பக்கம் எண் :

44
கருணாமிர்தசாகரம்-முதல் புஸ்தகம்-முதல் பாகம்-இந்திய சங்கீத சரித்திரச் சுருக்கம்

தமிழ்ப் பண்டிதர் சூரியநாராயண சாஸ்திரியார் B.A., எழுதிய தமிழ் மொழியின் வரலாறு, பக்கம் 14, 15.

"வடமொழியாளர் தமிழர்களது ஒழுக்கவழக்கங்களை யுணர்ந்து அவற்றிற்கேற்ப வடமொழியில் நூல்கள் வகுப்பான் புகுந்தனர். அவர்களெல்லாம் ஆன்ம நூற்பயிற்சி மிக்குடையாராயும், கலை யுணர்ச்சி சான்றவராயு மிருந்தமைபற்றித் தமிழரது திவ்விய ஸ்தலங்களுக்குப் புராணங்கள் வகுத்தனர்; தமிழர்களிடத்தில்லாதிருந்த 'அந்தணர், அரசர், வணிகர், வேளாளர்' என்ற நால்வகைச்சாதி முறையை மெல்ல மெல்ல நாட்டிவிட்டனர்.

'முற்படைப்பதனில் வேறாகிய முறைமைபோல்
நால்வகைச் சாதியிந் நாட்டினீர் நாட்டினீர்.'

என்று ஆரியரை நோக்கி முழங்குங் கபிலரகவலையுங் காண்க. இன்னும் அவர் தம் புந்திநலங் காட்டித் தமிழரசர்களிடம் அமைச்சர்களெனவும் மேலதிகாரப் பிரபுக்களெனவும் அமைந்து கொண்டனர்; தமிழரிடத்திருந்த பல அரிய விஷயங்களையும் மொழிபெயர்த்துத் தமிழர் அறியுமுன்னரே அவற்றைத் தாமறிந்தன போலவும் வடமொழியினின்றுமே தமிழிற்கு அவை வந்தனபோலவும் காட்டினார். * * * * * * *தாங்கள் செல்லுமிடங்களுக்குத் தக்கபடி புதிய புதிய இலிபிகள் ஏற்படுத்திக் கொள்ளுமியல்புடைய ஆரியர் தமிழ்நாட்டிற்கேற்றபடி, தமிழிலிபியை யொட்டிக் 'கிரந்தம்' என்னும் பெயரிற் புதுவதோர் இலிபி வகுத்தனர்; தமிழரை வசீகரிக்குமாறு அவ்விலிபியிற் பல நூல்கள் வரைந்தனர். தமிழ்ப்புலவராவார் எதற்கும் அசையாது தங்கள் தமிழ்மொழியின் போக்கையே தழுவிச் செல்வராயினார்."

மேற்காட்டிய வசனங்களைக் கவனிக்கையில் சமஸ்கிருத பாஷையிலேயே மிகுந்த பற்றுள்ள ஒரு ஆரியர் சொல்வதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டியதாயிருக்கிறது. தமிழரிடத்திருந்த பல அரிய விஷயங்களையும் மொழி பெயர்த்து தமிழர் அறியுமுன்னமே அவற்றைத் தாம் அறிந்தன போலவும் வடமொழியினின்றுமே தமிழிற்கு அவை வந்தன போலவும் காட்டினாரென்று சொல்வதை நாம் கவனிக்கையில், தமிழிலுள்ள பல நூல்கள் வடமொழியில் மாற்றப்பட்டதாகவும் தற்காலம் வழங்கும் தமிழ நூல்களில் சமஸ்கிருதத்திற்குப் பின்னே இவைகளுண்டானவையென்று தோன்றும்படி சில தித்துப்பாடுகள் அங்கங்கே செய்ததாகவும் நினைக்க இடந்தருகிறது. வடமொழிச் சம்பந்தமுள்ள சில பேரகத்தியச் சூத்திரங்களும், தொல்காப்பியச் சூத்திரங்களும், சில வைத்திய, வாத, யோக, ஞான, சோதிட நூல்களும் சில தித்துப்பாடுகளை யுடையனவாயிருக்கின்றனவென்று சொல்லத்தக்கதாக அங்கங்கே சில வார்த்தைகளும் சூத்திரங்களும் காணப்படுகின்றன. அகத்தியருடைய மாணாக்கரில் ஒருவராகிய கழாரம்பர் இயற்றியதாக வெளிவந்திருக்கும் பேரிசைச் சூத்திரம் என்னும் நூலை நாம் கவனிப்போமானால், இவ்வுண்மை நன்கு புலப்படும். அப்புஸ்தகத்தில் முதலாவது ஒலி வடிவாயிருந்த காலமென்றும் இரண்டாவது அட்சர காலமென்றும் எட்டாவது அதமகாலமென்றும் ஒன்பதாவது திருவிளையாடற் காலமென்றும் பத்தாவது தற்காலமென்றும் சொல்லுகிறார். இவ்வொழுங்கைச் சுமார் 34 வருஷங்களுக்கு முன் வீரசோழியத்திற்கு பதிப்புரை எழுதிய சி. வை. தாமோதரம்பிள்ளை அவர்கள் வசனங்களில் காண்கிறோம். ஆகையால் விசு வருஷத்திற்கு பின்னே இப்பேரிசைச் சூத்திரம் புதிதாக எழுதப் பட்டிருக்க வேண்டும். அதிலும் ஐந்தாவது அநாதாரகாலமென்று தாமோதரம்பிள்ளை அவர்கள் சொன்னதை மாற்றி

"சித்தெலா நிறைந்து சித்தா யமர்ந்த
தேசிகர் மரபில் சிறந்து விளங்கும்
மடாதி பதிகளா மாண்பமை ஞானியர்
அளவிற் படுவதவ் வதீன காலம்."