II. சங்கீதம் பூர்வமாயுள்ளதென்பதற்குச் சத்தியவேத ஆதாரமும் அக்காலத்தில் வழங்கி வந்த சங்கீத வாத்தியங்களும். 1. ஜலப்பிரளயத்திற்கு முன் கின்னரமும் நாகசுரமும் இருந்தன வென்பது தென்னிந்திய சங்கீதத்தின் காலத்தை நாம் பார்ப்பதற்குமுன், இதற்கு அப்புறமாயிருக்க தேசங்களில் ஒருவாறு நிச்சயிக்கக்கூடியவையும் சரித்திர ஆராய்ச்சிக்காரர் ஒப்புக் கொள்ளக்கூடியவையுமாகிய சத்திய வேதத்தில் உள்ள சில ஆதாரங்களைப் பார்ப்போம் : இற்றைக்குச் சற்றேறக் குறைய 3400 வருஷங்களுக்கு முன்னிருந்த மோசே முனிவரால் எழுதப்பட்ட ஆதியாகமம் 4-ம் அதிகாரம் 20, 21, 22-ம் வாக்கியங்களில் "ஆதாள் யாபாலைப் பெற்றாள். அவன் கூடாரங்களில் வாசம் பண்ணுகிறவர்களுக்கும் மந்தை மேய்க்கிறவர்களுக்கும் தகப்பனானான். அவன் சகோதரனுடைய பெயர் யூபால். அவன் கின்னரக்காரர் நாகசுரக்காரர் யாவருக்கும் தகப்பனானான். சில்லாளும் தூபால் காயீனைப் பெற்றாள். அவன் பித்தளை இரும்பு முதலியவற்றின் தொழிலாளர் யாவருக்கும் ஆசாரியனானான்." என்று எழுதியிருக்கிறது. கின்னரக்காரருக்கும் நாகசுரக்காரருக்கும் தந்தையாகிய யூபாலும், பித்தளை இரும்பு முதலிய லோகங்களில் வேலை செய்யும் தொழிலாளிகளுக்குத் தந்தையாகிய தூபால்காயீனும் கிறிஸ்து பிறந்ததற்குச் சற்றேறக்குறைய 4000 வருஷங்களுக்கு முன்னிருந்ததாக வேதசாஸ்திரிகள் கணித்திருக்கிறார்கள். கிறிஸ்துவுக்குப் பின்னுள்ள 1914 வருஷங்களையும் அதோடு சேர்த்துப் பார்ப்போமேயானால் இற்றைக்குச் சற்றேறக்குறைய 5900 வருஷங்களுக்கு முன்னுள்ளதாகும். இவர்கள் இருந்த காலத்திற்குச் சுமார் 1650 வருஷங்களுக்குப்பின் ஜலப்பிரளயம் வந்ததாகத் தெரிகிறது. ஜலப்பிரளயகாலத்திற்கு முன்னாலேயே சின்ன ஆசியாவிலுள்ள பூர்வத்தார், சங்கீத வித்தையிலும் மற்றும் கைத்தொழில்களிலும் பேர் போனவர்களாய் இருந்தார்களென்று வெகு திட்டமாய்த் தெரிகிறது. மேலும் காயீன் ஒரு பட்டணத்தைக்கட்டி அதற்குத் தன் குமாரனாகிய ஏனோக்குடைய பெயரையிட்டானென்றும் சொல்லப்படுகிறது. அக்காலத்தில் ராக்ஷதர் பூமியிலிருந்தார்களென்றும், பெயர் பெற்ற மனுஷராகிய பலவான்கள் 969, 962, 900, 800, 700 முதலிய வருஷம் வரைக்கும் நீடித்த ஆயுளுடையவர்களாயிருந்தார்களென்றும், அங்கே சொல்லப் பட்டிருக்கிறது. இவர்கள் ஜலப்பிரளயத்திற்குமுன் னிருந்தவர்கள். இதுபோலவே, ஜலப் பிரளயத்திற்குமுன் இந்தியாவிலும், நீண்ட ஆயுள் பெற்ற மனிதர்களும் இராக்ஷதர்களும் பிரபலமான பட்டணங்களும் அரசர்களும் கின்னரம் நாகசுரம் வீணை புல்லாங்குழலும் தாளம் அபிநயம் முதலியவைகளைப்பற்றிச் சொல்லும் சங்கீத சாஸ்திரமுமிருந்தனவென்று இதன் பின் பார்ப்போம். 2. மோசே முனிவரின் பாட்டும், மிரியாமின் நடனமும் தம்புரோடு கூடிய பாட்டும். ஜலப்பிரளயத்திற்குப் பின்பு, இஸ்ரவேலர்கள் எகிப்தைவிட்டுப் புறப்படுகையில் எகிப்தியர் செங்கடலில் அமிழ்ந்தபோது, சத்துருபயம் நீக்கித் தங்களைக் காத்ததற்காக மோசே முனிவரும் இஸ்ரவேல் புத்திரரும், கர்த்தரைப் புகழ்ந்து பாடினார்களென்று யாத்திராகமம் 15-ம் அதிகாரம் முதலாவது வாக்கியத்திலும்,
|