பக்கம் எண் :

7
சங்கீதத்தின் பெருமையும் அதன் உற்பத்தியும்.

சமாதானமும் மனுஷர்மேல் பிரியமுமுண்டாவதாக" வென்று பாடினார்களானால், சங்கீதத்தின் உபயோகமும் உபயோகிக்கும் சமயமும் எவ்வளவு மேலானவையென்று காண்கிறோம். மேலும், தேவலோகத்தில் தேவாசனத்தின்முன் சகல பரிசுத்தவான்களும் தேவதூதர்களும் தங்கள் தங்கள் சுரமண்டலங்களை வாசித்துக்கொண்டு, புதுப்பாட்டைச் சதா பாடுகிறதாகவும், "சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர்; வானமும் பூமியும் அவருடைய மகிமையால் நிறைந்திருக்கின்றன" வென்று முழங்குகிறதாகவும் சொல்லப் படுமானால், இம்மை மறுமை என்னும் இருநிலைகளிலும் சங்கீதத்தின் முக்கியத்தை எடுத்துச் சொல்லவும் வேண்டுமோ? இம்முக்கியமான விஷயத்தில், அதாவது, சங்கீதத்தின் மேன்மையையும் அதன் பூர்வத்தையும் சொல்லவேண்டிய விஷயத்தில், தெய்வத்தின் நித்திய காலத்தையும், பூமி உண்டான காலமுதல் இதுவரையும் சென்ற நாட்களையுமே அதற்குக் காலமாகவும், மோட்ச பிராப்பியையே அது தரும் மேன்மையாகவும் சொல்லக் கூடியதேயன்றி, வேறு சிறப்புச்சொல்ல இயலாத மேம்பாடுடையதாயிருக்கிறது.

மேலும், பெரியயோர்களால் சொல்லப்பட்ட பற்பல பாக்களும், பகவானைத்துதிக்கும் பாக்களும், இன்னிசைகலந்தபின்பே, மனதைப் பரவசப்படுத்தக்கூடியவைகளா யிருக்கின்றன வென்பதை நாமெல்லாரும் அறிவோம். பூமியில் மறைந்துகிடக்கும் வித்துக்கள் மழையினால் முளைத்துத் தழைத்துப் பூத்துக் காய்த்து நற்பலனைத்தருவதுபோல, முன்னோர்களின் பாக்கள் யாவும், இன்னிசை கலந்தபின்பே உயர்வான அர்த்தங்களை மனதிற்குப் புலப்படுத்தி ஆனந்தம் அடைவிக்கிறது.

"கல்லேனும் ஐய ஒருகாலத்தில் உருகும் என்கன்னெஞ்சம்உருகவிலையே."

"நாடகத்தால் உன்னடியார்போல் நடித்து."

என்ற பாட்டுகள் ஒரு இராகத்தில் வெவ்வேறு விதமான ஆலாபனம் செய்யப்படும் போது அவற்றில் அடங்கிய கருத்துகள் எத்தனையோ, அத்தனையும் மனதுக்குப் புலப்படும். அன்றியும், இன்னிசையானது, மனவருத்தம் தீர்த்துச் சமாதனாத்தைத்தரும்; சரீர துன்பத்தையும் போக்கடித்து இளைப்பாறுதல்தரும்; வேலையின் கஷ்டம் தோன்றாதபடி உற்சாகம் செய்து வைக்கும். இரவில் கண்விழித்து இராட்டினம் நூற்கும் ஸ்திரீகள், தங்கள் வருத்தம்தீர இன்னிசையோடு பகவானைத் துதிக்கிறார்கள். ஏற்றம் இறைக்கும் சமுசாரியும், மா அரைக்கும் ஸ்தியும், ஒடம்தள்ளும் ஓடக்காரனும். நாற்று நடும்பெண்களும், சாந்து இடிக்கும் கூலிகளும், பகவானைத் துதித்துப் பாடித் தங்கள் வருத்தத்தை மறந்து, தங்கள் வாழ்நாட்களை வெகு உல்லாசமாய்க் கழிக்கிறார்கள். கப்பரை ஏந்தி யாசிக்கும் பிச்சைக்காரனும் சேமக்கலங்கொட்டி யாசிக்கும் தாதனும், உபாதானம் வாங்கும் பிரமசாரியும், அன்னம்யாசிக்கும் அன்னக் காவடிக்காரனும் எக்காலக்கண்ணி, பரா பரக்கண்ணி, உடற்கூறு, நெஞ்சறிவிளக்கம் முதலிய ஞானப்பாடல்களை இனிய பண்ணோடு படித்துத் தங்கள் நாட்களைக் கழிக்கிறார்கள். தாயின் இனிய தாலாட்டுப் பாட்டைக் கேட்டுத் தூங்கும் குழந்தை இன்னும் கேட்க விரும்பி ஊம்கொட்டுகிறது. கன்றுக்குப் பால்கொடாத முரட்டுப் பசுக்கள், கீதாரி பாடும் இசைக்கு வசப்பட்டுப் பூரணமாகப் பால்கொடுக்கிறது. பிறர் கண்களுக்குப் புலப்படாமல் மறைந்து வசிக்கும் நாகப்பாம்பும், பாம்பாட்டிகள் ஊதும் மகடியின் இனிய நாதத்தைக்கேட்டுத் தன்னை மறந்து ஆனந்தத்தினால் படம்விரித்தாடுகிறது. கீதாரியின் இனிய புல்லாங்குழல் ஓசையைக்கேட்டு, மாடுகள் பின் செல்லுகின்றன. பட்டாளத்தில் வாசிக்கும் வாத்தியங்களின் ஓசையால், போர்வீரர்கள் உற்சாகமடைகிறார்கள். குதிரைகள், வாத்தியங்களின் தாளங்களுக்கு ஏற்றவிதமாய் கால்கள் வைத்து நடந்து வெகு தீவிரமாய் முன்னேறிச் செல்லுகின்றன. இனிய ஓசையுடைய பட்சிகள், அதிகாலையில் விழித்துப்பாடுவதையும், அதே