இரண்டாவது கரகரப்புள்ளகிழங்குகளையும் காய்களையும் கொட்டைகளையும் சுட்டுத்தின்ன நெருப்பின் உபயோகத்தை அறிந்தகாலமென்றும், மூன்றாவது சமைப்பதற்கு அனுகூலமாக மட்பாத்திரங்களையுண்டாக்கி அதில் பாகப்படுத்திய தானியவகைகளையும் காய்கறி கீரைகளையும் சாப்பிட்டு வந்த காலமென்றும் நாம் நினைக்க வேண்டும். இன்னும் கருவிகள் சம்பந்தமாகவும் வஸ்திர சம்பந்தமாகவும் வாசஸ்தல சம்பந்தமாகவும் சரித்திர ஆராய்ச்சிக்காரர் வெகு பூர்வீகத்தைச் சொல்லுகிறார்கள். அவ்விதமாய் நாம் கவனிக்கையில் ஒரு எகிப்தியன் மண்பாத்திரம் செய்த காலம் மனுஷன் உற்பத்தியான காலத்திற்கு வெகுகாலத்திற்குப் பின்னுள்ளதாயிருக்க வேண்டும். ஐம்பதினாயிரம் வருஷங்களுக்குமுன் புதைந்திருக்க வேண்டுமென்று சொன்ன மனித எலும்பைக் கொண்டு மனிதர்கள் வெகுகாலத்திற்கு முன்னாலேயுண்டாயிருக்க வேண்டுமென்று தெரிகிறது. அமெரிக்காவிலும் எகிப்திலும் காணப்படும் பொருள்கள் தென்னிந்திய கண்டத்திலும் அதாவது லெமூரியாவிலும் மனிதர்களிருந்திருக்க வேண்டுமென்று ருசுப்படுத்துகின்றன. ஆகையினால் சுமார் 8,000 வருஷங்களுக்கு முன் தொல்காப்பியரிருந்தாரென்றும் 12,000 வருஷங்களுக்கு முன்பே முதல் சங்கம் ஆரம்பித்ததென்றும் நாம் சொல்வது அதிகமாகாது. 8,000 வருஷங்களுக்கு முன்னும் 12,000 வருஷங்களுக்குப் பின்னுமான முதற்சங்கத்தில் அகஸ்தியரிருந்தாரென்றும் அதில் இயல் இசை, நாடகமென்னும் முத்தமிழைப் பற்றியும் இலக்கணஞ் சொன்னார் என்றும் சொல்வது அற்ப ஆயுளுள்ள நமக்கு ஆச்சரியமாகத் தோன்றும். இற்றைக்கு 1,800 வருஷங்களுக்கு முன்னிருந்து இறையனாரகப் பொருளுக்கு உரையெழுதிய நக்கீரனார் சொல்லுகிறதை நாம் நம்பாமல் இருக்கலாமோ? அவர் சொல்லிய வசனங்கள் பொய்யாயிருக்குமோ? 'நெற்றிக் கண்காட்டினும் குற்றம் குற்றமே'யென்று பரமசிவனோடு வாதாடிய ஒரு வித்வசிரோமணி பொய் சொல்லுவாரா? அவர் அப்படிச் சொன்னாலும் அவர் காலத்திலிருந்த தமிழ்ச் சங்கப் புலவர்கள் மறுக்காமல் விட்டு விடுவார்களா? ஒருவர் எதையுஞ் சொல்லுகிறது, தாட்சணியத்திற்காக மற்றவர் கேட்டுக் கொண்டிருக்கிறது என்ற இக்காலமல்லவே அக்காலம். இக்காலத்தை அடியார்க்கு நல்லாரும் சொல்லுகிறார்; ஆகையினால் இக்காரியம் பூர்வந்தொட்டு உண்மையானதாகவே தோன்றுகிறது. தொல்காப்பியத்தில் காணப்படும் முதல் ஊழியிலிருந்த தேசத்தின் எல்லைகளும் தமிழ்ப்பாஷையின் சிறந்த இலக்கணமும் இற்றைக்கு 8,000 வருஷங்களுக்கு முன்னாலேயே சொல்லப்பட்டிருக்கிறதே போதுமானதாகத் தோன்றுகிறது. 15. தென்னிந்தியாவின் மார்க்கம். பூர்வத்திலுள்ளோரைப்பற்றி நாம் விசாரிக்க ஆரம்பிப்போமானால், நீதிதவறாமல் அரசாட்சிசெய்த ராஜாக்களையும் இடைவிடாமல் தெய்வத்தை வணங்கிவந்த பக்தர்களையும் பக்தியிலும் கலைகளிலும் சிறந்த சித்தர்களையும் (ரிஷிகள்) பற்றி விஸ்தாரமாகக் கேள்விப்படுவோம். தென்னிந்தியாவிற்குத் தென்பக்கத்திலுள்ள லெமூரியாவிலிருந்த ஜனங்களாகிய அவர்கள் இந்து மதத்திற்கும் தெய்வ வணக்கத்திற்கும் நாகரீகத்திற்கும் காரணமாயிருந்தார்களென்றும் இந்து மார்க்கம் அவர்களாலேயே வட நாட்டிற்குக் கொண்டுபோகப்பட்டதென்றும் பின் வரும் வசனங்களில் காணலாம். District Manual of Madura, Pt. III, Page 48. "Mr. Pope in his edition of the Abbe Dubois' work says that in South India numberless legends relating to devout worshippers of the Linga are current : that some of them are curious, and they are exclusively of southern origin. And Wilson states in his introduction to the catalogue that tradition uniformly points to an extension of Hinduism and civilization from the extreme south of the Penisula."
|