துருக்கி பாரசீகம் (Persia) பெலுகிஸ்தான் (Baluchistan) இத்தேசங்களின் சில பாகமும் தென்னிந்தியாவின் கீழ்பாகமும் கடற்கரைமணல்களால் நிரப்பப்பட்டிருப்பதும், மணல் நிறைந்த இடங்களில் அநேக கிராமங்களும் பட்டணங்களும் அழிந்துகிடப்பதும், மணலுக்குக் கீழே பூர்வமாயுள்ள தன்தரை காணப்படுவதும், ஒருகாலத்தில் ஜலப்பிரளயம் உண்டாகி அனேகதேசத்தை அழித்ததென்று சொல்ல இடந்தருகின்றன. ஜலப்பிரளயம் உண்டானது யூதர்கள் (Jews) தாங்கள் சொல்லும் கணக்கின்படி கி. மு. 2105-ம் வருஷம் அதாவது இற்றைக்கு 4019 வருஷங்களுக்குமுன் என்றும், கிளெமென்ட் அலக்சான்ட்ரினாஸ் (Clement Alexandrinas) என்பவர் கி. மு. 3475-ம் அதாவது இற்றைக்கு 5389 வருஷங்களுக்கு முன் என்றும், இயூரிபியஸ் என்பவர் கி. மு. 2459-ம் அதாவது இற்றைக்கு 4373 வருஷங்களுக்கு முன் என்றும், பீட் (Bede) என்பவர் கி. மு. 3544-ம் அதாவது இற்றைக்கு 5458 வருஷங்களுக்கு முன் என்றும், அர்ஷர (்Ursher) என்பவர் கி. மு. 2349-ம் அதாவது இற்றைக்கு 4263 வருஷங்களுக்குமுன் என்றும், ஹேல்ஸ்(Hales) என்பவர் கி. மு. 3153-ம் அதாவது இற்றைக்கு 5067 வருஷங்களுக்கு என்றும் சொல்லுகிறார்கள். இவைகள் ஒன்றுக்கொன்று ஒவ்வாமையாயிருக்கிறது இயல்புதான்; ஏனென்றால், இக்காலங்களை நிர்ணயம் பண்ணுகிறவர்கள், பிரளயமுண்டான அக்காலத்திலிருந்தவர்களல்ல. அதற்குச் சுமார் 1000, 2000, 4000, 5000 வருஷங்களுக்குப் பின்னிருந்தவர்கள். ஜலப்பிரளயம் உண்டான காலத்தில் அல்லது அதற்குமுன் வழங்கியகாலத்தில் உண்டான காலக் கணக்குகள் ஒன்றும் திட்டமாய் அகப்படவில்லை. காலக்கணக்குகள் ஒவ்வொரு ராஜ்யத்தின் முக்கியமான பட்டணங்களிலுள்ள பத்திரங்கள் முதலிய எழுத்து ஆதாரங்கள் மூலமாய் அறியப்பட வேண்டும். அப்படி அறிவதற்கேதுவில்லாமல் பிரதான நகரங்கள் அழிந்து போனபடியினால், அதற்குப் புறம்பேயிருக்கும் மற்றவர்கள் சொல்லும் காலக்கணக்கோடு நாம் திருப்தியாயிருக்க வேண்டுவதன்றி வேறு என்ன செய்யக்கூடும்? மிகவும் பிரபலமாயிருந்த துவாரகையும் இந்திரப்ப் பிரஸ்தம் என்றழைக்கப்பட்ட பட்டணமும் வெகு காலத்துக்கு முன்னேயே அழிந்து அடையாளம் தெரியாமல் போனது போலவே மற்றும் அநேக இடங்களும் போயிருக்க வேண்டும். 6. ஜலப்பிரளயகாலத்தில் அழிந்துபோன தென்னிந்தியாவின் பெரும்பாகம். ஜலப்பிரளயத்தினால் அழிக்கப்பட்ட பல சிறுபாகங்களைத் தவிர இந்தியாவின் தென்பாகத்திலுள்ள பெரும்பாகமும், சமுத்திரத்தில் முழுகிப் போயிருக்க வேண்டுமென்று காட்டப் பல சாட்சிகள் அகப்படுகின்றன. இதைவாசிக்கும் கனவான்களே, ஜலப்பிரளயத்துக்கு முன்னுள்ள காலத்தில், கின்னரம் நாகசுரம் செய்கிறவர்களும் அவைகளை உபயோகப்படுத்துகிறவர்களும் இருந்தார்களென்று சத்திய வேதத்தில் சொல்லியபடி, தென்னிந்தியாவின் தென்பாகத்தில் கடலால் அழிக்கப்பட்ட தென்மதுரையிலும், ஆயிரம் தந்திகள் பூட்டிய நாரதப்பேரியாழ் முதலிய வீணைகளும் நாரதீயம் அகத்தியம் பெருநாரை பெருங்குருகு என்னும் இசை நூல்களும் இருந்தனவாகச் சொல்லப்படுகிறதினால், தென்னிந்திய சங்கீதத்தின் பூர்வீகத்தை அறிவதற்காக அந்நாட்டைப் பற்றி இன்னும் சில காரியங்களை விசாரிப்பது நல்லதென்று தோன்றுகிறது. இவ்விஷயம் சற்று விரிவாகுமாகையால், என்சுயமாக அதிகம் சொல்லாமல், தென்னிந்தியாவின் தென் பாகத்தைப் பற்றி மற்றவர்கள் சொல்லும் அபிப்பிராயத்தில் சில பாகங்களை எடுத்துத் தொகுத்து இங்கே காட்டுகிறேன்.
|