III. ஜலப்பிரளயத்தால் அழிக்கப்பட்ட தமிழ் நாடுகளும் கலைகளும். 1.ஜலப்பிரளயத்திற்கு முன்னுள்ள சரித்திரங்களைப்பற்றிக் கால நிச்சயம் செய்வது சற்றுப் பிரயாசையென்பது. ஜலப்பிரளயத்திற்கு முன்னுள்ள சரித்திரங்களை நுட்பமாகச் சொல்லப்போனால், தற்காலத்தவருக்குப் பிரியமாயிராது. அவைகள் பழமையான கதைகளாக எண்ணப்படுமேயொழிய, உண்மையாய் நடந்தவையென்று ஒப்புக்கொள்ளப்படுவது சற்றுக் கடினமாகும். உண்மையை அறியப் பிரயாசைப்படும் சரித்திர ஆராய்ச்சிக்காரர், பூமியில் புதைந்திருக்கும் பிரமாண்டமான பிராணிகளின் எலும்புகளைக் கொண்டும் மனிதர்களின் எலும்புகளைக் கொண்டும், கல்லில் வெட்டப்பட்ட எழுத்துக்களைக் கொண்டும், பூர்வ சாசனங்களைக் கொண்டும், கண்டெடுக்கிற பணங்களின் முத்திரைகளைக் கொண்டும், புதைந்திருக்கிற நகரங்களைக் கொண்டும், இயற்கையைக் கொண்டும் மேற்சொல்லியவைகளைப் பார்க்கிலும் அதிகக் காலங்களைச் சொல்லுவார்கள்; அதுவும் உண்மையே. இந்தியாவில் அதிபூர்வமாக எண்ணப்படும் எத்தனையோ பட்டணங்களும் கோட்டைகளும், ஒன்றன்பின் ஒன்றாய்த் தோன்றியழிந்து, இக்காலத்தில் மண்மேடுகளாய்க் காணப்படுகின்றன. அவைகளின் பேரும் பிரஸ்தாபமும், அக்காலத்தவர் பராக்கிரமமும், கலைகளின் சிறப்பும், பக்தியின் உயர்வும் பழங்கதையாய்ச் சொல்லப்பட்டு வருகின்றனவேயன்றி, நிதரிசனமாக ஒன்றையும் காணோம். இது காலத்தின் இயற்கை. இந்தியாவில், பிரளயத்துக்கு முன்னுள்ள காலத்தில், பராக்கிரமமுள்ள ராக்ஷதர்களும், தபசில் சிறந்த ரிக்ஷிகளும், சத்தியமும் நீதியும் தவறாமல் ஆண்டு கொண்டிருந்த ராஜாக்களும், மிகுந்த பராக்கிரமமுள்ள போர் வீரரும், பொருளின் அருமை தெரிந்த வர்த்தகர்களும், கைத் தொழிலில்தேர்ந்த தொழிலாளர்களும், கலைகள் ஒவ்வொன்றிலும் தேர்ந்த வித்வான்களும் இருந்தார்களென்று நாம் அதிகமாகக் கேள்விப்படுகிறோம். இந்தியாவின் பூர்வசரித்திரங்களுக்குத் திட்டமான காலவரையறை இல்லாததினாலும், அவைகளில் மிகுந்த கற்பனைகள் கலந்திருப்பதினாலும் திட்டம் சொல்லக் கூடாதநிலையில் நின்று தத்தளிக்க வேண்டியதாயிருக்கிறது. ஆனாலும், பூர்வமான சில நூல்களில் அங்கங்கே சொல்லப்படும் சில காரியங்களினால் உண்மையை ஒருவாறு அறியவும் நிச்சயிக்கவும் கூடியதாயிருக்கிறது. இப்படி நிச்சயிக்கக் கூடியவைகளைப் பற்றியும் ஒன்றுக்கொன்று ஒவ்வாமையான அபிப்பிராயங்களுடன் ஒருவாறு சமாதானத்துக்கு வரவேண்டியதா யிருக்கிறதேயொழிய, உள்ளது உள்ளபடி நிச்சயிக்க இயலாததாயிருக்கிறது. அப்படியிருந்தாலும், உலகத்திற்குப் பொதுவான சில சம்பவங்களைக் கொண்டும் நூல்களைக் கொண்டும் இந்தியாவின் பூர்வீகத்தைப் பற்றி நான் சொல்வது, உண்மையை விசாரிக்கும் விவேகிகளுக்கு அவைகளை ஞாபகப்படுத்தக் கூடியதாயாவது இருக்குமென்று எண்ணிச் சில வார்த்தைகளைச் சொல்லத் துணிந்தேன். 2. திராவிட தேசத் தரசனாகிய சத்தியவிரதனும் ஜலப்பிரளயமும். பாகவத வசனம், எட்டாவது ஸ்கந்தம், 24-ம் அத்தியாயம். "போன கல்பத்தினுடைய அந்தத்தில் பிரம்மாவினுடைய நித்திரையினால் உண்டான நைமித்திகமென்று சொல்லப்பட்ட பிரளயம் உண்டாச்சுது. அந்தப் பிரளயத்தில் பூமி முதலான லோகங்களெல்லாஞ் சமுத்திரத்தில் முழுகிப்போச்சுது. அப்போது காலவசத்தினால் நித்திரையடைந்து சயனிக்க வேணுமென்கிற இச்சையையுடையவனான பிரம தேவனுடைய முகத்தினின்றும் உண்டாகாநின்ற வேதங்களைச் சமீபத்திலிரா நின்ற அயக்கிரீவாசுரனானவன் அபகரித்தான். அப்போது ஸ்ரீ பகவானாயும் சர்வ நியந்தாவாயுமிருக்கிற ஸ்ரீ ஹரியானவர், தானவேந்திரனான அயக்கிரீவனுடைய சேஷ்டையை அறிந்து மச்சிய ரூபத்தைத் தரித்தார்.
|