பக்கம் எண் :

38
கருணாமிர்தசாகரம்-முதல் புஸ்தகம்-முதல் பாகம்-இந்திய சங்கீத சரித்திரச் சுருக்கம்

"தென்னிந்தியாவில் லிங்கத்தைப் பூசித்தவர்களைப்பற்றிய கட்டுக் கதைகள் அநேகமுண்டு. அவைகளில் அநேகம் விநோதமாயும், தெற்கேயிருந்து உற்பத்தியானதாயும் தோற்றுகின்றன என்று போப் துரை Abbe Dubo's நூலின் பதிப்புரையில் கூறுகிறார். இந்து மதமும் நாகரீகமும் இந்தியாவின் தென்கோடியில் உற்பத்தியாகி வடக்கே கொண்டு போகப்பட்டது என்று பாரம்பரியங்கள் ஒன்று போலக் கூறுகின்றன என்று டாக்டர் உவில்சன் (Dr. Wilson) தமது நூலின் முகவுரையில் சொல்லுகிறார்."

மேலேகண்ட வாக்கியங்களையும், கிருஷ்ணபகவான் தம் ஜனங்களைத் துவாரகையிலிருந்து வடகிழக்கிலுள்ள இந்திரபிரஸ்தத்தில் ஜலப்பிரளயத்திற்குத் தப்பிப்போய்க் குடியேறும்படி அர்ச்சுனனுக்குச் சொன்னதையும், ஜலப்பிரளயத்தின் அழிவினின்று தப்பிய 300 சோழிய பிராமணர்களைப் பிராமணமதம் விருத்தியாகப் பரமசிவன் ஆவிடையார் கோயிலில் வைத்துக் காப்பாற்றியதையும் கவனிக்கையில், தெற்கிலிருந்து ஜனங்கள் வடக்கே போனார்களென்று சொல்லுவது ஒப்புக்கொள்ளக் கூடியதாயிருக்கிறது. அதோடுகூட, தென்னிந்தியாவின் முக்கியமான இடங்கள் ஒவ்வொன்றிலும் பிரமாண்டமான கோயில்கள் அற்புதமான கல்வேலைப் பாடுகளுள்ளவைகளாயும் பென்னம்பெரிய தேர்களுள்ளவைகளாயும் இருக்கவும் சிவக்ஷேத்திரங்களும் லிங்க ஸ்தாபனங்களும் ஏராளமாய் இருக்கவும் காண்கிறோம். வட இந்தியாவிலோ, அப்பேர்ப்பட்ட கோயில்களைக் காண்பது மிக அரிது. மேலும் தென்மதுரையிலுள்ளோர் விசேஷமாக சிவபக்தியிற் சிறந்தவர்களாயிருந்தார்களென்பது தெளிவாகத் தெரிகிறது. சிவபெருமானும் அவர் குமாரனாகிய முருகக்கடவுளும் விக்னேஸ்வரரும் தென்மதுரையிலுள்ளோர் கொண்டாடும் தேவர்களாயிருந்தார்கள். அழிந்துபோன லெமூரியா என்னும் பெரும் கண்டத்திலுள்ள தேசங்கள் யாவற்றிலும் சிவபக்தியே விசேஷித்திருந்ததாக நாம் காணலாம். சிவபெருமானும் முருகக் கடவுளும் தென்மதுரை ராஜ்யத்திற்கு மூலபுருஷர்களாயிருந்து அநேக சீர்திருத்தங்கள் செய்து முன்பின் 4,400 வருஷங்களாகவிருந்த முதற்சங்கத்தில் தலைமை வகித்துத் தமிழை ஆதரித்து வந்தவர்களாயுமிருந்தார்கள். அதினாலும் அவர்களிடத்தில் விளங்கிய தெய்வீகத்தினாலும் அவர்களிடத்தில் பக்திகொண்டு பென்னம் பெரியகோயில் கட்டி மூலஸ்தானத்தில் லிங்கஸ்தாபனம் செய்து தேர்கள் அமைத்து உற்சவங்கள் கொண்டாடினார்கள். கோயில்களில் உற்சவங்களும் தினபூஜையும் கிரமமாய் நடந்து வருவதற்கென்று மானிபங்களும் காணிக்கைகளும் கொடுத்து வந்திருக்கிறார்கள். உலகம் முடிந்தாலும் ஒழிந்து போகாதிருக்கும்படி உம்பளம் சம்பளங்களினால் ஊழியம் ஏற்படுத்தி ஒழுங்குபடுத்தியிருக்கிறார்கள். பகல் இரவாக 60 நாழிகையிலும் இன்னின்ன பூஜை இன்னின்ன அன்னபானாதிகளுடன் இன்னின்னாரால் நடத்தப்பட வேண்டுமென்று நியமம் செய்திருக்கிறார்கள். கோயில்களில் தெய்வ சந்நிதியில் ஆடுகிறவர்களும் பாடுகிறவர்களும் தங்களுக்குக் குறிக்கப்பட்ட காலங்களில் தங்கள் பணிவிடைகளைச் செய்வார்கள், தெய்வ பக்தியுள்ள ஒவ்வொருவரும் தங்கள் கைகளில் காணிக்கைகளை எடுத்துக்கொண்டு தங்களுக்கு அவகாசமான எந்த நேரத்திலும் போய் சுவாமி தரிசனஞ் செய்வார்கள். கோயிலுக்கு வேண்டிய புஷ்பங்கள் தரும் நந்தவனங்களை வைத்து வளர்ப்பது, அதிலிருந்து அதிகாலையில் புஷ்பங்கள் எடுத்துக் கொடுப்பது, கோயில் பிராகாரங்களைச் சுத்தஞ் செய்வது, விளக்குப் போடுவது முதலிய கைங்கரியங்களை மிக உற்சாகத்தோடு செய்வார்கள். தெய்வ சந்நிதியில் தேவாரம் திருவாசகம் போன்ற பண்களினால் மன முருகப்பாடி தெய்வத்தை ஆராதிப்பார்கள். ஐம்புலன்களையுமடக்கி, பகவானுடைய சந்நிதியில் நிஷ்டையிருந்து தியானிப்பார்கள். இராகாதி தீக் குணங்களுக்கு இருப்பிடமாகிய உடலை வருத்தும் விரதங்கள் அனுஷ்டிப்பார்கள். இன்னும் நினைத்தற்கும் சொல்லுதற்கு முடியாத அநேகவிதமான ஆராதனைகளாலும் காணிக்கைகளாலும் ஆடல் பாடல்களாலும் ஆலயம் எப்பொழுதும் நிறைந்திருக்கும். இதை ஆலவாய் என்னும் உத்தரமதுரையின் ஆலயத்திலே அம்மன் சந்நிதியிலே அரை நாழிகை காத்திருந்து