பக்கம் எண் :

16
கருணாமிர்த சாகரம். முதல் புஸ்தகம்.முதல் பாகம். இந்திய சங்கீத சரித்திரச் சுருக்கம்.

அசீரியா தேசத்து ராஜனாகிய கோரேஸ் என்பவன், இற்றைக்கு 2454 வருஷங்களுக்குமுன் அதன்மேல் படையெடுத்து ஐபிராத்து ஆற்றின் தண்ணீரைப் பட்டணத்துக்குள் திருப்பிப் பெருக விட்டும் அக்கினியினால் கொளுத்தி நாசமாக்கியும் அநேக ஜனங்களை வெட்டியும் அரண்மனை வாசல் வருகிறவரையும் பாபிலோன் ராஜன் அறியாதிருந்தான். அதன்மேல், ராஜனையும் கொன்று பட்டணத்தைத் தன் வசப்படுத்திக்கொண்டான். நாள் செல்லச்செல்ல அதின் மகிமையும் குறைந்து படிப்படியாய் முற்றிலும் அழிந்து, மண்மேடுகளாய்க் கற்குவியல்களாய்த் துஷ்ட மிருகங்களும் ஜீவஜெந்துக்களும் செடிகளும் நிறைந்த சதுப்பு நிலமாய் நாளது வரையும் காணப்படுகிறது. யாத்திரை செய்கிறவர்களில் அதன் பூர்வ சரித்திரத்தையும் அதன் சிறப்பையும் கேட்டிருந்தவர்கள் அதில் நடுவில் போகும்பொழுது பிரமிப்பினாலும் ஆச்சரியத்தினாலும் ஒருவிதத் திகில் பிடித்தவர்களாவார்களாம். ஆந்தைகளின் அலறலும் நரிகளின் ஊளையும் துஷ்டமிருகங்களின் கூச்சலும் மிகப் பயங்கரமாயிருக்குமாம். யாத்திரீகர்கள் பூர்வகாலத்தின் நாகரீகத்தைக் குறிக்கும் சில அடையாளங்களையும் கல்லில் வெட்டப்பட்ட எழுத்துக்களையும் தங்கள் தேசத்திற்குக் கொண்டு போவார்களாம்.

11. நினிவே நகரமும் அதன் சிறப்பும் அதன் அழிவும். 

இம்மகா பாபிலோன் என்னும் நகரத்திற்கும் பெரிதாயிருக்க வேண்டுமென்று திகரீஸ் ஆற்றில் நிமிரோத்தினால் கட்டப்பட்ட நினிவே என்னும் நகரம், மூன்றுநாள் பயணம் நடந்து செல்லக்கூடிய விஸ்தாரமுடையதாக இருந்ததென்று சொல்லப்படுகிறது. 19 மைல் நீளமும் 11 மைல் அகலமும் 60 மைல் சுற்றளவுமுள்ளதாய் ஆறு லட்சத்திற்கு மேற்பட்ட ஜனங்களுடையதாயிருந்தது. நூறு அடி உயரமும், மேல் உயரத்தில் மூன்று வண்டிகள் பக்கம் பக்கமாக ஓடக்கூடிய விசாலமும், ஒன்றொன்று 200 அடி உயரமுள்ள 1500 கோபுரங்களுடைய கோட்டையுமிருந்தது. கோட்டைக்குள்ளாக உள்கோட்டை இரண்டும் அகழ் இரண்டுமாக மிகவும் அரணிப்பாய்க் கட்டப்பட்டிருந்தது. கிறிஸ்துவுக்குமுன் 862-ம் வருஷத்தில் யோனா பிரசங்கிக்கபோன நகரம் இதுவே. இம்மகாநகரமும், கிறிஸ்துவுக்கு முன் 753-ம் வருஷம் அகாஸ்வேரு ராஜனால், இப்போது காணப்படும் சில சுவர்களும் அகழ்களும் தவிர, மற்ற யாவும் குப்பை மேடாக்கப்பட்டது.

12. அகாஸ்வேரு ராஜனும் ராஜ ஸ்திரீயும் செய்த
 விருந்துகளின் சிறப்பு.

அகாஸ்வேரு ராஜன் இந்துதேசமுதல் எத்தியோப்பியா தேசம் வரைக்குமுள்ள 127 நாடுகளை அரசாண்டானென்று சொல்லியிருப்பதோடு, மிகவும் சம்பிரமமான விருந்து தன் அதிகாரத்திற்குள்பட்ட நாடுகளின் அதிபதிகளுக்கும் பிரபுக்களுக்கும் ஊழியக்காரர்களுக்கும் 180 நாள் செய்தானென்றும், அது முடிந்தபின் தன் ராஜ அரண்மனையிலுள்ள சிங்காரத் தோட்ட மண்டபத்தில் தன் அரண்மனைக்கு வந்திருந்த பெரியோர் முதல் சிறியோர் வரைக்குமுள்ள யாவருக்கும் ஏழுநாள் விருந்து செய்தானென்றும், அப்படியே ராஜஸ்திரீயாகிய வஸ்தியும் ஸ்திரீகளுக்கு ஒரு விருந்து செய்தாளென்றும் சொல்லப்படுகிறது. எஸ்தரின் சரித்திரம் 1-ம் அதிகாரம் 6-ம் வாக்கியத்தில் மண்டபத்தின் சிறப்பைப் பின் வருமாறு காணலாம்.

"அங்கே வெண்கலத்தூண்களின் மேலுள்ள வெள்ளி வளையங்களில் மெல்லிய நூலும் சிவப்பு நூலுமான கயிறுகளால் வெள்ளையும் பச்சையும் இளநீலமுமாகிய தொங்குதிரைகள் விதானித்திருந்தது; சிவப்பும் நீலமும் வெள்ளையும் கறுப்புமான கற்கள் பதித்திருந்த தளவரிசையின்மேல் பொற் சரிகையும் வெள்ளிச்சரிகையுமான மெத்தைகள் வைக்கப்பட்டிருந்தது. பொன்னால் செய்யப்பட்ட நானாவித பாத்திரங்களிலே பானம் கொடுக்கப்பட்டது."