6. தமிழ் பல சிறந்த கலைகளையுடைய பாஷை என்பது. தமிழ்ப்பாஷை மிக நேர்த்தியான பதங்களுடைய பாஷையென்றும், பூர்வீக நூல்களையும் புலவர்களையுமுடையதென்றும், பின்வரும் வசனத்தில் நாம் காண்போம். Preface to Winslow's Dictionary. "A native author of repute, well versed in English, as well as his own vernacular, has said, adopting the words of Mr. Taylor before mentioned 'it is one of the most copious, refined, and polished languages spoken by man'. This author has added, what may admit of doubt, 'few nations on earth can perhaps boast of so many poets as the Tamils'. As, however, all their earlier literature was in poetry, even Dictioaries and Grammars, and works on Medicine, Law, Architecture and Theology, the number of poets, so called, must have been great." "ஆங்கிலேய பாஷையைத் தீரக்கற்றவரும், தம்முடைய சுயபாஷையில் திறமை பெற்றவருமான ஓர் பேர்போன சுதேச நூலாசிரியர், மிஸ்டர் டேய்லர் சொல்வதற்கு ஒற்றுமையாக, மனிதர் பேசும் பாஷைகளுள் தமிழ்ப்பாஷை அநேக அபிப்பிராயங்களைத் தெரிவிக்கக்கூடியதும், மிக நேர்த்தியும் ஏராளமுமான சொற்களையுடையதுமான பாஷையென்று தெரிவிக்கிறார். பின்னும் அவர் தமிழ்ப் பாஷையில் தேர்ந்த புலவர்கள் ஏராளமாயிருப்பது போல் உலகத்தில் மற்ற எந்தப் பாஷையிலுமில்லை, என்று கூறுகிறார். அவர்களின் பூர்வீக காவியங்கள், அகராதிகள், இலக்கண நூல்கள், வைத்திய சாஸ்திரங்கள், சட்ட சாஸ்திரங்கள் சிற்ப சாஸ்திரங்கள், வேத சாஸ்திரங்கள் முதலானவைகளெல்லாம் செய்யுளிலேயேயிருப்பதால், அவைகளின் நூலாசிரியர்களாகிய புலவர்களும் ஏராளம். மேற்கண்ட வசனங்களைக் கவனிக்கையில், ஒரு பாஷைக்கும் ஒரு தேசத்துக்குமுரிய கலைகள் யாவும் தமிழிலிருந்ததாகக் காண்கிறோம். அறுபத்துநாலு கலைகளையும் ஒவ்வொன்றும் ஒரு திருவிளையாட்டாகப் பரமசிவன் நடத்திக்காட்டியது தமிழ் நாட்டிலல்லவோ, ஆகையினால் வேண்டும் கலைகள்யாவும் பூர்வ தமிழ் நாட்டிலிருந்தனவென்றும் பின் அழிந்து போயினவென்றும் நாம் நினைக்க வேண்டும். Preface to Winslow's Dictionary. "It is not perhaps extravagant to say, that, in its poetic form, the Tamil is more polished and exact than the Greek, and in both dialects, with its borrowed treasures, more copious than the Latin. In its fulness and power it more resembles English and German than any other living language. Its prose style is yet in a forming state, and will well repay the labor of accurate scholars in moulding it properly. Many natives who write poetry readily, cannot write a page of correct prose." "தமிழ்ப் பாஷையானது செய்யுள் நடையில் கிரேக்க பாஷையைப் பார்க்கிலும் அதிக பளபளப்பும் திருத்தமும் பொருந்தியதாய், கருத்துக்களை அதிகத் திட்டமாய்க் காட்டக்கூடியதாயிருக்கிறதென்று சொல்வது அதை மட்டுக்கு மிஞ்சிப்புகழ்வதாகாது. அது மற்றப் பாஷையிலிருந்து சேர்த்துக் கொண்ட மொழிகளுள்பட செய்யுள் நடையிலும் வாசக நடையிலும் அதற்கிருக்கும் மொழிகள் லத்தீன் மொழிகளைவிட அதிக ஏராளமாம். அதன் நிறைவிலும் பெலத்திலும் தற்காலத்திலிருக்கும் மற்றெந்தப் பாஷையையும் விட இங்கிலீஷ், ஜர்மன் பாஷைகளை ஒத்திருக்கிறது. அதற்கு வசன நடை படிப்படியாய் ஏற்பட்டுக்கொண்டு வருகிறது : அதைச் சரியான நடையில் ஒழுங்குபடுத்த முயலுகிறவர்கள் தங்கள் பிரயாசத்தின் பலனையடையாமற் போகமாட்டார்கள். சொன்னவுடனே கலியெழுதக்கூடிய அநேக தமிழர்கள் பிழையில்லாமல் வசனம் ஒரு பக்கங்கூட எழுத முடியாதவர்களாயிருக்கிறார்கள்."
|