பக்கம் எண் :

19
திராவிட தேசத் தரசனாகிய சத்தியவிரதனும் ஜலப்பிரளயமும்.

அந்தக் காலத்தில் சத்திய விரதனென்று பெயரையுடையவனாயும் மகானாயும் பகவானிடத்தில் பக்தியுடையவனாயுமிருக்கிற ஒரு ராஜ ரிஷியானவன், ஜலத்தையே பானம் பண்ணிக் கொண்டு தபசு செய்து கொண்டிருந்தான். யாதொரு அந்தச் சத்திய விரதனென்கிற ராஜாவே இந்தக் கல்பத்தில் விவசுவானுடைய பிள்ளையாயும் சிரார்த்த தேவனென்று பிரசித்தனாயும் ஸ்ரீ ஹரியினால் மனுவாகக் கல்பிக்கப்பட்டிருக்கிறான். அந்த ராஜரிஷியானவன், ஒருக்கால் கிருதமாலா நதியில் ஜலதர்ப்பணஞ் செய்யும்போது, அவனுடைய கையில் இராநின்ற ஜலத்தில் ஒரு மச்சியமானது இருந்தது. திரவிட தேசாதிபதியான அந்தச் சத்திய விரதனென்கிற ராஜரிஷியானவன், தன்கையிலிராநின்ற அந்த மச்சிய ஜலத்தை நதிஜலத்திலே விட்டுவிட்டான். அப்போது அந்த மச்சியமானது மகா தயாளுவான அந்தச் சத்திய விரதனைக் குறித்து மிகவும் தைரியத்தோடு ஒரு வார்த்தை சொல்லிற்று.

வாராய் ராஜரிஷியே! இன்றைக்கு ஏழாநாள் இந்தப் பூமி முதலான மூன்று லோகமும் பிரளய சமுத்திரத்தில் முழுகப்போகின்றது. அப்போது நம்மால் ஏவப்பட்டதாயும் விசாலமாயும் ஒரு ஓடமானது உன்னை அடையப் போகின்றது. நீயும் சமஸ்தமான ஒஷதிகளையும் நானாவிதங்களான வித்துக்களையும் அந்த ஓடத்தில் ஏற்றிக்கொண்டு, சப்தரிஷிகளோடும் சர்வ பலத்தோடுங் கூடினவனாய் அந்தப் பெரிதான ஓரிடத்தில் ஏறிக்கொண்டு, மகா அந்தகாரமான சமுத்திரத்தில் மகாரிஷிகளுடைய கடாட்சத்தினால் தீரானாய்ச் சஞ்சரிக்கப் போகிறார். அப்போது மகா பலவானான வாயுவினால் அலைக்கப்பட்ட அந்த ஓடத்தைச் சமீபத்தில் வரா நின்ற என்னுடைய கொம்பிலே சேர்த்து, மகா சர்ப்பத்தினால் இழுத்துக் கட்டக்கடவாய். அப்போது நான், ரிஷிகளோடுகூட இராநின்ற உன்னையும் ஓடத்தையுமிழுத்துக் கொண்டு, பிரமாவினுடைய ராத்திரி காலமானது எவ்வளவோ, அவ்வளவு காலமும் சமுத்திரத்தில் சஞ்சரிக்கப் போகிறேன். அப்போது நீ பண்ணப்பட்ட பிரசினங்களினால் பரப்பிரம சொரூபமான என்னுடைய மகிமையை யதார்த்தமாக அறியப் போகிறாயென்று சொல்லிற்று. பின்பு சமுத்திரமானது வருஷிக்கப்பட்ட மேகங்களினால் விர்த்தியடைந்து, கரைபுரண்டு, பூமியெங்கும் வியாபித்தது. அந்த ராஜரிஷியும் பகவத் பாதாரவிந்தத்தைத் தியானம் பண்ணிக் கொண்டிருக்கும் போது தன்னண்டையே வராநின்ற ஓடத்தைப் பார்த்து, அந்த ஓடத்தில் ஓஷதிகளையெல்லா மேற்றிக் கொண்டு சப்தரிஷிகளோடுங்கூட தானுமேறிக்கொண்டான். அப்போது அந்த ரிஷிகளெல்லாம் சந்துஷ்டாளாய் அந்த ராஜரிஷியைப்பார்த்து, பகவானுடைய பாதாரவிந்தத்தைத் தியானம் பண்ணுவீராகில் நம்மை இந்தச் சங்கடத்தினின்றும் ரட்சிப்பாரென்று சொல்லாநின்ற அந்த ரிஷிகளுடைய வார்த்தையைக் கேட்டு, ராஜரிஷியும் பகவானையே தியானம் பண்ணிக் கொண்டிருந்தார்."

பாகவத வசனம் ஒன்பதாவது ஸ்கந்தம், முதலாம் அத்தியாயம்.

"திராவிடதேசாதிபதியான சத்தியவிரதனென்கிற யாதொரு ராஜரிஷியானவன் பூர்வ கல்பாந்தத்தில் மகாபுருஷனான ஸ்ரீ பகவானுடைய சேவையினால் உத்தமமான தியானத்தையடைந்தானோ, அந்த ராஜரிஷியே இப்போது வைவசுதமனுவாக இருக்கிறானென்று என்னால் கேட்கப்பட்டது. இட்சுவாகு முதலான ராஜாக்கள் அந்த மனுவினுடைய புத்திராளென்று உம்மாலே சொல்லப்பட்டார்கள்."

இதினின்றும் அறியவேண்டியது என்னவென்றால், திராவிட தேசாதிபதியான சத்திய விரதன் என்கிற ராஜரிஷியானவர் மிகுந்த தபசு பண்ணிக் கொண்டிருந்தாரென்பதும், அக்காலத்தில் பூமி ஜலப்பிரளயத்தினால் அழிக்கப்பட்டதென்பதும், சத்தியவிரதன் என்கிற திராவிட தேசாதிபதியும் ஒரு விசாலமான கப்பலில் சமஸ்தமான ஓஷதிகளுடனும் நானாவிதமான வித்துக்களுடனும் சப்தரிஷிகளுடனும் ஏறிக்கொண்டு, மலையின் அடிவாரத்தில் தங்கினாரென்பதும், மகாவிஷ்ணு இப்பக்தனைக் காப்பாற்றுவதற்காகத் தமது முதல் அவதாரமாகிய மச்சாவதாரத்தை எடுத்தாரென்பதுமே. இவ்விருத்தாந்தம், சத்திய வேதாகமத்தில் ஜலப்பிரளயத்தையும் நோவாவையும் நோவா காப்பற்றப்பட்ட பேழையையும் பற்றிச் சொல்லப்பட்டிருக்கும் வரலாற்றுக்கு முற்றிலும் ஒத்திருக்கிறது. இடம் மாத்திரம் ஆசியாத்துருக்கியின் (Asiatic Turkey) ஒரு பாகமாகவும் இந்தியாவின் தென்பாகமாகவும் பேதப்படுகிறது.