என்னும் சூத்திரம் ஐந்தவதாக எழுதப்பட்டிருக்கிறது. இவைகளை நாம் கவனிக்கையில், அகத்தியருடைய மாணாக்கர் பன்னிருவருள் கழாரம்பர் எழுதியிருக்க மாட்டாரென்று திட்டமாய்த் தெரிகிறது. தமிழ் நடையும் அதை ருசுப்படுத்துகிறது. மேலும் அகத்தியர் காலத்திலிருந்த கழாரம்பர் தற்காலம் வரைக்கும் தமிழ்ப்பாஷையின் காலவர்த்தமானத்தை எப்படிச் சொன்னார்? அப்படிச் சொன்னது உண்மையானால் தற்காலத்துக்கு மேல்வரும் பிற்காலத் தைப்பற்றி் ஏன் யாதொன்றும் சொல்லவில்லை? இது சமஸ்கிருதத்தில் பேரபிமானமுள்ள ஒருவர் கற்பனையே என்போம். இது போலவே பேரகத்திய சூத்திரங்களிலும் தொல்காப்பியச் சூத்திரங்களிலும் தமிழ் வடமொழிக்குப் பிந்தியதென்று காட்டும்படி செய்திருக்கும் சில எழுத்து மாறுதல்களையும் வார்த்தை மாறுதல்களையும் சூத்திர மாறுதல்களையும் இது முதற்கொண்டாவது தமிழ் மக்கள் ஊன்றிப் பார்ப்பார்களாக. இப்படியே தமிழில் வழங்கிய சங்கீதநூலும் அதாவது இசைத்தமிழும் ஆதியில் சமஸ்கிருதத்திலிருந்தே தமிழருக்கு வந்ததென்று யாவரும் எண்ணும் படியாகிவிட்டது. ஆனால் சமஸ்கிருத நூல்களில் வழங்கிவரும் சங்கீத முறைக்கும் தென்னாட்டில் வழங்கும் கர்நாடக சங்கீத முறைக்கும் மிகுந்த வித்தியாசமிருக்கிறதென்று அறிவாளிகள் காண்பார்கள். வடபாஷையில் எழுதப்பட்ட கருதி முறைகளுள்ள கானம் தென்னாட்டில் வழங்காமல் போனாலும் வடபாஷையிலுள்ள பெயர்களே சங்கீதத்தில் வழங்கி வருகின்றன. இவ்விபரம் யாவும் இதன்பின் பார்ப்போம். மேலும் கடைச்சங்க காலத்தில் தோன்றிய ஜைனராலும் ஆரியராலும் சமஸ்கிருத வார்த்தைகள் தமிழ் மொழியோடு கலக்க ஆரம்பித்ததென்றும் தமிழ்மொழிகள் மற்றப் பாஷைகளோடு கலந்ததென்றும் பின்வரும் வசனங்களால் தெரிகிறது. Manual of the Administration of the Madras Presidency. Vol. I, P (41-42.) "The greater number of the Sanskrit and Pracrita words in the Dravidian languages were introduced by the Jaina writers. Some tatsamas, however, were introduced by the three comparatively modern philosopic schools : the Sheiva Siddhaunta, the school of Sankaracharya and the the school of Ramanoojacharya. Sanskrit words are said to have been introduced even before the time of the Jains, but it is doubtful whether these are not ancient words common to both Aryan and Dravidian languages." "திராவிடபாஷைகளில் வரும் சமஸ்கிருத பிராகிருத வார்த்தைகளில் மிகுதியானவை ஜைன வித்துவான்களால் முதல் முதல் திராவிட பாஷைகளில் உபயோகிக்கப்பட்டன. ஆனாலும் சில தற்சமங்கள் சிறிது காலங்களுக்கு முன்னேற்படுத்தப்பட்ட சைவசித்தாந்தம் சங்கராசாரியம் ராமானுஜாசாரியம் என்ற, மூன்று சமயவாதிகளாலும் முதல் முதல் இப்பாஷைகளில் உபயோகிக்கப்பட்டன. ஜைனருடைய காலத்துக்கு முன்னேயே சமஸ்கிருத வார்த்தைகள் உபயோகிக்கப்பட்டு வந்ததாகச் சொல்லப்படுகின்றது. ஆனால் அவைகள் ஆரிய திராவிட பாஷைகளுக்குப் பொதுவான வார்த்தைகளாயிருக்கப்படாதோ என்று சந்தேகிக்க இடமிருக்கிறது." இதில், அக்காலத்தில் வழங்கிவந்த சில மொழிகள் ஆரிய திராவிட பாஷைகளுக்குப் பொதுவான வார்த்தைகளாயிருக்கப் படாதோவென்று சந்தேகிக்க இடமிருக்கிறதென்கிறார். சமஸ்கிருத பாஷையில் மிகுந்த வைராக்கியமுள்ள ஆரியர் தாங்கள் செல்லுமிடங்களிலுள்ள பாஷைகளில் வழங்கும் வார்த்தைகளையும் கருத்துக்களையும் புதிது புதிதாக அமைத்து நூல் உண்டாக்கினார்கள். ஆகையினால் தமிழ்மொழிகளும் சமஸ்கிருதத்தில் பல சேர்க்கப்பட்டதென்று தெளிவாகத் தெரிகிறது. சமஸ்கிருத பாஷையோடு சேர்ந்து பூர்வ சுலோகங்களில் அமைந்தபின் அவ்வார்த்தைகள் இரண்டுக்கும் பொதுவாயிருக்கலாமோவென்று சந்தேகிக்க இடந்தருவது கால இயல்புதானே. இரவல் வாங்கினதைத் திரும்பக் கொடுக்கக்கூடாதென்ற எண்ணம் வந்தபின் அதை இனந்தெரியாமல் பண்ணுவது உலக இயற்கைதானே. 'இரவல் உடைமை, எனக் கிசைவா
|