பக்கம் எண் :

12
கருணாமிர்த சாகரம். முதல் புஸ்தகம்.முதல் பாகம். இந்திய சங்கீத சரித்திரச் சுருக்கம்.

பலபாகங்களாகப்பிரித்து, இராகத் தலைவர்களை ஏற்படுத்தி, முறை முறையாய்ப் பல வாத்தியங்களைக் கொண்டு தெய்வத்தைத் துதிக்கும்படி முதல் முதல் நியமித்தவர். இவர் புத்திரனாகிய சாலொமோன் அரசனும் மிகுந்த ஞானமுடையவனாயிருந்தான்.

 

6. சாலொமோன் ராஜன் சங்கீதமும்
 288 பாடகர்களை ஆலயத்தில் நியமித்ததும்.

இராஜாக்கள் 4, 32, 33-ம் வாக்கியங்களில்

"அவன் மூவாயிரம் நீதிமொழிகளைச் சொன்னான்; அவனுடைய பாட்டுகள் ஆயிரத்து ஐந்து. லீபனோனிலிருக்கிற கேதுரு மரங்கள் முதற்கொண்டு சுவரில் முளைக்கிற ஈசோப்புப் பூண்டு வரைக்குமுள்ள மரம் முதலிய தாபரங்களைக் குறித்தும் மிருகங்கள் பறவைகள் ஊரும் பிராணிகள் மச்சங்கள் ஆகிய இவைகளைக் குறித்தும் வாக்கியங்களைச் சொன்னான்."

என்று கூறியிருப்பதைக் காணலாம். இந்த ஞானமுள்ள அரசனும், தன் தகப்பனைப் போலவே தேவாலயத்தில் சங்கீத வாத்தியத்தோடு கடவுளைத் துதித்து ஆராதித்துவந்தான். தான் கட்டின மகிமைபொருந்திய தேவாலயத்தில் முறைமுறையாய்க் கீர்த்தனம்பாடத்திட்டம் செய்திருந்தான் என்று 1 நாளாகமம் 25, 6, 7-ம் வாக்கியங்களில் காண்போம். அதாவது,

"இவர்கள் அனைவரும் ராஜாவுடைய கட்டளைப்பிரமாணமாய் கர்த்தருடைய ஆலயத்தில் தாளங்கள் தம்புருகள் சுரமண்டலங்களாகிய கீதவாத்தியம் வாசிக்க, தேவனுடைய ஆலயத்தின் ஊழியமாக அவரவர் தங்கள் தங்கள் தகப்பன்மாராகிய ஆசாப், ஏதுத்தூன், ஏமான் என்பவர்கள் வசத்தில் இருந்தார்கள். கர்த்தரைப் பாடும் பாட்டுகளைக் கற்றுக்கொண்டு, நிபுணரான தங்கள் சகோதரரோடுங்கூட அவர்கள் இலக்கத்திற்கு இருநூற் றெண்பத்தெட்டுப் பேராயிருந்தார்கள்."

இந்த இருநூற்றெண்பத்தெட்டுப் பேரும் ஒவ்வொரு வகுப்புக்குப் பன்னிரண்டு பன்னிரண்டு பேராக 24 பாகங்களாக்கப்பட்டு, அந்தி சந்தி மத்தியானங்களில் ஒவ்வொருநாளும் தங்கள் தங்கள் முறைப்படி தேவாலயத்தில் கானம் செய்து வந்தார்கள். இவ்வளவு ஏராளமான பாடகர்கள் தங்கள்தங்கள் முறைப்படி ஆலயத்தில் கானம் செய்து வந்ததைப்போல, உலகத்தில் வேறு எந்த ராஜ்ஜியத்திலாவது எந்த ஆலயத்திலாவது நடந்துவந்ததென்று நாம் இதுவரையும் கேள்விப்பட்டதில்லை. இது சற்றேறக்குறைய இற்றைக்கு 2930 வருஷங்களுக்குமுன்னென்று கணக்கிடப்பட்டிருக்கிறது.

7. பாபிலோனில் நேபுகாத்நேச்சார் நிறுத்திய பொற்சிலையும்
 அதன் முன் வாசிக்கப்பட்ட வாத்தியக் கருவிகளும்.

பாபிலோன் என்னும் கல்தேயர் தலை நகரில் அரசாட்சி செய்து வந்த நேபுகாத்நேச்சார் என்னும் ராஜன், 60 முழ உயரமும் 6 முழ அகலமுமான ஒரு பொற் சிலையைப் பண்ணுவித்து, பாபிலோன் மாகாணத்திலிருக்கிற தூரா என்னும் சமபூமியில் நிறுத்தி, அச்சிலையின் பிரதிஷ்டைக்குச் சகலரும் வரும்படி அழைத்திருந்தான் என்று தானியேல் தீர்க்கதரிசனம் 3-ம் அதிகாரத்தின் துவக்கத்தில் நாம் பார்க்கலாம். அவ்வதிகாரத்தின் 4-ம் 5-ம் வாக்கியங்களில்

"கட்டியக்காரன் உரத்த சத்தமாய் : சகல ஜனங்களும், ஜாதிகளும், பாஷைக்காரருமானவர்களே உங்களுக்கு அறிவிக்கப்படுகிறது என்னவென்றால் : எக்காளம், நாகசுரம், கின்னரம், வீணை, சரமண்டலம் தம்புரு முதலான சகலவித கீத வாத்தியங்களின் சத்தத்தை நீங்கள் கேட்கும்பொழுது, நீங்கள் தாழ விழுந்து, ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்ளக்கடவீர்கள். * * * என்றான்."இவ்வசனத்தை நாம் கவனிக்கையில், கீதவாத்தியங்கள் ஆதிகாலத்தில் எப்படி உபயோகிக்கப்பட்டு வந்தனவென்பதைத் திட்டமாய்க் காண்கிறோம்.