It differs in its numerals, in many nouns, verbs, and adverbs, and in technical terms in grammar. In the declension of its nouns, the conjugation of its verbs, and the arrangement of itssentences, it more resembles the Latin." "சிலர் நினைக்கிறபடி, இந்தியாவில் வழங்கிவரும் அநேக சுதேச பாஷைகளைப்போல் தமிழ்ப்பாஷை சமஸ்கிருதத்திலிருந்து உண்டானதல்ல. அதின் அக்ஷரம் வடிவத்தில் மாத்திரமல்ல, ஓசையிலும் வித்தியாசப்படுகிறது. சுருக்கமாயுமிருக்கிறது. அதின் இலக்கணம். பாஷைப் போக்கு இடங்கொடுக்கிற மட்டுக்கும் சமஸ்கிருத பாஷையின் இலக்கணத்தை அனுசரித்துச் செய்யப்பட்டிருந்தாலும், பெரும் வித்தியாசமுடையதா கவேயிருந்தது. a, an, the என்னும் (articles) போன்ற குறிப்பிடைச் சொற்களாவது பிரதிப் பெயர்ச் சொற்களாவது துவிவசனம் என்னும் இருமைகாட்டும் சொற்களாவது அதில் கிடையாது. எண்ணுச்சொற்களிலும், அநேக பெயர்ச்சொற்களிலும், வினைச்சொற்களிலும், வினையுரிச் சொற்களிலும், இலக்கண பரிபாஷைச் சொற்களிலும் வித்தியாசமுடையதாயிருக்கிறது. பெயர்ச்சொற்கள் வினைச்சொற்களின் ரூப பேதங்களிலும், வாக்கிய அமைப்பிலும் அது லத்தீன் பாஷையை ஒத்திருக்கிறது." மேற்கண்ட வசனங்களில், சமஸ்கிருத பாஷையையும் தமிழ்ப் பாஷையையும் இலக்கணத்தில் ஒப்பிட்டுக் காட்டி தமிழ் லத்தீன் பாஷைக்கு ஒத்திருக்கிறதென்றும் அதன் சொற்களும் எழுத்துக்களும் சுருக்கமானவையென்றும் ஓசையிலும் வடிவத்திலும் சமஸ்கிருதத்திற்கு வித்தியாசமானவையென்றும் சொல்லுகிறார். சிறு குழந்தையின் வாயினால் சொல்வதற்கேற்ற மதளைச் சொற்களும், தேர்ந்த வித்வான்கள் சொல்லத் தகுந்த உயர்ந்த வார்த்தைகளும் சாதாரண ஜனங்கள் தங்கள் கருத்தை பிறருக்குத் தெரிவிக்கப் போதுமான எளிதான வார்த்தைகளுமுடையது தமிழ்ப்பாஷையே. யாவரும் மிகச் சுலபமாய் உச்சரிக்கவும் உச்சரித்ததின்படி எழுதவும் எழுதிய எழுத்துக்கள் யாவும் திரும்ப உச்சரிக்கக்கூடியதாகவும் விளங்கி நிற்பது தமிழே. சமஸ்கிருத பாஷையின் வார்த்தைகள் கலவாமல் தமிழ் தனியாய் பேசப்படக்கூடிய பாஷையென்று அடியில் வரும் வசனங்களில் காணலாம். Preface to Winslow's Dictionary. "It is evident that there was an early literature in Tamil independent of Sanskrit; it is certain that Tamil could do without Sanskrit much better than English without Latin. * * * * * * * * * * * * The reason why Tamil is more independent of Sanskrit than the Northern Languages, and even than the other Dravidian tongues, is, that it has not been left, like those, principally to the cultivation of the Brahmans." "பூர்வதமிழ் நூல்கள் சமஸ்கிருதக் கலப்பில்லாமலிருக்கின்றன. லத்தீன் கலவாமல் இங்கிலீஷை எழுதக்கூடியதைப் பார்க்கிலும் அதிக நன்றாய்ச் சமஸ்கிருதம் கலவாமல் தமிழ்ப் பாஷையை யெழுதலாம். * * * * * * * * * தமிழில் சமஸ்கிருத பாஷை அதிகமாய்க் கலவாதிருப்பதற்குக் காரணமென்னவென்றால் வடபாஷைகளைப் போலும், மற்றத் திராவிட பாஷைகளைப் போலும், பிராமண நூலாசிரியர்கள் அநேகர் தமிழ்ப் பாஷைக்கில்லாமற்போனதே." முதல் இரண்டு சங்கங்களிலுமிருந்த இசை நூல்களும் நாடக நூல்களும் அழிந்து குறைவுபட்ட காலத்தில் தென்னிந்தியாவின் சங்கீதத்தை பூரணமாய்க் கற்றும் அதற்குரிய சில நூல்கள் எழுதியும் தற்காலம் வரையும் நீடித்திருக்கும் நிலைக்குப் பெரும்பாலும் ஆரிய வித்வசிரோமணிகள் காரணமாயிருந்தார்களென்று சொல்லவும் நன்றிபாராட்டவும் தமிழ் மக்கள் மறந்து போகக்கூடாது.
|