தேர்ந்தவர். சாகித்தியம் செய்வதிலும் அதைச் சுரமண்டலம் வீணை முதலிய வாத்தியங்களில் வாசிப்பதிலும், விதம்விதமான வாத்தியக்கருவிகள் உண்டாக்குவதிலும் கைதேர்ந்தவர். தெய்வத்தினிடத்தில் மிகுந்த பக்தியுள்ளவர். தெய்வசமுகத்தில் பாடுவதும் நடனம்பண்ணுவதும் மற்றவர்களையும் அப்படிப்பாடியாடச் செய்வதும் அவருக்கு மிகவும் பிரியம். 2 சாமுவேல் 6-ம் அதிகாரம் 5, 14, 15-ம் வாக்கியங்கள் : "தாவீதும் இஸ்ரவேல் சந்ததியார் அனைவரும் தேவதாரு மரத்தால் பண்ணப்பட்ட சகலவித கீதவாத்தியங்களோடும் சுரமண்டலம் தம்புரு, மேளம், வீணை, கைத்தாளம் ஆகிய இவைகளோடும் கர்த்தருக்கு முன்பாக ஆடிப்பாடிக்கொண்டு போனார்கள். தாவீது சணல் நூல் ஏபோத்தைத் தரித்துக்கொண்டு தன் முழுப்பலத்தோடும் கர்த்தருக்கு முன்பாக நடனம் பண்ணினான். அப்படியே தாவீதும் இஸ்ரவேல் சந்ததியார் அனைவரும் கர்த்தருடைய பெட்டியைக் கெம்பீர சத்தத்தோடும் எக்காள தொனியோடும் கொண்டு வந்தார்கள்." மேல் வாக்கியங்களைக் கவனிக்கும்பொழுது, சற்றேறக்குறைய இற்றைக்கு 3000 வருஷங்களுக்கு முன்னே, சகலவிதமான வாத்தியங்களும் நடனமும் சங்கீதத்தோடு சேர்ந்து தேவ சந்நிதியில் உபயோகிக்கப்பட்டவென்று நாம் காண்கிறோம். மேற்காட்டிய சங்கீதக்காரனாகிய தாவீது, இஸ்ரவேல் ஜனங்களின் ஒரு முக்கியமான ராஜன் என்றும், சங்கீதமே உருவாக அவதரித்தவனென்றும் நாம் அறியவேண்டும். இவ்வரசன் எழுதிய சங்கீதங்களை, நாம் சத்திய வேதத்தில் மிகவும் விஸ்தாரமாகப் பார்க்கலாம். அவைகளில், ஒரு உத்தம பக்தனது நெஞ்சத்தின் கனிவும், தெய்வத்தில் அவன் வைத்திருக்கும் உறுதியும், அவன் மனநேர்மையும் மிகத்தெளிவாய் விளங்குகிறது. அவ்வளவு மகிமை பொருந்திய பாடகர்கள் தற்காலத்தில் கிடைப்பது அரிது. அவர் எழுதிய சங்கீதங்கள், அவைகளை வாசிக்கும் உண்மையான பக்தர்களுக்கு, அவரவர்கள் சமயங்களுக்கு ஏற்றவைகளாகப் புதிது புதிதான கருத்துகளை மனதில் உண்டாக்கக்கூடிய விதமாய் அமைந்திருக்கின்றன. உண்மையான ஒரு பக்தன், தான் புதிதாக தெய்வத்தைத் துதிக்கச் சில வார்த்தைகள் சொல்ல ஆரம்பிப்பானேயானால், அவ்வார்த்தைகள் தாவீது அரசன் சங்கீதத்தில் இருக்கிறதாகக் காண்பான். அவ்வளவு மேன்மை பொருந்திய பக்தனாகிய தாவீது அரசன் தாம் எழுதிய 92-ம் சங்கீதம் 1, 2, 3-ம் வாக்கியங்களில் "கர்த்தரைத் துதிப்பதும், உன்னதமானவரே. உமது நாமத்தைக் கீர்த்தனம் பண்ணுவதும், பத்து நரம்பு வீணையினாலும் தம்புருவினாலும், தியானத்தோடு வாசிக்கும் சுரமண்டலத்தினாலும், காலையிலே உமது கிருபையையும் இரவிலே உமது சத்தியத்தையும் அறிவிப்பதும் நலமாயிருக்கும்." என்றும், 150-ம் சங்கீதத்தில் "அல்லேலூயா, தேவனை அவருடைய பரிசுத்த ஸ்தலத்தில் துதியுங்கள்; அவருடைய வல்லமை விளங்கும் ஆகாய விரிவைப் பார்த்து அவரைத் துதியுங்கள். அவருடைய வல்லமையுள்ள கிரியைகளுக்காக அவரைத் துதியுங்கள்; மாட்சிமை பொருந்திய அவருடைய மகத்துவத்திற்காக அவரைத் துதியுங்கள். எக்காள தொனியோடே அவரைத் துதியுங்கள்; வீணையோடும் சுரமண்டலத்தோடும் அவரைத் துதியுங்கள், தம்புரோடும் நடனத்தோடும் அவரைத் துதியுங்கள்; யாழோடும் தீங்குழலோடும் அவரைத் துதியுங்கள். ஓசையுள்ள கைத்தாளங்களோடும் அவரைத் துதியுங்கள் பேரோசையுள்ள கைத்தாளங்களோடும் அவரைத் துதியுங்கள். சுவாசமுள்ள யாவும் கர்த்தரைத் துதிப்பதாக. அல்லேலூயா." என்றும் பாடியிருக்கிறதைக் கவனிப்போமானால், அவர் காலத்திலுள்ள சங்கீதத்தின் உயர்வையும் வாத்தியங்களின் மிகுதியையும் அவைகள் யாவையும் கொண்டு தெய்வத்தையே பக்திசெய்தா ரென்பதையும் நாம் காணலாம். இவ்வுத்தமனே தேவ சந்நிதியில் பாடகர்களைப்
|