பக்கம் எண் :

48
கருணாமிர்தசாகரம்-முதல் புஸ்தகம்-முதல் பாகம்-இந்திய சங்கீத சரித்திரச் சுருக்கம்

Manual of the Administration of the Madras Presidency, Vol. I, P (56.)

"Tamul literature is the oldest among the Dravidian languages. To the sage Agastiya (of unknown date) are attributed not only the formation of the alphabet and first treatise upon grammar, but also a number of treatises on various sciences. But nothing authentic survives from such an ancient time. The oldest extant Tamul grammar is called the 'Tolgauppiam' that is to say 'The ancient book': Such a work must have been preceded by centuries of literary culture as it lays down rules for different kinds of poetical compositions, deduced from examples furnished by the best authors whose works were then in existence. Its date cannot, however, be fixed."

"திராவிட பாஷைகளில் எழுதப்பட்ட நூல்களில் அதிகப் பழமையானவை தமிழ்ப்பாஷையில் உள்ளவை. அறியமுடியாத அதிபூர்வகாலத்திருந்த அகத்தியமுனி, தமிழுக்கு நெடுங்கணக்கு ஏற்படுத்தி, முதல் இலக்கண நூலையும் வைத்தியம், சோதிடம், ஞானம் முதலிய பல சாஸ்திர நூல்களையும் எழுதினதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் அவ்வளவு பழமையான காலத்திலிருந்து நிச்சயமான யாதொன்றும் நமக்கு கிடைக்கவில்லை. இப்போதிருக்கிற பழமையான தமிழ் இலக்கண நூலுக்குத் "தொல்காப்பியம்" (அல்லது ஆதி புஸ்தகம்) என்று பெயர். ஆனால் அந்தப் புஸ்தகத்தில் பலவகைப்பாக்கள் இயற்றுவதற்கு வேண்டிய பலவிதிகள் நுட்பமாய்ச் சொல்லப்பட்டிருப்பதால் அது எழுதப்பட்ட காலத்துக்கு அதி முன்னேயே ஜனங்கள் நூல் எழுதுவதில் அதிக நாகரீமடைந்திருக்க வேண்டுமென்பது வெளியாகிறது. யாப்பியலுக்கு வேண்டிய விதிகளுக்கு உதாரணங்கள் அக்காலத்துக்கு முன்னுள்ள வித்வான்களின் நூல்களிலிருந்து எடுக்கப்பட்டிருக்கின்றன. ஆகிலும் தொல்காப்பியம் எழுதப்பட்ட காலத்தை நிச்சயிக்க முடியாது."

மேற்கண்ட வாக்கியங்களைக் கவனிக்கையில், தமிழ்ப்பாஷைக்கு எழுத்துக்கள் அமைத்து இலக்கணம் வகுத்து இலக்கியம் செய்தவர் அகஸ்தியரென்று சொல்லுகிறார்கள். அவரிருந்த காலம் தெரியவில்லை. ஆனால் தொல்காப்பியர் காலத்திற்கு முன்னாலேயே அநேக வித்வான்களிருந்திருப்பதாகத் தெரிகிறதென்கிறார். அகத்தியர் காலத்திற்கு முன்பே தமிழ்ப் பாஷையிருந்ததென்றும் அவர்கள் தமிழ்ப்பாஷையில் சிறந்த நூல்கள் செய்திருந்தார்களென்றும் அகத்தியர் தாமே சொல்லியிருக்கிறார். அது பின்வரும் சூத்திரங்களால் தெரிகிறது.

பேரகத்தியம்.

"இலக்கண மென்பதிலக்கிய முறையுற
வைத்ததென்று வழங்கப்படுமே."

"இலக்கிய மின்றி யிலக்கணமின்றே
எள்ளின்றாகி லெண்ணெயுமின்றே
எள்ளினின்றெண்ணெயெடுப்பதுபோல
இலக்கியத்தினின்றெடுபடு மிலக்கணம்."

இதினால் அகத்தியருக்கு முன்னாலேயே தமிழ் மிகத் தேர்ச்சி பெற்றிருந்ததென்று தெளிவாகத் தெரிகிறது. திருவிளையாடற்புராணமும் இதனை வலியுறுத்துகிறது. அக்காலத்திருந்த தமிழின் தேர்ச்சிக்குத் தகுந்தபடி இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழுக்கும் இலக்கணம் வகுத்தாரென்று தோன்றுகிறது.

"வடவேங்கடந் தென்குமரியாயிடைத்
தமிழ்கூறு நல்லுலகத்து
வழக்குஞ் செய்யுளுமாயிருமுதலின்
எழுத்துஞ் சொல்லும் பொருளுநாடிச்
செந்தமிழியற்கை சிவணியநிலத்தொடு
முந்துநூல்கண்டு முறைப்படவெண்ணிப்
புலந்தொகுத்தோனே. - - - - - - "