"வடஇந்தியாவின் நாகரீகமானது, தெற்கே தமிழ் நாடுமட்டும் வந்தபோது, எழுத்து, பாஷை முதலிய நாகரீகத்துக்குரிய சின்னங்கள் தென்னாட்டு ஜனங்களுக்குள் முன்னமேயிருக்கக் கண்டது. இதினால் தான் சமஸ்கிருத பாஷையானது தமிழ்ப் பாஷையில் எவ்வித மாறுதலையும் உண்டாக்கமுடியாமல், ஒரு அன்னிய பாஷையாகவே இருந்துவருகிறது." மேற்கண்ட வரிகளைக் கவனிக்கையில், வடதேசத்திலிருந்து வந்த ஆரியரைப் போலவே அப்போதிருந்த தமிழ்மக்களும் நாகரீகத்திலும் கல்வியிலும் சிறந்தவர்களாயிருந்தார்கள்; தாங்கள் போகுமிடங்களில் தங்கள் பாஷையின் நலங்காட்டி அங்குள்ள பாஷையில் பல மாறுதல்களையுண்டாக்கினது போல தமிழ்மொழியை மாற்ற அவர்களால் இயலாமல் போயிற்றென்று தெளிவாகத் தெரிகிறது. மிகத் தொன்மையான தமிழ்மொழிக்குத் திராவிடமென்றும் அதைச் சேர்ந்த பாஷைகள் பேசும் தேசத்துக்குத் திராவிடதேசமென்றும் ஜனங்களுக்குத் திராவிடரென்றும் ஆரியர்கள் பெயர் வைத்தார்கள். தமிழென்ற பதத்தைச் சிறந்ததாக எண்ணும் தங்கள் பாஷையில் எழுதிக் கொள்ளத் திறமையில்லாமல் அதற்கு முற்றிலும் சம்பந்தமில்லாத வேறொரு பெயரைக் கொண்டு அழைக்கப் புகுந்தார்கள் என்பதைப் பின்வரும் வசனங்களில் காண்க. சிங்காரவேலு முதலியார் எழுதிய அபிதான சிந்தாமணி. பக்கம். 489. "தமிழ்நாட்டரசர் மூவரும் சூர்யசந்திர வம்சத்திலிருந்து பிரிந்தவர்கள்; இவர்கள் துவாபரயுகத்திற்கு முன்பும் அரசாண்டதாகத் தெரிகிறது. ஒரு பாண்டியன் பாரத யுத்தத்தில் பாண்டவர்களின் சேனைக்கு அன்னமிட்டதாகத் தெரிகிறது. இவன் தமிழ்ப் புலவரை ஆதரித்தவன். * * * *பின்னுமிவ்வரிய பாஷை மற்றைப் பாஷைகள்போல் வேறு பாஷைகளின் துணைவலி பெறாது தானாய் விளங்கும் ஏற்றமுற்றது; இதனை அறிவுள்ளோர் பலர் பழைய நூல்களிற் கண்டறியலாம். ஆயின் தமிழ் என்பது திராவிடம் என்பதின்றிரிபன்றோவெனின் திரிபாகாது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மகாராஷ்டரம், கூர்ச்சரம் இவைகளையுந் திராவிடமென்பவாகலின் இதற்கேயுரியதாகாது. ஆயினும் அப்பெயர் கூறவந்த வடநூலார் அக்காலத்திற்கு முன்றானே தோன்றிய பாஷைக்குத் தாங்கள் பெயரறியாது அந்நாட்டில் தாங்கள் வந்த காலத்து இட்ட பெயராகவுமிருத்தலின் இது வடமொழிக்குப் பிந்தியதாகாது. வடமொழி வடநாட்டிலிருந்ததுபோல் தென்மொழி தென்னாட்டிலிருந்தது. இதனால் தமிழ்ப் பாஷை தனித்த பூர்வ பாஷையென்பது கொள்ளக்கிடந்தது." தமிழ்மொழியென்று சொல்லவுங்கூட வெறுத்த ஆரியர், திராவிட பாஷையென்று பெயர் வைத்தார். தமிழ் என்ற பதம் சமஸ்கிருத பாஷையினின்றே யுண்டானதென்று மற்றவர் எண்ணும்படி திராவிடம் என்ற வார்த்தை, ட, வுக்கு ள, வரலாம் என்ற விதிப்படி திராமிளம் என்று வந்ததாகவும், திராமிளம் என்ற வார்த்தை இரண்டாம் எழுத்துக் குறுகித் திரமிளம் என்று வந்ததாகவும், அதன்பின் இரண்டாம் எழுத்துக் கெட்டுத் தமிளம் என்று ஆனதாகவும், தமிளம்தானே அம் கெட்டு தமிழ் என்று வந்ததாகவும் சொல்லுகிறார்கள். எப்படியானாலும் ஆகட்டும். வி அதாவது வகர இகரத்தின் கெதி என்னவாயிற்று? அதற்கும் ஒரு நியாயம் சொன்னால் நன்றாயிருக்கும். அதற்கும் மகர இகரத்திற்கும் என்ன சம்பந்தம்? இப்படியே தலையைச் சுற்றி மூக்கைத் தொடுகிறவன் கதைபோல சொல்லக் கூடியதாயிருப்பதினால் அல்லவோ சொற்ப வரிகளுக்கும் அர்த்தந்தெரியாமல் எளியநடையிலுள்ள சாரங்கதேவர் எழுதிய சங்கீதரத்னாகரத்தின் ஒரு சுலோகத்திற்கு 20 விதமாய் அர்த்தஞ்செய்தும், உண்மையறியாமல் போனார்கள். எழுத்துஎழுத்தாய் அர்த்தஞ்செய்வதை நாம் கவனித்தால் எல்லாம் பிரமம் என்று தெரிந்து கொண்டவன் மௌனம் சாதித்தது போலாகுமே யொழிய வாய்திறக்க முடியாது என்பது தெளிவாய்த் தெரிகிறது. சமஸ்கிருதம் உயர்ந்த பாஷையென்றும் அரிய விஷயங்கள் அதில் எழுதப் பட்டிருக்கின்றனவென்றும் நாம் ஒப்புக் கொண்டாலும் பேச்சுப்பழக்கத்திற்கு வராத பாஷையென்றே சொல்லவேண்டியதாயிருக்கிறது.
|