பக்கம் எண் :

34
கருணாமிர்தசாகரம்-முதல் புஸ்தகம்-முதல் பாகம்-இந்திய சங்கீத சரித்திரச் சுருக்கம்

படைத் தரைக்குக் கீழே அவைகள் புதைந்து கிடந்தன. ஆகையால் எப்படிப் பார்த்தாலும், குறைந்த பட்சம் 50,000 வருஷங்களுக்கு மேலாகவே அவைகள் அங்கே இருந்திருக்க வேண்டும். நீலநதியின் பள்ளத்தாக்கில் வெட்டியெடுக்கப் பட்டவைகளான பண்டைக்காலத்து நாகரீக சின்னங்கள் யூதருடைய வேதசரித்திரத்துக்கு முற்பட்டவைகளாயிருக்கின்றன. அங்குள்ள பாறைகளின் முதல் அடுக்கிலும் ஸ்தாவரஜங்கம சிலாரூபங்களடங்கிய அடுக்குகளிலும் சிருஷ்டிகர்த்தாவினுடைய அதிசயச் செயல்களின் அறிகுறிகள் காணப்படுகின்றன. இவைகளெல்லாம் ஆதியாகமத்தில் கூறியுள்ள சிருஷ்டிப்புச் சரித்திரத்துக்கு நீண்டகாலத்திற்கு முற்பட்டவை களாயிருக்கின்றன. மொன்றிஜூமாவின் பேர்பெற்ற தோட்டத்தில் 6,000 வருஷங்களுக்கு மேற்பட்ட ஒரு மரத்தைப் பற்றியும் மத்திய அமெரிக்காவில் கொஞ்சங்குறைய 20,000 வருஷங்களாயிருக்கிற இன்னொரு மரத்தைப் பற்றியும் ஹம்போல்ட்ஸ் என்பவர் விபரமாய்க் கூறுகிறார்."

வடஅமெரிக்கா இந்தியரின் தேக அமைப்பையொத்த மனித எலும்புகள் நியூஆர்லியன்ஸ் என்னும் இடத்தில் வெட்டியெடுக்கப்பட்டனவென்றும் அவைகள் குறைந்தது 50,000 வருஷங்களுக்கு மேலுள்ளதாக இருக்க வேண்டுமென்றும் சொல்லுகிறார். பிரளயத்தினால் காடுகளும் சோலை களுமாயிருந்த இடங்கள் மண்ணால் மூடப்பட்டு மறுபடியும் தரையாக அதன் மேல் அநேக ஆயிரம் வருஷங்களானதின் பின் வேறொரு பிரளயமுண்டாகி மரங்கள் சோலைகளை அழித்து மண்ணால் நிரப்பியதாகவும் இப்படியே நாலுதரம் பிரளயமுண்டாகி வனங்களை அழித்து மண்படையுண் டாயிருக்கிறதாகவும் தெரிகிறது. ஒவ்வொரு மண்படையின் குறிப்புகளினாலும் அப்படைகளிலிருக்கும் மரங்களின் குறிப்புகளினாலும் ஒவ்வொரு படையும் உத்தேசம் அநேக ஆயிரம் வருஷங்களாகி யிருக்க வேண்டுமென்று சாஸ்திரிகள் கணக்கிடுகிறார்கள். இதில் நாலாவதாயிருக்கும் அடிப்படையில் வடஅமெரிக்க இந்தியரின் அங்கங்கள் புதைந்திருப்பதைக் கண்டுபிடித்தவர்கள் அவைகள் மண்ணில் 50,000 வருஷங்களுக்கு முன்னாலேயே புதைந்திருக்க வேண்டுமென்று சொல்லுகிறார்கள். இது போலவே நீலநதியின் கரையோரங்களிலும் பூர்வ நாகரீகத்தைக் குறிக்கும் சின்னங்களிருந்ததாகச் சொல்லுகிறார்கள். மேலும் ஜீவனுள்ளவைகளில் வெகுகாலம் நீடித்திருக்கக்கூடிய பப்பரப்புளி யென்றமாம் 20,000 வருஷங்கள் ஆயுளுடையதாயிருக்கிறதென்று சொல்லுகிறார்கள். இம்மரம் தென்னிந்தியாவில் அங்கங்கே நாளது வரையும் காண்கிறோம். தென்னிந்தியாவிற்கு இது இயற்கையாயுள்ள மரமேயொழிய நூதனமான மரமல்ல. மேலும் இம்மரத்தின் தன்மையை அறிந்த சித்தர்கள் அதில் ஒரு சிறு துவாரஞ்செய்து துருசு சுண்ணத்தை அமுக்கி வைப்பார்கள்; சிறிது நேரத்துக்குள் அதிலிருந்து தண்ணீர் ஊறும்; அந்தத் தண்ணீரைச் சிறு பாத்திரங்களில் பிடித்துத் தங்களுக்கு வேண்டிய அளவு சாப்பிடுவார்கள். சாப்பிட்டபுடன் தங்களையறியாத மயக்கம் அவர்களுக்கு உண்டாக நாலுநாள் பரியந்தம் பிரக்கினையற்றுப் படுத்திருந்து பின் எழுந்திருப்பார்கள். இப்படி அதன் ரசத்தைச் சாப்பிடுவது அவர்கள் செய்யும் யோக சாதனைக்கும் கற்பசாதனைக்கும் அனுகூலமானதென்று எண்ணப்படுகிறது. ஒரு மரத்தின் உபயோகத்தை நன்றாய் ஒரு தேசத்தார் அறிந்திருப்பார்களானால் அந்த மரம் அத்தேசத்திற்கேயுரியதென்று சொல்லாமலே விளங்கும். தென்னிந்தியாவின் சில இடங்களில் இதைப் பூத விருக்ஷமென்று சொல்லுவார்கள். இது பரிசுத்தமான விருக்ஷமென்று பொதுவாக எண்ணப்படுகிறது. ஆகையினால் அதன் கிளைகளையாவது இலைகளையாவது ஒருவரும் சேதப்படுத்துகிறதில்லை. அதன் அடிப்பாகம் பெருத்து நுனிப்பாகம் சிறுத்துக் கோபுரத்தின் சாய்வாக வளர்ந்திருக்கும். இம்மரத்தைத் தஞ்சாவூர் ஜில்லாவிலும் ஏராளமாய்க் காணலாம். திருநெல்வேலி மதுரை முதலிய இடங்களிலும் அங்கங்கேயிருக்கிறது. தஞ்சாவூரில், சிவகங்கைத் தோட்டத்தில் ஒரு மரமும் வெண்ணாற்றங்கரையில் ஒரு மரமுமிருக்கிறது. இப்படியே காவேரிப் பாய்ச்சலிலும் அனேக மரங்களிருக்கலாம். இம்மரங்களைக் குறுக்காக அறுத்து அவைகளில் சுற்றிச் சுற்றியிருக்கும் ரேகைகளைக்கொண்டு இத்தனை வருஷமாக இம்மரங்கள் நிற்கின்றன