுணர்ச்சிதவா மாண்பு பெருங்கீர்த்தி
    ஒருநாளும் குறையாம லோங்கு பெருவிபவம்
நாதனடித் தாமரையை மறவாத வன்பு
    நல்லகுரு பக்திதள ராவூக்கப் பாடு
சாதுகுண மீதனைத்து மொருசேர வாய்ந்தோன்
    தஞ்சைநக ராபிரகாம் பண்டிதனா மாலே.
 
30.அன்று திருமா லமரர்க் கமுதகுடம்
ஒன்றுதந் தானதிக முண்டுகொலோ - சென்றுதஞ்சை
யாகரமே யென்னக்கொண் டாபிரகா மாலமுத
சாகரமே தந்திட்டான் றான்.

*****************