பக்கம் எண் :

8
கருணாமிர்த சாகரம். முதல் புஸ்தகம்.முதல் பாகம். இந்திய சங்கீத சரித்திரச் சுருக்கம்.

காலத்தில் கோவில்களிலும் ராஜ அரண்மனைகளிலும் சங்கீத வாத்தியங்கள் முழங்குவதையும், மணிகள் அடிப்பதையும், நாம் கேட்கிறோம். மாலையிலும் அப்படியே நாம் யாவரும் பகவானை இன்னிசையுடன் ஆராதிக்கிறோம். இப்படி, பலவிதத்திலும் மனுஷனுக்குச் சந்தோஷத்தைத் தருவதற்குச் சங்கீதத்தைவிடச் சிறந்தது வேறொன்றுமில்லை. சங்கீதமே, இவ்வுலகத்திலும் மறு உலகத்திலும் மேன்மையுடையது. சங்கீதத்தினால் துதிப்பதே நம்மை உண்டாக்கின கர்த்தனுக்குப் பிரியமானது. நாரதர் தும்புரு அநுமார் இராவணன் தாவீதரசன் முதலியவர்கள் சங்கீதத்தைக் கொண்டே தெய்வத்தின் கிருபையைப் பெற்றார்கள்.

சங்கீதமானது மனதைச் சாந்தப்படுத்தி, தெய்வத்தோடு ஒற்றுமைப்படச் செய்கிறது. சங்கீதமானது சகல நற்குணங்களையும் வளர்த்துத் தெய்வபதம் பெறச் செய்கிறது. இம்மேம்பாடுடைய சங்கீதத்தை அப்பியாசிக்கும் ஜனங்கள் எவர்களோ, அவர்களை அது உயர்த்தி அவர்களிருக்கும் தேசத்தை மேன்மைப் படுத்திச் சகல கலைகளிலும் செல்வத்திலும் தெய்வபக்தியிலும் விருத்தியடையச்செய்கிறது. ராஜனும் குடிகளும் சங்கீதத்தை மேலானதாக மதித்து அப்பியா சிப்பார்களானால், அவர்களைத் தேவர்களென்றும் தேவஜனங்களென்றும், அவர்கள் குடியிருக்குமிடத்தைத் தேவபூமியென்றும், மற்றவர்கள் கொண்டாடும் உன்னத நிலைக்குள்ளாகச் செய்கிறது. சங்கீதத்தைக் கொண்டு தெய்வத்தை ஆராதிக்கும் உத்தம அரசர்கள், தெய்வ பிரமாணங்கள் கடுகளவும் பிசகாமல், புலியும் பசுவும் ஒரு துறையில் தண்ணீர் குடிக்க, மன்னுயிர் யாவும் தன்னுயிராக நினைத்துப் பரிபாலனம் செய்து, நீதி இரக்கம் பொறுமை அன்பு சமாதானம் முதலிய உத்தம குணங்களோடு குடிகளை நடத்தி, இவ்வுலகத்திலேயே மோட்சானந்தத்தை நிலை நாட்டுகிறார்கள். இவ்வளவு மேம்பாடுடைய சங்கீதத்தை அற்பமாக நினைத்து லௌகிக வழிகளில் உபயோகப்படுத்துகிறவர்கள் புன்னெறியடைந்து மறைந்து போவார்கள் என்பது நிச்சயம். தெய்வத்தைத் துதிப்பதையே முதன்மையாகக்கொண்ட நம் முன்னோர் சங்கீத சாஸ்திரத்தைப்பற்றி மிக விரிவாக எழுதியிருந்தார்களென்றாலும், எழுதப்பட்டவைகள் இக்காலத்தில் பெரும்பாலும் அழிந்தும் நூதனமானவைகள் உண்டாகியும் பலதப்பறைகள் கலந்தும் இருப்பதனால், தெளிவாய் அறிந்து கொள்வதற்கு அரிதாயிருக்கிறது. சங்கீதம் உற்பத்தியான காலம் இடம் ஆதரித்து வளர்த்தவர்களின் பெயர் முதலியவைகளைத் திட்டமாய் அறிந்து கொள்வது இலேசான காரியமல்ல, என்றாலும், ஒருவாறு உலகத்தவர் வழக்கத்திலும் பழக்கத்திலும் நூல்களிலும் வழங்கிவரும் சில காரியங்களைக்கொண்டு, நாம் அறியக்கூடிய சில ஆதாரங்களைப் பார்ப்பது, ஒருவாறு நமக்குத் திருப்தியைத் தருமென்று எண்ணுகிறேன்.