பக்கம் எண் :

43
தமிழில் சமஸ்கிருதம் கலந்த வரலாறு.

"புராணங்களில் சொல்லப்பட்டிருக்கிற அட்டவணைப் பெயர்களெல்லாம் சமஸ்கிருதப் பெயர்களாயிருந்த போதிலும் அவைகளெல்லாம் புஸ்தகப் பெயர்களேயொழிய உண்மையான பெயர்களல்ல. ஆரியரான பிரயாணிகளும் புதுக்குடியேறுவோர்களும் தாங்கள் கண்டதாக அல்லது கேள்விப்பட்டதாகச் சொல்லும் தேசங்களின் பெயர்களெல்லாம் ஆரிய வித்வான்களால் தப்பாமல் சமஸ்கிருதத்தில் மொழி பெயர்க்கப்பட்டன. இந்து தேசத்தின் பழமையான நூல்களிலெல்லாம் சமஸ்கிருதப் பெயர்களே காணப்படுவதால் அந்தத் தேசம் ஆரியரால் குடியேறப்பெற்ற தேசமென்றும் அதில் சொல்லியிருக்கும் இடங்களெல்லாம் ஆரியரால் ஸ்தாபிக்கப்பட்டவை யென்றும் நினைப்பது மிகவும் சாதாரணமான தப்பாயிருக்கிறது. உண்மை என்னவென்றால், இந்தியாவுக்கு வந்த ஆரியர்தான் இந்திய நூல்கள் சமஸ்தத்தையும் எழுதினவர்களானதால் அங்கங்குள்ள இடப்பெயர்கள் சமஸ்கிருதத்தில் மாத்திரம் இருக்கும்படியாயிற்று. இந்தப் பெயர்களை வைத்துக்கொண்டு ஆரியர் குடியேறின நாடுகளைப்பற்றி இப்படியாவது அப்படியாவது யாதொன்றை ஸ்தாபிக்க முயலுவது தப்பு. ஆனால் பிந்திய காலங்களில் ஆரியருக்குண்டான செல்வாக்கினால்தான் தென்னிந்தியாவில்கூடத் தற்காலம் வழங்கிவரும் இடப்பெயர்கள் எல்லாம் சமஸ்கிருதத்தில் இருக்கின்றன. பின் சொல்லப்போகும் விஷயத்தினால், சமஸ்கிருதம் போலவே கிரேக்க நூல்களும் இந்தியபேர்களை கிரேக்கப் பேர்கள்போல மாற்றிச் சொல்வதினால் அவைகள் இந்திய பேர்கள் என்ற உருவே தெரியாமல் போகின்றன என்ற சங்கதி வெளியாகும். ஆனாலும் ஆரியர் செய்தது போல கிரேக்கர் அவ்வளவு தூரம் இந்திய பேர்களைத் தங்களுடையவைபோல் மாற்றிக் கொள்ளவில்லை."

மேற்கண்ட வசனங்களைக் கவனிக்கையில் தமிழ் மொழிகள் ஆரியரால் சமஸ்கிருதத்தில் மாற்றப்பட்டுப் புராணங்களில் எழுதப்பட்டதாகவும் தாங்கள் கட்டாத பட்டணத்திற்குங் குடியிராத வீட்டுக்கும் சமஸ்கிருதப் பெயர் வைத்துக் கேள்விப்பட்டதை மாத்திரங்கொண்டு புராணக்கதைகள் கட்டுவதில் சிலர் தேர்ந்தவர்கள் என்பதாகவும் தெரிகிறது. தாங்கள் கேள்விப்பட்டதை மாத்திரமல்ல, உத்தேசமாய் நினைப்பதையும் உள்ளதுபோல் எழுதிவைக்கும் சாமர்த்தியம் ஆரியருக்குச் சுபாவமாகவே அமைந்திருக்கிறது. அவர்களிற் சிலர் நூதனமாய் உலகத்தில் ஒன்று உண்டானால், அதுவும் எங்கள் பழைய புராணங்களி லிருக்கிறதென்று சொல்லக் கூடிய விதமாய் கற்பனை செய்து வைப்பார்கள். இந்தக் கற்பனைகளுக்குள் இந்தியர்கள் கட்டுப்பட வழக்கப்பட்டுவிட்டார்கள். நூதனமாய் இந்தியாவில் பிரவேசித்த ஆரியர், இதன்முன் இந்தியாவில் வசித்த ஜனங்களையும் அவர்கள் பாஷையையும் அப்பாஷையிலுள்ள நூல்களையும் அங்குள்ள ராஜாக்கள் பெரியோர்களின் சரித்திரங்களையும் முற்றிலும் மறைத்து, தங்கள் பாஷையையும் தங்கள் நூலையும் தங்கள் பெரியயோரையுமே சொல்ல ஆரம்பித்தார்கள். இந்தியாவிற்கு வந்த கிரேக்கர்கள் இந்தியாவிலுள்ள சில பெயர்களைத் தங்கள் பாஷையில் மாற்றியபோது அவைகள் இந்தியபெயர்களென்று உருவே தெரியாமல் போயிற்றென்றும் அதைப் பார்க்கிலும் அதிகமாய் ஆரியர்கள் இந்திய பெயர்களைச் சமஸ்கிருதத்தில் மாற்றினார்களென்றும் சொல்லுகிறார். இந்தியா ஆரியராலேயே குடியேற்றப்பட்ட தேசமென்றும் அதிலுள்ள இடங்கள் எல்லாம் ஆரியரால் ஸ்தாபிக்கப்பட்டனவென்றும் நினைப்பது மிகவும் சாதாரணமான தப்பாயிருக்கிறதென்று மக்லீன் பண்டிதர் சொல்லுகிறது போலவே, சமஸ்கிருதத்திலிருந்து தமிழ் உண்டானதென்றும், சமஸ்கிருத வார்த்தைகள் கலவாமல் தமிழ்ப் பாஷை வழங்கு முடியாதென்றும் சொல்வதும் தப்பென்று சொல்ல வேண்டியதாயிருக்கிறது. முதல் ஊழியில் முதல் தமிழ்ச்சங்கமும் அச்சங்கத்திற்குரிய நூல்களும் அத்தேசமும் அழிந்து போனபின் அதில் தொல்காப்பியம் ஒன்றே மிஞ்சினதாகக் காணப்படுகிறது. அதன்பின் இடைச்சங்கத்தார் காலத்து உண்டாகிய பல நூல்களும் இரண்டாவது ஊழியில் அழிந்துபோயின. அவற்றில் மிஞ்சியிருந்த சில நூல்களும் சமஸ்கிருத மொழி கலப்பாலும் சமஸ்கிருதத்திலிருந்து வந்ததென்று சொல்லும் வசனத்தாலும் கறைப்படுத்தப் பட்டிருக்கின்றன வென்று பின்வரும் வசனங்களில் தெரிகிறது.